×

உயில் தகவல்களை வெளியிடக்கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது நினைவிடத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ்சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வில்லாக்கள் ஏற்படுத்தும்படி கூறினார்.

அதன் அடிப்படையில் வில்லாக்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து 125 வில்லா வகையிலான வீடுகளுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்தேன். இந்த விவரங்கள் சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் என்னை சந்தித்த சசிகலா, சில சொத்துக்களை எனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாக’’ கூறினார்.

ஆனால், சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது என்னை சந்திக்க மறுக்கிறார். இந்த உயிலை வெளியிடக் கோரி பல அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஜெயலலிதாவின் உயிலை வெளியிடக் கோரி அவரது சமாதியில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, விளம்பர நோக்கத்தில் இந்த மனு தாக்கல் செய்யபட்டுள்ளது. ஏற்கனவே இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு முடித்துவைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் இதே போன்ற மனுவை தாக்கல் செய்து நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

The post உயில் தகவல்களை வெளியிடக்கோரி ஜெயலலிதா நினைவிடத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Jayalalithaa ,Chennai ,
× RELATED அதிமுக நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு ஆஜர்