- அஇஅதிமுக
- அமைச்சர்
- திருச்சி
- பெரம்பலூர் தொகுதி
- வித்யா வித்யா
- நாமக்கல்
- திவ்யா
- பஞ்சாயத்து கவுன்சில்
- ஜனாதிபதி
- எட்டாரை, திருச்சி மாவட்டம்
- திருச்சி வடக்கு மாவட்டம்
- பரஞ்ஜ்யோதி
- பெரம்பலூர்
- எடப்பாடி
- வருத்தம்
- தின மலர்
நாமக்கல்லில் இருந்து பல தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவுக்கு பணம் அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. அதில், ரூ.5 கோடியை, முன்னாள் அமைச்சரும், திருச்சி வடக்கு மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதியின் உறவினரான திருச்சி மாவட்டம் எட்டரையை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் திவ்யாவின் கணவர் ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் அன்பரசன்(43) காரில் திருச்சி கொண்டு வந்தார். இந்த தகவல் போலீஸ் அதிகாரிகள் மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுக்கு சென்றது. அவர்கள் பணத்துடன் வந்த காரை நோட்டமிட்டு, விரட்டினர்.
இதை மோப்பம் பிடித்த மாஜி அமைச்சரின் ஆதரவாளர்கள் வெவ்வேறு கார் மற்றும் பைக்கில் பணத்தை மாற்றி கொண்டே இருந்தனர். கரூரை தாண்டி பணத்துடன் வந்த ஒரு காரை போலீசார் பிடித்து, காரில் இருந்த அன்பரசன், திருவெறும்பூரை சேர்ந்த சிவப்பிரகாசம், ஆலத்தூர் நேதாஜி நகரை சேர்ந்த பிரதாப் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் திருச்சி மாவட்டம் எட்டரையில் உள்ள அன்பரசுவின் வீட்டை போலீசார் மற்றும் பறக்கும்படை, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது வீட்டு பூஜை அறையில் ஒரு பேக்கில் இருந்த ரூ.1 கோடி மட்டும் சிக்கியது. ஆனால், ரூ.4 கோடி மாயமானது.
தகவலறிந்து திருச்சி தேர்தல் செலவின பார்வையாளரான குஜராத்தை சேர்ந்த வருமானவரித்துறை அதிகாரி ஸ்ரம்தப் சின்கா அன்பரசுவின் வீட்டுக்கு வந்து விசாரித்தார். இதையடுத்து பிடிபட்ட அன்பரசு, திவ்யா உள்ளிட்ட 4 பேரையும் முசிறி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகள் சிக்கிய பணத்துக்கும் கட்சியின் மேலிடத்தில் உள்ளவர்களுக்கும் உள்ள தொடர்பு குறித்தும், யார் இந்த பணத்தை கொடுத்து அனுப்பியது என்றும், மீதி ரூ.4 கோடி எங்கே எனவும் விடியவிடிய விசாரித்தனர். தேர்தல் செலவுக்காக பணம் அனுப்பப்பட்ட பணம் ரூ.4 கோடி மாயமானதால், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி மற்றும் சில முன்னாள் அமைச்சர்களை வருமான வரித்துறையினர் தங்கள் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிடிபட்ட பணம் பெரம்பலூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதும், மாயமான ரூ.4 கோடி தொகுதியில் பிரித்து வழங்கப்பட்டுள்ளதாகவும், ரூ.1 கோடியை மாஜி அமைச்சர் ஒருவர் ஆட்டைய போட்டு, அதை தனது உறவினர் வீட்டில் பதுக்கி வைத்திருக்கலாம் என்றும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘அதிமுக வேட்பாளர் செலவுக்கு பணம் இல்லாமல் கொங்கு மண்டலத்தை சேரந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஒருவரை தொடர்பு கொண்டு, நீங்கள் போட்டியிட சொன்னதால் தான் போட்டியிட்ேடன். இப்போது தேர்தல் செலவுக்கு பணம் இல்லை என புலம்பி தவித்துள்ளார்.
