×
Saravana Stores

ஆன்மிகம் பிட்ஸ்: திருமலையில் தீபாவளி ஆஸ்தானம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருவரங்கத்தில் தீபாவளி

திருவரங்கத்தில் மிக விசேஷமாக பெருமாள் தீபாவளியைக் கொண்டாடுவார். அதுவும், அவர் மாப்பிள்ளை பெருமாள் அல்லவா. அதனால், தன் மாமனாரான பெரியாழ்வாருக்கு சீர் செய்வார். இந்த உற்சவத்தை ஜாலி உற்சவம் அல்லது ஜாலி அலங்காரம் என்பார்கள். ஆயிரம், ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு கைலிகளில் மூட்டையாகக் கட்டி, மேளதாளங்கள் முழங்க, நாதஸ்வர இசை ஒலிக்க, வேத பாராயணத்துடன் பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பதே ஜாலி அலங்கார வைபவம் ஆகும். தீபாவளிக்கு முதல் நாள், மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார்.

கோயிலில் கைங்கரியம் செய்வோருக்கும், அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்ட பிரசாதமாக வழங்கப்படும். இரவு உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய்க் காப்பு அலங்காரம் செய்யப்படும். கோயிலில் உள்ள ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் அனுப்பி வைக்கப்படும். தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். ஆழ்வார்களும் ஆசாரியார்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு, கிளி மண்டபத்துக்கு வந்து நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள். காலை நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளி திருமஞ்சனம் கண்டருள்வார். அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார்.

விளக்கு மாடங்கள்

சுவர்களில் முக்கோண வடிவில் மாடங்கள் அமைக்கப்பட்டு அவற்றில் தீபங்கள் வைக்கப்படுகின்றன. முக்கோணம் திருமகளின் வடிவமாகும். எனவே இந்த மாடங்கள் முப்பட்டை வடிவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த அமைப்பு காற்றின் வேகத்தால் தீபங்கள் அணையாமல் காக்கின்றன. வரிசை வரிசையாக அமைந்த இத்தகைய மாடங்களில் தீபங்கள் பிரகாசிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். மதிற்சுவர்கள், திருக்குளங்களின் படிகள், கைப்பிடிச்சுவர்கள் என பல இடங்களில் பல வரிசைகளில் விளக்கு மாடங்கள் அமைக்கப்பட்டிருப்பதை தென்னகமெங்கும் காணலாம்.

விளக்குகள் இறைவனின் ஒளி வடிவம் என்பதால் அவற்றைத் தரையில் வைக்கக் கூடாது. மணையில் கோலமிட்டு அதன்மீது விளக்குகளை ஏற்றி வைத்து மலர்களைத் தூவி வழிபடுகின்றனர் கிராமிய வழிபாட்டில் பூசுணை அல்லது பூவரசு இலை மீது பசுஞ்சாண உருண்டையை வைத்து அதன்மீது விளக்கை ஏற்றி வைக்கின்றனர். பசுஞ்சாணம் லட்சுமியின் உறைவிடமாகும். ஸ்ரீசூக்தம் அவளை கர்ஷிணி சாணத்திலிருப்பவள்; ஆர்த்ராஈரமாக இருப்பவள் என்று துதிக்கிறது.

மேலும், அவள் அக்னியால் துதிக்கப்படுகிறது. மேலும், அவள் அக்னியால் துதிக்கப்படுபவள் என்றும் உலகிலுள்ள தீபங்களுக்கெல்லாம் வித்தாக இருப்பவள் என்றும் அது போற்றுகிறது. மங்கல தீபம் அஷ்ட மங்கலப் பொருட்களில் தீபமும் ஒன்றாகும். மங்கலச் சடங்குகளில் காமவர் தனி என்ற அப்சரப் பெண் திருவிளக்கை ஏந்தி நிற்கின்றாள். தரும சாசனக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள் ஆகியவற்றின் முகப்பில் தெய்வ உருவங்களும் அவற்றின் இருபுறமும் விளக்குகளும் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகற்களிலும்கூட விளக்குகள் புடைப்புச் சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளன.

திருமலையில் தீபாவளி ஆஸ்தானம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வெங்கடாசலபதி சந்நதிக்கு முன்பு உள்ள தங்கவாசலுக்கு அருகே கண்டா மண்டபத்தில் ஆஸ்தான பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். திருமலையில் தீபாவளியன்று பெருமாளுக்கு, தீபாவளி ஆஸ்தானம் நடைபெறும். இது மிகச் சிறப்பானது. தீபாவளிக்கு முதல் நாள் அன்று இரவு, மலையப்ப சுவாமி ஊர்வலமாக எழுந்தருளி காட்சி தருவார். பின்பு அங்குள்ள பக்தர்களுக்கு தைலம் வினியோகிக்கப்படும்.

அதை மறுநாள் காலையில் தலைக்குத் தேய்த்து, தலைக் குளியல் செய்துகொண்டு, திருவேங்கடமுடையானின் அருளைப் பெறவேண்டும். தீபாவளியன்று சுப்ரபாதம் தொடங்கி, முறையே முதல் மணி நிவேதனம் நடைபெறும். பின்பு தங்க வாயில் முன் ஏற்பாடு செய்த சர்வ பூபால வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருள்வர். இவற்றோடு ஜீயர் சுவாமி, பட்டு வஸ்திரங்களை வெள்ளித் தட்டில் கொண்டு வர, உடன் தேவஸ்தான அதிகாரிகளும் மங்கள வாத்தியங்கள் முழங்கபுறப்பட்டு கொடிமரத்தைச் சுற்றி வந்து ஆனந்த நிலைய விமானத்தை சுற்றி சமர்ப்பிப்பர்.

அன்று விசேஷமான தளிகை உண்டு. கிபி 1542-ஆம் ஆண்டு பொறிக்கப்பட்டு உள்ள திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளில், “திருப்பதி பெருமாளுக்கு தீபாவளியன்று அதிரசப்படி இரண்டு” என உள்ளது. இதன்மூலம், தீபாவளி பண்டிகையன்று, திருப்பதி பெருமாளுக்கு அதிரசம் படைக்கப்பட்டதாகத் தெரிகிறது.

தொகுப்பு: அருள் ஜோதி

The post ஆன்மிகம் பிட்ஸ்: திருமலையில் தீபாவளி ஆஸ்தானம் appeared first on Dinakaran.

Tags : Kungumam ,Anmikam ,Perumal ,Diwali ,
× RELATED ராம் சரண் தேஜா ஃபிட்னெஸ்