×

பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது: துணைவேந்தர், பதிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு


சென்னை: தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்காக பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசின் உயர்கல்வித் துறையின்கீழ் 21 பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் செயல்பாடுகள் குறித்தும், திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. 21 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதல்வர் ஆற்றிய உரை: உலகம் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் மாறிக்கொண்டு வருகிறது. ஏ.ஐ.கிரின் எனர்ஜி இன்டஸ்ட்ரீ 4.0. இவையெல்லாம்தான் பொருளாதாரங்களை முடிவு செய்கிறது. நம்முடைய பல்கலைக்கழகங்களும் வளரும் தேவைகளுக்கேற்ப மாணவர்களை உருவாக்க வேண்டும்.

துணைவேந்தர்கள், பதிவாளர்களான நீங்கள் அடிப்படையில் கல்வியாளர்களாக இருந்தாலும் தமிழ்நாட்டின் பல்வேறு கனவுகளை நிறைவேற்றித் தரும் செயல்பட்டாளர்களாகவும் செயல்பட வேண்டும். 2033ம் ஆண்டுக்குள் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதை இலக்காக வைத்துக் கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகிறேன். ஆராய்ச்சி மற்றும் புதுமைக்கான மையங்களாக உயர்கல்வியின் உலகளாவிய தலைமையகமாக நம்முடைய தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்கள் திகழவேண்டும். இதுதான் என் கனவு. உலகெங்கிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பொறியாளர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் பல்வேறு துறைகளில் தலைமைப் பொறுப்புகளிலும், ஆராய்ச்சிப் பொறுப்புகளிலும் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

அவர்களில் பலரும் நமது தாய்த் தமிழ்நாட்டிற்கு, நமது இளைஞர்களுக்கு வழிகாட்டிகளாகவும், மாநிலத்தின் அறிவுசார் வளர்ச்சிக்கு பங்களிக்கவும் தயாராக இருக்கின்றார்கள். அவர்களது திறமையையும், அறிவையும் பயன்படுத்திக் கொண்டு, தமிழ்நாட்டில் தமிழ் திறனாளர்கள் எனும் திட்டம் வகுக்க வேண்டும். கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமான கருத்துகளும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிடக் கூடாது. சமத்துவத்தையும், சமநீதியையும் கற்பிப்பதுதான் உங்களுடைய தலையாய கடமை.

பிரிவினையைத் தூண்டும் கருத்துகளுக்கோ, நடவடிக்கைகளுக்கோ கல்வி நிலையங்களில் இடமில்லை. இதில் எவ்விதமான சமரசத்தையும் ஏற்றுக் கொள்ள இயலாது என்றார் முதல்வர். உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் வரவேற்றார். தலைமைச் செயலாளர் முருகானந்தம் அறிமுக உரை ஆற்றினார். கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ரகுபதி, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மா.சுப்பிரமணியன், உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவர் விஜயகுமார் (ஓய்வு), அரசு துறைச் செயலாளர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துகளை மாணவர்களிடையே பரப்பக் கூடாது: துணைவேந்தர், பதிவாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K. Stalin ,Vice-Chancellors and ,Registrars ,Chennai ,Tamil Nadu ,Higher Education Department of ,Tamil Nadu Government ,Vice-Chancellors and Registrars ,Dinakaran ,
× RELATED உலகப் புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர்,...