×

சோளிங்கர் அருகே அதிரடி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

*7 டூவீலர்கள் பறிமுதல்

சோளிங்கர் : திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை அடுத்த ஸ்ரீகாளிகாபுரத்தை சேர்ந்தவர் குமார்(45). இவர் எரும்பி பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட்மேனாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் 16ம் தேதி ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வாரச்சந்தைக்கு வந்தார்.

அவரது பைக்கை வெளியே நிறுத்திவிட்டு பொருட்கள் வாங்க சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது பைக் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதையடுத்து சோளிங்கர் போலீசில் குமார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சோளிங்கர் எஸ்ஐ மோகன்ராஜ் மற்றும் போலீசார் நேற்று சோளிங்கர் சுற்றுப்புற பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது ஐப்பேடு பஸ் நிறுத்தம் அருகே பைக்கில் வேகமாக வந்த 2 வாலிபர்களை நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் ஓட்டி வந்தது திருட்டு பைக் என தெரியவந்தது.

இதையடுத்து நடத்திய தீவிர விசாரணையில், வாலிபர்கள் சோளிங்கர் அடுத்த வன்னியமோட்டூர் கிராமத்தை சேர்ந்த பவநந்தி (24), அஜித் குமார் (24) என்பதும், இவர்கள் வேலூர், அரக்கோணம், திருத்தணி,சோளிங்கர் கொண்டாபாளையம், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் பைக்குகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்தபோலீசார் இவர்களின் வீட்டின் அருகே பதுக்கியிருந்த 7 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும் 2 வாலிபர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சோளிங்கர் அருகே அதிரடி தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Solinger ,Thiruvallur District ,R. K. Kumar ,Srikalikapuram ,Erumbi ,Ranipettai District ,
× RELATED மதுபோதையில் இளைஞர் ஒருவர் செய்த செயலால் அப்பகுதியில் பரபரப்பு!