×

திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க லுங்கிகள் சிக்கியது

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்திய 2 பேர் பிடிபட்டனர். இவர்களில் ஒருவர் தங்கக் கலவையில் லுங்கியை முக்கி நூதன முறையில் கடத்தியுள்ளார். கேரளாவிலுள்ள திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்கள் வழியாகத்தான் துபாய், குவைத், சார்ஜா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிலேயே பெருமளவு தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. இதைத் தடுப்பதற்காக சுங்கத்துறை மற்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் கடத்தல் குறையவில்லை. பல்வேறு நூதன உத்திகளை கையாண்டு தங்கத்தை கடத்தி வருகின்றனர். மேலும் கடத்தலுக்கு விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை மற்றும் விமானநிலைய ஊழியர்களும் உடந்தையாக உள்ளனர்.

இந்நிலையில் நேற்று துபாயிலிருந்து திருவனந்தபுரம் வந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை உதவி ஆணையாளர் நந்தகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் திருவனந்தபுரம் கமலேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முகமது அப்சர் (28) என்ற பயணி 1959 கிராம் தங்கத்தை பிளாஸ்கில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கோழிக்கோட்டை சேர்ந்த சுகைப் (34) என்பவர் லுங்கியில் தங்கக் கலவையை முக்கி கடத்திக் கொண்டு வந்தார். இவரிடமிருந்து 10 தங்க லுங்கிகள் கைப்பற்றப்பட்டன. தங்கக் கலவையில் லுங்கியை முக்கி பின்னர் அதை காயவைத்து இவ்வாறு நூதன முறையில் கடத்திக் கொண்டு வந்துள்ளார். லுங்கியில் தங்கத்தை கடத்துவது கேரளாவில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இருவரிடமிருந்தும் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.

The post திருவனந்தபுரம் விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க லுங்கிகள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram airport ,Thiruvananthapuram ,Dinakaran ,
× RELATED சென்னை கத்திப்பாராவில் பூட்டு போட்டு...