×

5 ஆண்டுகளுக்கு பிறகு வால்பாறையில் கோடை விழா துவங்கியது

வால்பாறை : 5 ஆண்டுகளுக்கு பிறகு வால்பாறையில் கோடை விழா நேற்று துவங்கியது. பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா தலைமையில் துவங்கிய விழாவில், வால்பாறை நகராட்சி தலைவர் அழகு சுந்தர வள்ளி, ஆணையாளர் வெங்கடாசலம் ஆகியோர் விழா கொடி ஏற்றியும், ரிப்பன் வெட்டியும் வைத்தனர். வால்பாறையில் நேற்று முதல் 3 நாட்கள் கோடை விழா நடைபெறுகிறது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பிரம்மாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, வளாகம் முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அரங்கில் வனத்துறை, தோட்டக்கலை துறை, உணவு பாதுகாப்புத்துறை, முதலுதவி, டேன்டீ உள்ளிட்ட அரசுத்துறை விழிப்புணர்வு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. பள்ளி வளாகத்தின் பின்புறம் உணவு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. தோட்டக்கலைத்துறை அரங்கில் சுற்றுலா பயணிகள் செல்பி எடுக்க ஆர்வம் காட்டுகின்றனர். காய்கறி மற்றும் மலர் கொத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட இருவாச்சி பறவை, வரையாடு பார்வையாளர்களை கவர்கிறது. வனத்துறை அரங்கில் அமைக்கப்பட்ட சிறுத்தை மற்றும் புலியின் தோற்றங்கள் மிரள வைக்கிறது.

வால்பாறை படகு இல்லத்தில் 3 நாட்கள் இலவசமாக படகு சவாரி செய்ய நகராட்சி ஏற்பாடு செய்து உள்ளது. படகு சவாரியை பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும், வால்பாறை பூங்காவை 3 நாட்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர். நகராட்சி மைதானத்தில் பாரா செய்லிங் நிகழ்விலும் பொதுமக்கள் பங்கேற்று உள்ளனர். தொடர்ந்து 3 நாட்களும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் நடைபெற உள்ளது. இன்று வளர்ப்பு நாய்கள் போட்டி, உங்கள் மேடை நிகழ்ச்சியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொள்ளாச்சி சப்கலெக்டர் பிரியங்கா கூறுகையில், “வால்பாறையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வர் உத்தரவின்படி கலெக்டர், அமைச்சர் ஆலோசனைபடி கோடை விழா நடைபெறுகிறது. கடந்த 10 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டு மிகவும் சிறப்பாக நகராட்சி நிர்வாகத்தால் கோடை விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், அரசுத்துறை அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது.

மேலும், கைவிடப்பட்ட நிலையில் இருந்த படகு இல்லம் சீரமைக்கப்பட்டு படகு விடப்பட்டு உள்ளது. வால்பாறை பூங்காவும் புதுப்பொலிவு பெற்றுள்ளது. வனத்துறை சார்பாக வண்ணத்துப்பூச்சி மற்றும் பறவைகளை காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. எனவே, வால்பாறைக்கு சுற்றுலா வந்து இயற்கை காட்சிகளை கண்டு, கோடை விழாவில் பங்கேற்று சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம்’’ என்றார்.

விழாவில், நகராட்சி துணைத்தலைவர் செந்தில் குமார், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து இன்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கோடை விழா தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

The post 5 ஆண்டுகளுக்கு பிறகு வால்பாறையில் கோடை விழா துவங்கியது appeared first on Dinakaran.

Tags : Valparai ,Pollachi ,Priyanka ,Dinakaran ,
× RELATED கூழாங்கல் ஆற்றில் குளிக்கத் தடை