×

ஆரணி அருகே வாழ்வாதாரம் கேள்விக்குறியான பட்டு நெசவு பெண் தொழிலாளர்கள்: அரசு சலுகைகள் வழங்க கோரிக்கை

கண்ணமங்கலம்: மூலப்பொருள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி என்று பல்வேறு காரணங்களால் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி தவிக்கும் தங்களுக்கு அரசு சிறப்பு சலுகைகள் அளிக்க வேண்டும் என்று ஆரணி பட்டு நெசவு பெண் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டு என்றால் உடனே நினைவுக்கு வருவது காஞ்சிபுரம், ஆரணி. இந்த இரண்டு நகரங்களிலும் தயாராகும் பட்டுப்புடவைகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவை. சென்னை போன்ற நகரங்களில் உள்ள பெரிய ஜவுளி நிறுவனங்கள் இங்கிருந்து நேரிடையாக பட்டு புடவைகளை கொள்முதல் செய்து வாங்கி செல்கின்றனர்.
ஊருக்கே பட்டாடைகளை வழங்கி அழகு பார்க்கும் நெசவு தொழிலாளர்கள், கிழிந்த துணியுடன், அடுத்த வேளை உணவுக்கே போராடும் அவல நிலையில் இன்று தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது வெளியுலகம் அறியாத ஒன்று. இதில், ஒண்ணுபுரம், அத்திமலைப்பட்டு, புதுப்பாளையம், கொளத்தூர், துருவம், தேவாங்குபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான நெசவுத் தொழிலாளர்கள் பல தலைமுறைகளாக நெசவுத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் முழுநேர வாழ்வாதாரமாக இருப்பது நெசவுத்தொழில் மட்டுமே. இவர்களின் வீடுதோறும் கைத்தறி நெசவுக்கூடம் உள்ளது. இந்த வீடுகளில் பெரும்பாலும் வளைகரங்களே ஆண்களுக்கு நிகராக பட்டாடைகளை நெய்வதை காண முடியும்.

 ஒரு காலத்தில் நெசவுத்தொழிலில் செழிப்பாக இருந்த இவர்களின் வாழ்க்கை, பட்டு நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி, விசைத்தறிகளின் வருகை என பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகி, இன்று இவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகி விட்டது. கணவன் ஒருபக்கம் உழைத்தாலும், தனது உழைப்பையும் தந்தால்தான் குடும்பம் என்ற வண்டியை ஓட்ட முடியும். அத்தகைய சூழலில் சரியான ஆர்டர்கள் கிடைக்காதது இவர்களின் வாழ்வாதாரத்தை நிச்சயமற்றதாக்கியுள்ளது. இந்த நிலையில் அரசு கைத்தறி பட்டு நெசவை ஊக்குவிக்க ஆரணியில் ஏற்கனவே அறிவித்த ஜவுளிப்பூங்காவை அமைக்க வேண்டும். இதன் மூலம் பட்டு நெசவுக்கு புத்துயிர் அளிக்க முடியும். அத்துடன் பெண்களுக்கென தனியாக பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கங்களை தொடங்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஆரணி, ஒண்ணுபுரத்தை சேர்ந்த பெண் பட்டு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் மூலப்பொருளுக்கு வரி குறைப்பு, மருத்துவக்காப்பீடு, நெசவாளர் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, பசுமை வீடு திட்டம் என்று பல்வேறு நலத்திட்டங்களையும் வழங்க வேண்டும் என்றும் அவர்கள் அரசை கேட்டு வருகின்றனர். இது குறித்து ஒண்ணுபுரம் நெசவு தொழிலாளி பாலசுப்பிரமணியின் மனைவி புவனேஸ்வரி கூறுகையில், ‘முன்பு அரசு வேலைக்கு போக வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், ஆரம்ப காலத்தில் கணவருக்கு உதவியாக நெசவுத்தொழிலை செய்ய ஆரம்பித்த பின்,  வீட்டிலிருந்தே சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை உருவானது.அதனால் இன்று என்னால் தனியாக ஐந்து நாளைக்கு ஒரு புடவை நெய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. நான் மட்டுமல்ல, அனைத்து நெசவுக் குடும்பங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. அரசு எங்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தால் எங்களால் மேலும் சாதிக்க முடியும். பட்டு நூலுக்கு வரி குறைப்பு, மருத்துவ காப்பீடு, கல்வி உதவி, நெசவுத்தொழிலாளிகளுக்கான வழங்கப்படும் பசுமை வீடு திட்டத்தில், அவர்களின் ஓட்டு வீட்டின் மேற்கூரையை மட்டும் மாற்றியமைத்தால் போதுமானது. அதை அரசு செய்து தர வேண்டும். மேலும் பெண் பட்டு நெசவாளர்களுக்கான கூட்டுறவு சங்கங்களையும் அமைக்க வேண்டும். ஜவுளிப்பூங்காவை அறிவித்தபடி தொடங்க வேண்டும்’ என்று கூறினார்.


வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...