ஐதராபாத்: நடிகை சமந்தா நடிப்பில் கடந்த வாரம் ‘மா இண்டி பங்காரம்’ என்கிற தெலுங்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தது. தமிழில் இந்த படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் வெளியானது. இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கிய இப்படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படத்தின் ரிலீஸுக்கு பிந்தைய நிகழ்வு ஒன்றில் நடிகை சமந்தா கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் அந்த நிகழ்வின் புகைப்படங்கள் வைரலான பின்பு, சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இத்தகவலை தற்போது நடிகை சமந்தா உறுதிப்படுத்தியிருக்கிறார். நேற்று நடைபெற்ற ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் சக்சஸ் மீட்டில் இத்தகவலை அவர் பகிர்ந்து கொண்டார். அவர் பேசுகையில், \”இன்னும் ஒரு சிறிய இடைவெளி எடுக்க போகிறேன். அதன் பிறகு நான் மீண்டும் வந்துவிடுவேன். நான் இப்போது மகப்பேறு விடுப்பு எடுக்க வேண்டும். இந்த தருணத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார். சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிதிமொருவுக்கும் கடந்தாண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
