×
Saravana Stores

ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து காட்டிற்குள் வீசியது யார்?

*சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீஸ் விசாரணை

சேலம் : ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து காட்டிற்குள் வீசிச் சென்ற கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்காக மலைப்பாதையில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு செல்லும் சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் 40 அடி பாலம் அருகில் காட்டிற்குள் இருந்து நேற்று முன்தினம் துர்நாற்றம் வீசியது. இதனை ரோந்து பணியில் இருந்த வனக்காவலர் பெருமாள் என்பவர் கவனித்து, மாலைப்பாதையையொட்டிய காட்டிற்குள் இறங்கி பார்த்தார். அங்கு ஒரு சூட்கேஸ் கிடந்தது. அதனுள் இருந்து துர்நாற்றம் வீசியதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

உடனே வனத்துறை உயர் அதிகாரிகளுக்கும், ஏற்காடு போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். ஏற்காடு இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து பார்த்தனர். சூட்கேசிற்குள் இளம்பெண்ணின் சடலம் இருந்தது. மாவட்ட எஸ்பி அருண்கபிலன், சேலம் ரூரல் டிஎஸ்பி அமலாஅட்வின் ஆகியோரும் வந்து விசாரித்தனர். பின்னர், அந்த சடலத்தை கைப்பற்றினர். 20 முதல் 30 வயதிற்குள் இருக்கும் அந்த இளம்பெண்ணின் உடல் அழுகி காணப்பட்டது. சுடிதாருக்கான பேண்ட், ஜட்டி, பிரா மட்டும் அணிந்திருந்தார். அவரை கொலை செய்த மர்மநபர்கள், சடலத்தை சூட்கேசிற்குள் அடைத்து மலைப்பாதையில் காட்டிற்குள் வீசிச்சென்றது தெரியவந்தது.

இதுபற்றி ஏற்காடு டவுன் கிராம நிர்வாக அலுவலர் மோகன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில், ஏற்காடு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர். கொலையுண்ட பெண் யார்?, கொலை செய்து வீசியது யார்? என்பதை கண்டறிய டிஎஸ்பி அமலாஅட்வின், இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜ்மோகன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அத்தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

ஏற்காட்டிற்கு வெளியூரை சேர்ந்த இளம்பெண்ணை அழைத்து வந்து, உல்லாசமாக இருந்துவிட்டு கொலை செய்து வீசியிருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அதன்பேரில், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட சுற்றியுள்ள மாவட்டங்களில் இளம்பெண் மாயம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டு, யாரேனும் தேடப்பட்டு வருகின்றனரா? என போலீசார் விசாரிக்கின்றனர். இதற்காக அந்தந்த மாவட்டங்களில் மிஸ்சிங் வழக்கு பட்டியலை தனிப்படை போலீசார் கேட்டுள்ளனர்.

இக்கொலையில் ஈடுபட்ட மர்மநபர்கள், இளம்பெண் உடலை சூட்கேசில் அடைத்து வீசியிருப்பதால், எப்படியும் குறைந்தது 2 பேராவது சம்பந்தப்பட்டிருக்க வேண்டும் என போலீசார் கருதுகின்றனர். அதேபோல், பைக், ஆட்டோ, கார் ஆகிய ஏதேனும் ஒரு வாகனத்தில் ஏற்றி வந்து தான், காட்டிற்குள் சூட்கேசை வீசியிருக்க வேண்டும். அதனால், அந்த வாகனத்தை அடையாளம் கண்டுவிட்டால், குற்றவாளிகளை பிடித்து விடலாம் என்பதால் தனிப்படை போலீசார் அதற்கான விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இதற்காக ஏற்காடு மலையில் இருந்து இறங்கும் ஆரம்ப பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் இருக்கும் சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

அதேபோல், சேலம் அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலைப்பாதையில் ஏறும் இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த 15 நாட்களாக ஏற்காட்டிற்கு சென்ற வாகனங்களை பார்த்து, அதில் சந்தேகப்படும் வாகனம், பாதி வழியில் திரும்பிய வாகனம் என தீவிர ஆய்வை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இதனிடையே கொலையுண்ட இளம்பெண்ணின் உடலை நேற்று சேலம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பிரேதப்பரிசோதனை செய்தனர்.

அதில், உடல் அழுகி காணப்பட்டதால் காயங்கள் வெளியில் தெரியவில்லை. அதனால், சில பாகங்களை ரசாயன பரிசோதனைக்கு எடுத்து அனுப்பியுள்ளனர். எப்படியும் மிக விரைவில் இக்கொலையில் தொடர்புடையவர்களை அடையாளம் கண்டு கைது செய்துவிடுவோம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஏற்காடு மலைப்பாதையில் இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்து காட்டிற்குள் வீசியது யார்? appeared first on Dinakaran.

Tags : Yercaud mountain pass ,Salem ,
× RELATED ₹3 லட்சம் கடனுக்கு ₹40 லட்சம் கேட்டு...