சென்னை மனைவியை சேர்த்து வைக்கக்கோரி செல்போன் டவரில் ஏறி கணவர் போராட்டம்

 

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், கொங்கரப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் பாலமுருகன் (35). வல்லத்தில் ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு மாலதி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் பாலமுருகன் தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவரிடம் கோபித்துக் கொண்டு மாலதி, தனது தாய் வீடான சென்னைக்கு குழந்தைகளுடன் சென்றுவிட்டார். இதனிடையே 2 ஆண்டுகளாக மனைவி, குழந்தைகளை பிரிந்து வாழும் பாலமுருகன், மாமனார் வீட்டிலுள்ள தனது குடும்பத்தை மீட்டுத் தருமாறு செஞ்சி காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.

ஆனால் இது குடும்ப விவகாரம் என்பதால் மகளிர் காவல் நிலையம் செல்லுமாறு போலீசார் கூறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் மீட்டு தரக்கோரி வல்லத்தில் உள்ள 50 அடி உயர ஒரு தனியார் செல்போன் டவர் உச்சியின் மீது நேற்று திடீரென ஏறி தற்கொலை மிரட்டல் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் செஞ்சி காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறைக்கு உடனே தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் பாலமுருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர்.

ஆனால் அவர் கீழே இறங்க மறுத்து போராட்டத்தை தொடர்ந்த நிலையில், தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சுமார் 2 மணி நேரத்துக்குபின் பாலமுருகனை போலீசார் டவரில் இருந்து கீழே இறக்கினர். பின்னர் அவருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: