×
Saravana Stores

வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது?

வேலூர்: வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருந்து, மாத்திரைகள், ஊசி உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் வீசப்பட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகள் ஆகியவற்றில் சேரும் நோய்தொற்று அபாயம் கொண்ட பேண்டேஜ், துணிகள், பஞ்சுகள், கை மற்றும் காலுறைகள், அறுவை சிகிச்சையின்போது அகற்றப்படும் மனித திசுக்கள், உறுப்புகள் போன்றவையும், உபயோகித்த ஊசி மருந்து குப்பிகள், பிளாஸ்டிக் சிரிஞ்சுகள், ஊசிகள் மற்றும் அறுவை சிகிச்சைக்கு உபயோகப்படுத்தும் உலோக பிளேடுகள், கத்தரிகள், காலியான பிளாஸ்டிக் குளுக்கோஸ் கேன்கள், டிரிப் ஏற்ற உதவும் டியூப்கள் என அனைத்து மருத்துவக்கழிவுகளும் மருத்துவக்கழிவு மேலாண்மை மூலம் பாதுகாப்புடன் அகற்றி, அழிக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டம் நடைமுறைக்கு வந்தது.

அதேநேரத்தில் மருந்து மொத்த வியாபார நிறுவனங்கள், சில்லரை மருந்து கடைகளில் காலாவதியாகும் மருந்துகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தாலேயே திரும்ப பெறப்பட்டு அழிக்கப்பட வேண்டும். அரசு மருத்துவக்கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், கிளினிக்குகளில் மருத்துவக்கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றி அழிக்கும் பணியில் கடந்த 2008ம் ஆண்டு முதல் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு காட்பாடி விண்ணம்பள்ளியில் இயங்கி வரும் கன் பயோ லிங்க் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மருத்துவக்கழிவுகளை பாதுகாப்புடன் அகற்றும் மருத்துவக்கழிவு மேலாண்மை திட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் ஒரு சில பிரபல தனியார் மருத்துவமனைகளே ஆர்வம் காட்டி வரும் நிலையில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், டாக்டர்கள் நடத்தி வரும் கிளினிக்குகள், மொத்த மருந்து வணிக நிறுவனங்கள், சில்லரை மருந்துக்கடைகள் இத்திட்டத்தில் ஆர்வம் காட்டாமல், அப்படியே தங்களின் மருத்துவக்கழிவுகளை இரவு நேரங்களில் நீர்நிலைகளிலும், தேசிய, மாநில, மாவட்ட நெடுஞ்சாலையோரங்களிலும் மூட்டை மூட்டையாக வீசி செல்கின்றன.

அதன்படி வேலூர் அடுத்த மேல்மொணவூர் தேசிய நெடுஞ்சாலை சதுப்பேரி கரையோரம் மருந்து, மாத்திரைகள், ஊசிகள் மற்றும் மருத்துவ கழிவுகள் வீசப்பட்டிருப்பது இன்றுகாலை கண்டுபிடிப்பட்டது. இவை காலாவதியான மருந்துகளா, இவற்றை விதி மீறி வீசிய மருத்துவமனைகள் எது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வேலூர் சதுப்பேரி அருகே நெடுஞ்சாலையோரம் மருத்துவக்கழிவுகள் வீச்சு: தொடரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி எப்போது? appeared first on Dinakaran.

Tags : Vellore Satupperi ,Vellore ,Tamil Nadu ,
× RELATED வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை...