×

பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைக்கு வந்தது

சென்னை: பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக ‘வாட்டர் பெல்’ திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இதை நடைமுறைபடுத்தும் விதமாக பள்ளிக் கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்தது. அதில், உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற்றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மைகளைத் தரும். இதையடுத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விதமாக வாட்டர் பெல் திட்டம் உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண்ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான சத்தத்தில் இருந்து மாறுதல் ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப்படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவர். எனினும் பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொறுத்து நேரத்தை மாற்றி கொள்ளலாம். அதன்படி வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங்கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள்ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டிலை கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நேற்று முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த புதிய திட்டத்திற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

 

The post பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் நடைமுறைக்கு வந்தது appeared first on Dinakaran.

Tags : Chennai ,School Education Minister ,Anbil Mahesh ,School Education Department ,Dinakaran ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...