புழல்: புழல் காவல்துறை சார்பில் நேற்று மாலை திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், திருநங்கைகள் எவ்வித குற்றச் செயல்களிலும் ஈடுபடக்கூடாது. நீங்கள் வேறு ஏதேனும் சுயதொழில் துவங்குவதற்கு காவல்துறை சார்பில் உதவி செய்யப்படும் என உதவி ஆணையர் உறுதியளித்தார். சென்னை புழல், மாதவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகளுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று மாலை புழல் காவல்நிலைய வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு புழல் காவல் உதவி ஆணையர் ஆதிமூலம் தலைமை தாங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் புழல், மாதவரம் பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட திருநங்கைகள் பங்கேற்று, தங்களின் குறைகளை உதவி ஆணையரிடம் விளக்கி கூறினர்.
பின்னர் உதவி ஆணையர் ஆதிமூலம் பேசுகையில், திருநங்கைகளுக்கு ஏற்படும் பாலியல் குறித்தும், அதனால் ஏற்படும் தீங்குகள் குறித்தும், இதனால் இரவுநேரங்களில் அதிகளவு குற்றச் சம்பவங்கள் நடப்பதற்கு காரணமாக அமைகிறது. இதைத் தவிர்த்து, திருநங்கைகள் ஏதேனும் சுயதொழில் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். உங்களை பாதுகாத்து கொள்ள, பாலியல் உள்பட பல்வேறு குற்றச் செயல்களில் இருந்து விடுபட வேண்டும். உங்களுக்கு சுயதொழில் உட்பட பல்வேறு தொழில்கள் துவங்க எங்களிடம் உதவி கோரினால், சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் பேசி, திருநங்கைகள் புதிய தொழில் துவங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி ஆணையர் உறுதியளித்தார். இதில் எஸ்ஐக்கள் ராஜா, பவானி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post திருநங்கைகள் சுயதொழில் செய்ய உதவி போலீஸ் உயர் அதிகாரி உறுதி appeared first on Dinakaran.