×

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு எழுதுபவர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், அகில இந்திய குடிமை பணி தேர்வு மையத்துடன் இணைந்து, ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமை பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் 1,000 சிவில் சர்வீசஸ் பயின்று வரும் மாணவர்கள், மதிப்பீட்டு தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை தேர்வுக்கு தயாராவதற்கு ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு மாதம் ரூ.7,500 வழங்கப்படும். முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு ரூ.25,000 ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் 2023ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

2025ம் ஆண்டின் யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக ரூ.25,000 நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். ஊக்கத்தொகையை பெறுவதற்கு நடப்பு ஆண்டில் (2025) யு.பி.எஸ்.சி முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், https://portal.naanmudhalvan.tn.gov.in/upsc_registration/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் அறிவிக்கையை படித்து பார்த்து, இன்று (21ம் தேதி) முதல் 2.7.2025 வரை விண்ணப்பிக்கலாம்.

 

The post யுபிஎஸ்சி முதன்மை தேர்வு எழுதுபவர் ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : UPSC ,Tamil Nadu Government ,Chennai ,Tamil Nadu Skill Development Corporation ,All India Civil Services Examination Centre ,Union Public Service Commission Civil Services Examinations… ,Dinakaran ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...