அண்ணாநகர்: திருமங்கலத்தில் திருட்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து 42 கிராம் நகை மற்றும் 120 கிராம் வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் மூதாட்டி பத்மாவதி (71). இவர் கடந்த 5ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றிருந்தார்.
மறுநாள் இவரது வீட்டின் கதவை உடைத்து, பீரோவில் இருந்த 5 சவரன் நகை, 600 கிராம் வெள்ளி பொருட்கள் திருடுபோனது. இதுகுறித்து திருமங்கலம் போலீசில் பத்மாவதி புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த 8ம் தேதி வளசரவாக்கம் பகுதியில் பைக் திருட்டில் கைது செய்யப்பட்ட திருப்பத்தூரை சேர்ந்த ஆரிப் பிலிப் (54) என்பவர்தான், பத்மாவதி வீட்டில் நகை, வெள்ளி பொருட்களை திருடியிருப்பது தெரியவந்தது.
இதேபோல் கடந்த ஜூலை 5ம் தேதி திருமங்கலம் 100 அடி சாலையில் வில்லிவாக்கம், சிட்கோ நகரை சேர்ந்த மூதாட்டி ஸ்ரீலதா (65), மதுரவாயல் பகுதியை சேர்ந்த அமுதா (43) ஆகிய இருவரும் தனித்தனியே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 3 பேர் மர்ம கும்பல் வழிமறித்து 2 சவரன் சங்கிலியை பறித்து சென்றதாக புகார் அளித்தனர். திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நகை திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த விஜய் (எ) வெள்ளை விஜய் (22), பாலு (எ) பூபாலன் (23), சுஜித்ரன் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனுத்தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் கஸ்டடியில் எடுத்த ஆரிப் பிலிப், விஜய், பாலு, சுஜித்ரன் ஆகிய 4 பேரிடமும் தீவிரமாக விசாரித்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் 42 கிராம் தங்கம், 120 கிராம் வெள்ளி பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரித்த 4 பேரையும் நேற்று மாலை நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post திருமங்கலத்தில் திருட்டு வழக்கில் சிக்கிய 4 பேரிடம் 42 கிராம் தங்கம், வெள்ளி பறிமுதல் appeared first on Dinakaran.