மேலும், அந்த வேட்பாளர் தனக்கு சொந்தமான இடத்தை அடமானம் வைத்து ரூ.30 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கொங்கு பிரமுகர், திருச்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரை தொடர்பு கொண்டு நாமக்கல்லுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து திருச்சி முன்னாள் அமைச்சர் அறிவுறுத்தலின்படி திவ்யாவின் கணவர் அன்பரசன் தனது ஆதரவாளர்களுடன் நாமக்கல் சென்று பணம் வாங்கி வந்து உள்ளார். பெரம்பலூர் பகுதிகளுக்கு எவ்வளவு பணம் சப்ளை செய்ய வேண்டும் என்பது அடங்கிய விவரங்களை எழுத்துபூர்வமாக அதிமுக முன்னாள் அமைச்சருக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து, வாக்கு சதவீதத்திற்கு ஏற்றார்போல், பணம் கொடுக்கப்பட்டதாம்.
அப்போது போலீசார் காரை பின்தொடர்ந்ததால் ஓடும் காரில் இருந்து பணம் பலமுறை வேறு கார்கள் மற்றும் பைக் மூலம் கைமாற்றப்பட்டு தொகுதிகளுக்குள் எடுத்து செல்லப்பட்டது. ஆனால் மேலிடம் கொடுத்த ரூ.5 கோடியையும் மாஜி அமைச்சர் தொகுதிக்கு அனுப்பவில்லை. ரூ.4 கோடி மட்டுமே அனுப்பி உள்ளார். மீதி ரூ.1 கோடியை அவரது உறவினர் வீட்டிற்கு எடுத்து சென்று உள்ளனர். இந்த தகவல் கிடைத்துதான் வீட்டில் ரெய்டு நடத்தி ரூ.1 கோடியை பறிமுதல் செய்து உள்ளனர். ரூ.1 கோடி வீட்டில் பதுக்கியது குறித்து மாஜி அமைச்சர் மவுனம் காத்து வருகிறார். தொகுதிக்கு பணம் இல்லை என்று கேட்டதால் கொடுத்தும் செலவு செய்யாமல் ரூ.1 கோடி ஆட்டைய போட்டது குறித்து மாஜி அமைச்சர், எடப்பாடியும் அப்செட்டில் உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* 3 பேர் மீது வழக்கு
திருச்சியில் அதிமுக பிரமுகரின் காரில் கட்டுக்கட்டாக பணம் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின்பேரில் பறக்கும் படையினர் நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில் தீவிர வாகன சோதனை நடத்தினர். முசிறி பெரியார் பாலம் அருகே அன்பரசன்(43) வந்த காரை போலீசார் சோதனையிட முயன்றனர். அப்போது சோதனைக்கு ஒத்துழைக்காமல் போலீசாரை ஆபாச திட்டியதாகவும், பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும் அன்பரசன் மற்றும் காரில் இருந்த ஆலத்தூர் நேதாஜி தெருவை சேர்ந்த சிவபிரகாசம்(50), பிரதாப்(41) ஆகிய 3 பேர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் முசிறி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். அதேநேரத்தில் இந்த வழக்கை இதுவரை அமலாக்கத்துறை விசாரணைக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், பணம் பிடிபட்டது அன்பரசன் வீடு என்பதால், அவரது மனைவி பஞ்சாயத்து தலைவராக இருப்பதால் இந்தப் பணம் குறித்த லஞ்ச ஒழிப்புத்துறையும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post திருச்சியில் சிக்கிய ரூ.1 கோடி அதிமுக மாஜி அமைச்சர் ஆட்டைய போட்டது! பெரம்பலூர் தொகுதியில் ரூ.4 கோடி பணப்பட்டுவாடா: விடிய விடிய விசாரணையில் ‘ஷாக்’; அப்செட்டில் எடப்பாடி appeared first on Dinakaran.