×

எலிமினேட்டரில் இன்று ‘ராயல்ஸ்’ பலப்பரீட்சை: வெற்றி அல்லது வெளியேற்றம்

அகமதாபாத்: ஐபிஎல் தொடரின் 17வது சீசன் பிளே ஆப் சுற்று எலிமினேட்டர் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன. நடப்பு தொடரின் முதல்பாதி லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய ராஜஸ்தான் அணி, முதலில் விளையாடிய 9 ஆட்டங்களில் 8 வெற்றிகளை வசப்படுத்தி அசத்தியது.

தொடர்ச்சியாக 4 வெற்றி, 5வது போட்டியில் தோல்வி, அதைத் தொடர்ந்து மீண்டும் தொடர்ச்சியாக 4 வெற்றி என மிரட்டிய சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, அதன் பிறகு தொடர்ச்சியாக 4 தோல்விகளையும் பதிவு செய்தது. கொல்கத்தாவுடன் விளையாட இருந்த கடைசி லீக் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தானதை அடுத்து, 17 புள்ளிகள் பெற்று சன்ரைசர்சுடன் சமநிலை வகித்தாலும் மொத்த ரன் ரேட் அடிப்படையில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டது.

இதையடுத்து, பிளே ஆப் சுற்றின் வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் இன்று டு பிளெஸ்ஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சவாலை எதிர்கொள்கிறது. வலுவான அணி, அனைத்து வீரர்களும் பார்மில் இருக்கிறார்கள் என்றாலும்… ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் தடுமாறுவது ராயல்ஸ் அணியின் பலவீனமாக உள்ளது.

ராஜஸ்தான் அணி லீக் சுற்றின் தொடக்கத்தில் வெற்றிகளைக் குவித்து இறுதிக் கட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது என்றால், ஆர்சிபி அணியின் பயணம் அப்படியே தலைகீழாக இருந்தது. அந்த அணியால் முதலில் விளையாடிய 8 போட்டியில் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பெற முடிந்தது. அதிலும் தொடர்ச்சியாக 6 தோல்விகளை பெற்றபோது, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற ஒரு சதவீத வாய்ப்பு கூட இல்லை என்றே கணிக்கப்பட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் போராடி மீண்ட ஆர்சிபி தொடர்ச்சியாக 6 வெற்றிகளுடன் 4வது இடம் பிடித்து பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது. அதிலும், நடப்பு சாம்பியன் சென்னைக்கு எதிராக விளையாடிய கடைசி லீக் ஆட்டத்தில் கடும் நெருக்கடியை சமாளித்து 27 ரன் வித்தியாசத்தில் வென்று அமர்க்களப்படுத்தியது. அமகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30க்கு தொடங்கி நடைபெற உள்ள எலிமினேட்டரில் தோற்கும் அணி பரிதாபமாக வெளியேற வேண்டியிருக்கும். ஜெயிக்கும் அணிக்கு இன்னும் 2 சவால்கள் காத்திருக்கின்றன. கொல்கத்தா – ஐதராபாத் அணிகளிடையே நடக்கும் குவாலிஃபயர்-1ல் தோற்ற அணியுடன் குவாலிஃபயர் 2 ஆட்டத்தில் அந்த அணி மோத வேண்டும்.

மொத்தத்தில் எலிமினேட்டர், குவாலிபயர்-2, பைனல் என ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்தினால் மட்டுமே கோப்பையை முத்தமிட முடியும் என்ற நெருக்கடியில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் உள்ளன. இப்போதைக்கு எலிமினேட்டர் என்ற காலிறுதியில் வென்று குவாலிஃபயர்-2 என்ற அரையிறுதிக்கு முன்னேறுவது மட்டுமே இந்த அணிகளின் இலக்கு. வாழ்வா… சாவா? ஆட்டமாக அமைந்துள்ள இன்றைய எலிமினேட்டரில் அனல் பறக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

The post எலிமினேட்டரில் இன்று ‘ராயல்ஸ்’ பலப்பரீட்சை: வெற்றி அல்லது வெளியேற்றம் appeared first on Dinakaran.

Tags : Royals ,AHMEDABAD ,Rajasthan Royals ,Royal Challengers ,Bangalore ,IPL season ,Rajasthan ,
× RELATED 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான்...