நன்றி குங்குமம் தோழி இந்த ஊரடங்கு காலம் தொடங்கிய நாள் முதல் நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தை ‘உடற்பயிற்சி செய்ய வேண்டும், சத்தான உணவு வகைகள் சாப்பிட வேண்டும்’ என்பதுதான். அதேபோல் நிறைய பேர் வீட்டிலேயே உடற்பயிற்சிகள் செய்துகொண்டும் இருப்போம்.இப்போது மட்டுமல்லாமல் சாதாரண நாட்களில் கூட நம்மில் பலர் உடற்பயிற்சி செய்வதைப் பார்க்கலாம். அவர்களில் பாதிக்கும் அதிகமானோர் தவறாக உடற்பயிற்சி செய்வதை கவனித்திருக்கிறேன். உதாரணமாக, நான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து நான்கு வீடுகள் தள்ளி இருக்கும் வீட்டின் மாடியில் தாத்தா ஒருவர் தினந்தோறும் காலை மாலை இருவேளையும் உடற்பயிற்சி செய்வதை பார்க்கிறேன். அவர் செய்யும் பயிற்சிகள் அனைத்தும் சரியானவை தான் என்றாலும் செய்யும் முறைகள் முற்றிலும் தவறாக இருக்கும்.இது ஏதோ அவர் ஒருவரைப் பற்றிய விஷயமல்ல. கிட்டத்தட்ட நம்மில் அதிகமானோர் இப்படித்தான் எது சரி, எது தவறென்று தெரியாமல் உடற்பயிற்சி செய்துவருகிறோம். பயிற்சி செய்வது நல்லப் பழக்கம் என்றாலும், தவறாகப் பயிற்சி செய்வது, தன் உடல் ஆற்றலுக்கு பொருத்தம் இல்லாதப் பயிற்சிகள் செய்வது, இயன்முறை மருத்துவரின் அறிவுரை இல்லாமல் தானாகவே பயிற்சியை தேர்வு செய்வது எப்போதும் ஆபத்திலேயே போய் முடியும்.உதாரணமாக ஒருவர் தொடர்ந்து தவறான முறையில் உடற் பயிற்சி செய்வதன் மூலம் நேரமும், பணமும் விரயமாவதுடன், தேவையற்ற உடல் கோளாறுகள், அதனால் வரக்கூடிய மன உளைச்சல் என நீண்டு கொண்டே போகும். இந்நிலையில் உடற்பயிற்சி விஷயத்தில் போதிய அக்கறையும், விழிப்புணர்வும் ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவைப்படுகிறது.உடற்பயிற்சியும் புரிதலும்…எப்படி ஒருவரால் மாத்திரை, மருந்துகளை தான் நினைப்பது போல் உட்கொள்ள முடியாதோ, அதுபோன்று தான் உடற் பயிற்சியும். உதாரணமாக, ஒருவர் செய்யவேண்டிய பயிற்சிகள் என்னென்ன? அதை எத்தனை முறை செய்யவேண்டும்? அதன் அளவும் வேகமும் எவ்வாறு இருக்கவேண்டும்? அதனை முறையாக எப்படி செய்ய வேண்டும்? போன்றவற்றை அவசியம் தெரிந்திருக்க வேண்டும். ஒரே மூட்டு வலியாக இருந்தாலும் கூட பிரச்சினையின் தீவிரம், வயது, உடல்வாகு போன்றவற்றைப் பொருத்து ஒவ்வொருவருக்கும் பயிற்சிகள் மாறுபடக்கூடும்.செய்யக்கூடாதது…* யூ-டியூப் மற்றும் தொலைக்காட்சி பார்த்து பயிற்சிகள் செய்வது.* உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வோர் முறையான பயிற்சியாளர்கள் இல்லாமல் பயிற்சி செய்வது.* இயன்முறை மருத்துவர் இல்லாத உடற்பயிற்சி கூடங்களுக்கு செல்வது.* அதிக எடை உள்ளவர்கள், வயதானவர்கள், உடற்பயிற்சி கூடத்திற்கு செல்ல மனமும் நேரமும் இல்லாமல் வீட்டில் பயிற்சி செய்பவர்கள் தகுந்த இயன்முறை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் தானாகவே பயிற்சிகள் செய்வது.