×

‘பஹல்காமில் தீவிரவாதிகளை எதிர்த்து பெண்கள் போராடியிருக்க வேண்டும்’: பாஜ எம்பி சர்ச்சை கருத்து

புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பாஜ எம்பியான ராம்சந்தர் ஜங்க்ரா கூறுகையில்,பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதலில் தங்கள் கணவர்களை இழந்த பெண்கள் தீவிரவாதிகளை எதிர்த்து வீராங்கனைகள் போல் போராடியிருக்க வேண்டும். அவர்கள் இரும்பு ராடுகளால் தீவிரவாதிகளை தாக்கியிருந்தால் ஐந்து அல்லது ஆறு தீவிரவாதிகளை கொன்றிருக்கலாம். அவர்களது கணவர்களின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். அங்கு சென்றிருந்த சுற்றுலா பயணிகள் அக்னிவீரர் பயிற்சியை எடுத்திருந்தால் உயிரிழப்பு குறைந்திருக்கும் என்று தெரிவித்திருந்தார். அவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில், மத்திய பிரதேச துணை முதல்வர் ஜெகதீஷ் தேவ்தா நமது ராணுவத்தை அவமதித்தார். ஆனால் பிரதமர் மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மத்திய பிரதேச அமைச்சர் விஜய் ஷா நமது துணிச்சலான கர்னல் சோபியா குரேஷி பற்றி ஆட்சேபகரமான கருத்துக்களை தெரிவித்தார். ஆனால் அவர் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி சமூக வலைதளத்தில் இணையதளவாசிகளால் விமர்சிக்கப்பட்டார். அப்போதும் பிரதமர் மோடி மவுனமாக இருந்தார்.

பாஜ எம்பி ஜங்க்ராவின் தற்போதைய பேச்சு பாஜவின் அற்பத்தனமான எண்ணத்தை வெளிப்படுத்துகிறது. மோடி ஜி, உங்கள் ரத்த நாளங்களில் ரத்தம் இல்லை,குங்குமம் பாய்வதாக சொன்னீர்கள். அப்படியானால், பெண்களின் மரியாதையை காப்பாற்றுவதற்கு இது போன்ற தலைவர்களை நீங்கள் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிவிடுகையில்,பாஜ தலைவர்களின் இது போன்ற பேச்சுகளுக்காக மோடி மன்னிப்பு கேட்க வேண்டும். ஜங்க்ராவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

The post ‘பஹல்காமில் தீவிரவாதிகளை எதிர்த்து பெண்கள் போராடியிருக்க வேண்டும்’: பாஜ எம்பி சர்ச்சை கருத்து appeared first on Dinakaran.

Tags : BJP ,New Delhi ,Kashmir ,Pahalgam ,Ramchandra Jangra ,
× RELATED நாடு முழுவதும் நடந்த தேசிய லோக் அதாலத்...