×

குடும்பம் நடத்த மனைவி வராததால் 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை

திருமலை: மனைவி குடும்பம் நடத்த வராததால் 14 மாத பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது அவர் சந்தேகப் பட்டுள்ளார். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டம் கிம்யாதாண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (32). இவரது மனைவி சிவலி (28). தம்பதியின் குழந்தை சசிகலா (14 மாதங்கள்).திருமணமான சில மாதங்களில் இருந்தே மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட திருப்பதி அடிக்கடி, மனைவியிடம் தகராறு செய்துள்ளார். தொடர்ந்து தகராறு ஏற்பட்டதால் மனவேதனை அடைந்த சிவலி கணவனை விட்டு பிரிந்து ஐதராபாத்தில் உள்ள தாய் வீட்டுக்கு குழந்தையுடன் சென்று அங்கேயே தங்கினார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மாமியார் வீட்டுக்கு சென்ற திருப்பதி, மனைவி சிவலியிடம் குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். அதற்கு சிவலி, சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்யும் உன்னுடன் வரமாட்டேன் என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த திருப்பதி, குழந்தையை தூக்கிக்கொண்டு ஆட்டோவில் தனது கிராமத்திற்கு புறப்பட்டார். ஆட்டோவில் வரும்போது செல்போனில் மனைவியை பலமுறை தொடர்பு கொண்டார். ஆனால் சிவலி பேசவில்லையாம்.

இதனால் ஆத்திரமடைந்த திருப்பதி, பிஜினப்பள்ளி புறநகர் பகுதியில் வந்தபோது ஆட்டோவிலேயே குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதையறிந்த ஆட்டோ டிரைவர் அதிர்ச்சி அடைந்தார். ஆனால் திருப்பதி கூறியபடி டிரைவர் ஆட்டோவை பிஜினப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு ஓட்டிச்சென்றார். அங்கு போலீசாரிடம் குழந்தையின் சடலத்துடன் திருப்பதி சரணடைந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து திருப்பதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் குழந்தையை அதன் தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post குடும்பம் நடத்த மனைவி வராததால் 1 வயது குழந்தையை கொலை செய்த தந்தை appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Telangana ,
× RELATED தெலங்கானாவில் காரை ரிவர்ஸ் எடுக்க...