* இயன்முறை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் உடற்பயிற்சி செய்வதற்காக ஆன்லைன் அல்லது ஸ்போர்ட்ஸ் ஷாப்களில் தாங்களாகவே உபகரணங்கள் வாங்கி வந்து பயிற்சி செய்வது.* பூங்காக்களில் இருக்கும் உடற்பயிற்சி செய்யும் எந்திரங்களில் இயன்முறை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயிற்சி செய்வது.வரக்கூடிய பாதிப்புகள்…* உடனடி பாதிப்புகள்: இவ்வகை பாதிப்புகள் பயிற்சிகள் செய்யத் துவங்கிய 2 முதல் 4 மாதங்களில் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தசைக் கிழிவது, தசையில் கீரல் விழுவது, தசைப் பிடிப்பு, எலும்புகளை இணைக்கும் தசைநார்கள் (ligament) கிழிவது, சுற்றியுள்ள மற்ற தசைகளும் மூட்டுகளும் மறைமுகமாக பாதிக்கப்படுவது, முன்பிருந்த உடல் வலி குறையாமல் அப்படியே இருப்பது, மேலும் புதிய மூட்டுகளில் வலி வருவது, தினமும் உடற் பயிற்சி செய்தாலும் எந்தவிதப் பயன்களும் ஏற்படாமல் இருப்பது. இப்படி இன்னும்.நீண்டநாள் கழித்து வரும் பாதிப்புகள்: நீண்ட நாள் பிரச்சனைகளான சீர் இல்லாத உடல் தோரணை (bad posture), தவறான முறையில் பயிற்சி செய்வதால் உடலின் எடை வேறு மூட்டில் விழுந்து ஏற்படும் எலும்பு தேய்மானம், இதன் விளைவாக வரும் மூட்டு வலிகள், தினந்தோறும் பயிற்சி செய்தும் வலி குறையாததால் வரக்கூடிய மனஉளைச்சல், இன்னும். செய்ய வேண்டியவை…* உடற்பயிற்சி செய்யப் போவதாய் இருந்தாலோ, உடம்பில் ஏதேனும் மூட்டுவலி ஏற்பட்டு உடற்பயிற்சி செய்ய வேண்டிய தேவை இருந்தாலோ முதலில் அருகிலுள்ள இயன்முறை மருத்துவரை அணுக வேண்டும்.* அவர்கள் முழுவதுமாக பரிசோதனை செய்து, எந்தெந்த தசைகளில் என்னென்ன சிக்கல் இருக்கிறது என்பதனைப் பொருத்து தசைகளின் பலத்திற்கு தக்கவாறு பயிற்சிகள் பரிந்துரைப்பர்.* முறையாக திட்டம் வகுத்து பயிற்சிகள் கற்று கொடுப்பர்.* அதேபோல் பயிற்சிகளை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதனையும் அருகில் இருந்து அவர்கள் கற்றுக்கொடுப்பதன் மூலம் பிழையுடன் பயிற்சி செய்வதற்கும் வாய்ப்பில்லை.* மேலும் தொடர்ந்து பயிற்சிகள் செய்து வருபவர் இடையில் ஏதேனும் பயிற்சியை மாற்ற விரும்பினால் முதலில் இயன்முறை மருத்துவரின் ஆலோசனையை கேட்டு அதன்படி மாற்றிக்கொள்ளுதல் அவசியம்.எனவே ஒருவர் உடற்பயிற்சி செய்வது அவசியமான ஒன்றுதான் என்பதை அறியும் அதேவேளையில், சரியான முறையில் செய்யப்படும் உடற்பயிற்சிக்கு தான் நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் அறிந்து செயல்பட்டால், உடலோடு சேர்ந்து மனமும் நலம்பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்தொகுப்பு: அன்னம் அரசு படங்கள்: ஜி.சிவக்குமார்
The post Wrong Wrong உடற்பயிற்சிகளும்… Right Right தீர்வுகளும்! appeared first on Dinakaran.