பாலக்காடு: பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு அருகே நென்மேனியைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இவரது தோட்டத்தில் நெல், வாழை, தென்னை, மரச்சீனி, மரவள்ளிக்கிழங்கு மற்றும் ஊடுபயிர்கள் விவசாயம் செய்து வருகிறார். இத்தோட்டத்தில் அடிக்கடி காட்டுப்பன்றிகள் புகுந்து தோட்டப்பயிர்களை சேதப்படுத்தி வந்தன. இவர் காட்டுப்பன்றிகளை பிடிக்க தோட்டத்தின் கம்பிவேலிகளில் சுருக்குக்கம்பி அமைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை தோட்டத்திற்கு பணிக்கு வந்த தொழிலாளர்கள் சுருக்கு கம்பியில் சிக்கிய சிறுத்தை உயிருக்கு போராடி வருவதை கண்டு, தோட்டத்தின் உரிமையாளருக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவலளித்தனர்.இத்தகவலறிந்த கொல்லங்கோடு ரேஞ்சு வனத்துறை அதிகாரி பிரமோத், ஆலத்தூர் ரேஞ்சு வனத்துறை அதிகாரி கிருஷ்ணதாஸ், கால்நடை மருத்துவர் டேவிட் உட்பட வனத்துறையினர் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டு சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தினர்.
பின்னர், காவலர்கள் சிறுத்தையை மீட்டு கூண்டிற்குள் அடைத்து வைத்து சிகிச்சை அளிக்க முயற்சித்த போது சிறுத்தை உயிரிழந்தது. சுருக்கு கம்பியில் சிக்கி 4 வயது பெண் சிறுத்தை உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மண்ணுத்தி கால்நடை மருத்துவமனையில் சிறுத்தையின் உடல் உடற்கூறு பரிசோதனைக்குப்பின் அடக்கம் செய்யப்பட்டது.
The post காட்டுப்பன்றிகளுக்கு வைத்த சுருக்கு கம்பியில் சிக்கி பெண் சிறுத்தை பலி appeared first on Dinakaran.