சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டில் 500க்கு 500 மார்க் பெற்ற மாணவி

 

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வுகள் முடிவுகள் கடந்த மே 13ம் தேதி வெளியானது. இதில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியை சேர்ந்த மாணவி அவ்னி கெஜ்ரிவால் 95.2 சதவீத மார்க் பெற்றிருந்தார். எதிர்பார்த்த மார்க் கிடைக்காததால் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்தார். அதன்படி மறுமதிப்பீட்டு முடிவுகள் வெளியானபோது, அவர் தேர்வு எழுதிய 5 பாடங்களிலுமே 100க்கு 100 மார்க் பெற்று, மொத்தமாக 500க்கு 500 என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவ்னி கூறுகையில், ‘நான் முதலில் எடுத்த மார்க்கை பார்த்து குடும்பத்தினர் திருப்தியடைந்தனர். ஆனால் எனக்கு உடன்பாடில்லை. சிபிஎஸ்இ இணையதளத்தில் மறுமதிப்பீட்டிற்கான பக்கம் எப்போது திறக்கும் என்று காத்திருந்து விண்ணப்பித்தேன். தற்போது 500க்கு 500 மார்க் கிடைத்துள்ளது. இது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது’ என்றார். மேலும் அவர் கூறுகையில், தினமும் இத்தனை மணி நேரம் படிக்க வேண்டும் என நினைக்க மாட்டேன். தினம் தினம் படித்து முடிக்க வேண்டியதை செய்து விடுவேன்.

சமூக ஊடகங்களை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள், கட்டுப்பாட்டுடன் பயன்படுத்த வேண்டும். அது தங்களின் படிப்பைப் பாதிக்காதவாறு பார்த்து கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் ஒரு சொந்த தொழிலை உருவாக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கேற்பவே எனது மேல்படிப்பை திட்டமிட உள்ளேன்,” என்றார். அவ்னியின் சாதனையை, அவர் படித்த டிபிஎஸ் ராஞ்சி பள்ளி கொண்டாடி வருகிறது.

Related Stories: