×

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மாணவர் சேர்க்கையை முடக்க ஒன்றிய அரசு நினைக்கிறது: வைகோ குற்றச்சாட்டு

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது.

புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, “பி.எம். ஸ்ரீ’ பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்” என, நாடாளுமன்ற நிலைக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் ஒன்றிய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமல் காலம் தாழ்த்தி ஒருதலைபட்சமாக செயல்பட்டு வருவது கண்டனத்துக்குரியது.

இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 7,738 தனியார் பள்ளிகளில் சுமார் 85 ஆயிரம் முதல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவ, மாணவிகள் வரை பயன்பெற்று வந்தனர். இத்திட்டம் தொடங்கி 14 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் நிலையில், ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியான மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை நடைபெறும்.

ஆனால், இந்தாண்டு தமிழகத்தில் ஏப்ரல் மாதம் வெளியிடப்பட வேண்டிய கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு தற்போது வரை வெளியிடப்படவில்லை. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்காததால், சமக்ர சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி கல்வி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்திருப்பது இந்த தாமதத்திற்கு காரணம் ஆகும். கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது.

இச்சூழலில் தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ஐ முடக்கி வைக்கும் வகையில் இத்திட்டத்திற்காக ஒன்றிய அரசு வழங்க வேண்டிய ரூ.617 கோடியை விடுவிக்காமல் அடாவடியாக ஒன்றிய அரசு செயல்படுவது கடும் கண்டனத்துக்குரியது. உடனடியாக கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு நிதியை ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் மாணவர் சேர்க்கையை முடக்க ஒன்றிய அரசு நினைக்கிறது: வைகோ குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Union government ,Vaiko ,Chennai ,MDMK ,General Secretary ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...