×

வண்டலூர் அருகே வழக்கறிஞரை தாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: வழக்கறிஞரை தாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வழக்கறிஞர்கள் கோருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். வண்டலூர் திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் பங்க் அருகே உள்ள இவரது இடங்களை சாலை விரிவாக்கத்திற்காக தமிழக அரசு எடுத்துக்கொண்டது. அதில், மீதமுள்ள இடத்தின் அருகே ஒரு வினாயகர் கோயில் உள்ளது. அந்த கோயிலின் அருகே உள்ள இடங்களை ஆக்ரமிப்பதற்காக வண்டலூர் ஊராட்சி முன்னாள் தலைவர் குணா என்கிற குணசேகரன் என்பவர் அந்த இடத்திற்கு உரிய ஆவணங்கள் முதலில் வினாயகர் கோயிலுக்கு இல்லாமல் மின் இணைப்பு பெற்றுள்ளார். அந்த மின் இணைப்பை எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என தமிழ்ச்செல்வன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில ஆவணங்களை சேகரித்துள்ளார்.

வண்டலூர் வினாயகர் கோயில் அருகே உள்ள தனது இடத்தில், இவர் மெக்கானிக் ஷெட் வாடகைக்கு விட்டுள்ளார். நேற்று இரவு அங்கு சென்ற தமிழ்ச்செல்வனை குணா மற்றும் அருண், ஜெகன், ரமேஷ், அண்ணாமலை உள்ளிட்டோர் சேர்ந்து சரமாரியாக தாக்கியுள்ளனர். அதோடு மட்டுமல்லாமல், ‘‘இனி எங்களது விஷயத்தில் தலையிட்டால், உன்னை ஆளே இல்லாமல் காலி பண்ணிவிடுவோம்’’ என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். படுகாயமடைந்த தமிழ்ச்செல்வன் தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த சம்பவத்திற்கு சக வழக்கறிஞர் என்ற முறையில், செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவித்ததோடு, தமிழ்ச்செல்வனை தாக்கிய குணசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்த முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

The post வண்டலூர் அருகே வழக்கறிஞரை தாக்கிய முன்னாள் ஊராட்சி தலைவர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Vandalur ,Chengalpattu ,Chengalpattu District ,Dinakaran ,
× RELATED வண்டலூர் அருகே தனியார் குடியிருப்பு...