×

சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டவர்தான் வினேஷ் போகத் : பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டத்தை குறிப்பிட்டு ராகுல், பஜ்ரங் ஆதங்கம்!!

டெல்லி : பாஜக முன்னாள் எம்.பி.பிரிஜ் பூஷன் மீதான பாலியல் புகார் விவகாரத்தில் ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னால் வீழ்ந்துவிட்டதாக வினேஷ் போகத்தின் பாரீஸ் வெற்றியை ராகுல் காந்தி பாராட்டி உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில், அடுத்தடுத்து அசத்தல் வெற்றிகளை குவித்து வினேஷ் போகத் இறுதிச் சுற்றுக்குள் அடியெடுத்து வைத்துள்ளார். இதனால் குறைந்தபட்சம் இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் உறுதியாகி உள்ளது. அவரது திறமையை பாராட்டி நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், “ஒரே நாளில் உலகில் தலை சிறந்த 3 வீராங்கனைகளை வினேஷ் போகத் வீழ்த்தியுள்ளார்.

வினேஷ் மற்றும் அவரது சகாக்களின் டெல்லி போராட்டத்தை பொய்யாக்கியவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் நோக்கம் மற்றும் திறன்கள் குறித்து கேள்வி எழுப்பிய அனைவர்க்கும் தற்போது பதில் கிடைத்துள்ளது. ரத்த கண்ணீர் வடிக்கச் செய்த ஒட்டுமொத்த அதிகார அமைப்பும் இன்று இந்தியாவின் வீர மகளுக்கு முன்னாள் வீழ்ந்துவிட்டன. இது தான் வெற்றியாளர்களின் அடையாளம். அவர்கள் களத்தில் இருந்து தங்கள் பதிலை தருகிறார்கள்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று வினேஷ்-ன் வெற்றியுடன் டெல்லி போராட்டத்தை மையப்படுத்தி மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா வெளியிட்டுள்ள பதிவில், “பாரீசில் வெற்றி மேல் வெற்றிகளை குவித்து இந்தியாவின் பெண் சிங்கமாக போகத் உருவெடுத்துள்ளார். 4 முறை உலக சாம்பியன், நடப்பு சாம்பியனையும் போகத் வீழ்த்தியுள்ளார். காலிறுதியில் முன்னாள் உலக சாம்பியனையும் தோற்கடித்துள்ளார். இவர் தான் தனது சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டார். தெருக்களில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்டார். பாரீஸ் வெற்றி மூலம் உலகையே ஆளப்போகும் போகத் தனது சொந்த நாட்டின் கட்டமைப்பிடம் தோற்றுவிட்டார், “என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

The post சொந்த நாட்டிலேயே அடித்து உதைக்கப்பட்டவர்தான் வினேஷ் போகத் : பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டத்தை குறிப்பிட்டு ராகுல், பஜ்ரங் ஆதங்கம்!! appeared first on Dinakaran.

Tags : Vinesh Phogat ,Rahul ,Bajrang ,Delhi ,Rahul Gandhi ,Vinesh Bhogat ,Paris ,BJP ,Brij Bhushan ,India ,Bajrang Athamangam ,
× RELATED அரியானாவில் காங். சார்பில் போட்டி?...