×

நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு: பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள்

சென்னை: நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த பெரிதும் ஆர்வம் காட்டுவதில்லை என பயணிகள் தெரிவித்துள்ளனர். சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தடம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. இந்த பணி காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படும் பறக்கும் ரயில் சேவை, சென்னை கடற்கரை – சிந்தாதிரிப்பேட்டை இடையே நிறுத்தப்பட்டு, சிந்தாதிரிப்பேட்டை – வேளச்சேரி வரை இயக்கப்பட்டது. இதனால் அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளில் இருந்து நேரடியாக பறக்கும் ரயில் மார்க்கத்தில் சேவைகளை பயன்படுத்தி வந்த பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் 14 மாதங்களுக்கு பின் கடந்த அக்.29ம் தேதி முதல் கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் ரயில்கள் இயக்கம் தொடங்கியது. இந்த சேவை எப்போது தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது பறக்கும் ரயில் சேவையை பயன்படுத்த மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டவில்லை.

குறைந்த கட்டணம் மற்றும் அரக்கோணம், திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்களின் நேரடி இயக்கம் காரணமாக தென் சென்னையில் நல்ல ஆதரவைப் பெற்ற பறக்கும் ரயில் சேவை, கடற்கரை நிலையத்தில் இருந்து சேவைகளை மீண்டும் தொடங்கிய பிறகும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. கடற்கரை – எழும்பூர் இடையே 4வது வழித்தட திட்டத்தை தொடங்கும் போதே பறக்கும் ரயில் சேவை தான் முதலில் பாதிப்புக்குள்ளானது. இதற்கு காரணம் இந்திய ரிசர்வ் வங்கி திட்டத்திற்காக சிறிது நிலத்தை வழங்க மறுத்ததால், இட நெருக்கடியை ஈடுகட்ட, கோட்டை மற்றும் கடற்கரை நிலையங்களுக்கு இடையே பறக்கும் ரயிலின் 2 பாதைகளில் ஒன்றை கையகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை – வேளச்சேரி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டும், வேளச்சேரி – கும்மிடிப்பூண்டி இடையே நேரடி ரயில்கள் இயக்கப்படவில்லை. மேலும், 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படுவதால், பயணிகள் அதிகளவில் இந்த ரயில் சேவையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது: வேளச்சேரியில் இருந்து பரங்கிமலை வரை பறக்கும் ரயில் சேவையை நீட்டிப்பதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அரக்கோணம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடி சேவைகள் நிறுத்தப்பட்டது, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பின்மை, பீக் ஹவர்ஸில் போதிய சேவைகள் இல்லாததால் பெரும்பாலான பயணிகள் ரயில்களை தவிர்த்து ஆட்டோ, டாக்ஸி போன்ற தனியார் சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

பீக் ஹவர்களில் 10 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் சேவைகள் கிடைத்து வந்தது, தற்போது, ​​25 நிமிடங்களாகி விட்டது. காலதாமதம் இல்லாத காரணதால் தான் பறக்கும் ரயில் சேவையை தேர்தெடுக்கிறோம். ரயில்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டதால் மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. 4வது புதிய வழித்தட திட்டத்திற்காக பார்க் ரயில் நிலையத்தை இடமாற்றம் செய்ததால் செண்டரல் புறநகர் மற்றும் விரைவு ரயில் நிலையங்களுக்கு மாற்றுப்பாதையில் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பறக்கும் ரயில் சேவைக்கு மாற்றமாக பேருந்துகளில் பயணிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் 9 பெட்டிகளை கொண்ட ரயில்களை மட்டுமே இயக்க முடியும். ஆனால் தற்போது 12 பெட்டிகளை கொண்ட ரயில்கள் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. மற்ற அனைத்து புறநகர் ரயில் வழித்தடங்களில் 12 பெட்டிகள் உள்ள நிலையில் நேரடியாக வேளச்சேரியில் இருந்து அரக்கோணம், ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இயக்கப்பட்ட சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பறக்கும் ரயில் துறையில் மட்டும் 15க்கும் மேற்பட்ட மோட்டார் பணியிடங்கள் காலியாக உள்ளன, இதன் விளைவாக சென்னைப் பிரிவில் முன்பு இயக்கப்பட்ட கிட்டத்தட்ட 140 சேவைகளுக்கு பதிலாக 70 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post நேரடி ரயில்கள் ரத்து, சேவைகள் குறைப்பு: பறக்கும் ரயில் சேவையை புறக்கணிக்கும் பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Beach ,Ulampur ,Dinakaran ,
× RELATED 16 ஆண்டுகால மக்களின் கனவு… வேளச்சேரி –...