×

வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு

டிரினிடட் : மேற்கிந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் இழந்து 288 ரன்கள் எடுத்துள்ளது. முதல் போட்டியிலேயே அசத்திய ஜெய்ஸ்வால் , கடந்த முறை சதம் கண்ட ரோஹித் ஷர்மா ஆகியோர் மிதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முறையே 57, 80 ரன்களில் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து களமிறங்கிய கில் மற்றும் ரகானே முறையே 10 மற்றும் 8 ரன்களில் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கின்றனர்.

இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. விண்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்னுக்கு சுருண்ட நிலையில், இந்தியா 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

அறிமுக தொடக்கவீரர் ஜெய்ஸ்வால் 171, கேப்டன் ரோகித் 103, கோலி 76, ஜடேஜா 37* ரன் விளாசினர். அடுத்து 271 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அஷ்வின் சுழல் ஜாலத்தை சமாளிக்க முடியாமல் 50.3 ஓவரில் 130 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 21.3 ஓவரில் 7 மெய்டன் உள்பட 71 ரன்னுக்கு 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஜடேஜா 2, சிராஜ் 1 விக்கெட் வீழ்த்தினர். இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 141 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

இந்நிலையில் நேற்று தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட்இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால்(57), ரோகித்(80) ஆகியோர் அபாரமாக விளையாடி அரைசதத்தை கடந்தனர். அடுத்து களமிறங்கிய கில் 10 ரன்களில் வெளியேற பின்னர் தனது 500வது சர்வதேச போட்டியில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி களமிறங்கினார்.

ரஹானேவும் 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுக்க அடுத்து ஜடேஜா களமிறங்கினார். கோலி, ஜடேஜா ஜோடி விக்கெட்டை இழக்காமல் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தது. விராட் கோலி 87, ஜடேஜா 36 ரன்களுடன் இன்னும் களத்தில் நிற்கின்றனர். தனது 500வது போட்டியில் விராட் கோலி சதமடித்து அசத்துவார் என ரசிகர்கள் அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.

The post வெஸ்ட்இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : Indian ,West Indies ,Trinidad ,Dinakaran ,
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...