×

தெம்பு தரும் சைவ நோன்புக் கஞ்சி!

இஸ்லாமிய நண்பர்களுக்கு மிகவும் புனிதமான மாதம் இந்த ரம்ஜான் மாதம். இந்த மாதத்தில் 30 நாட்கள் நோன்பிருந்து, 31வது நாளில் ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் கொண்டாடுவார்கள். அதிகாலை 3.30 மணிக்கெல்லாம் எழுந்து சஹர் எனப்படும் அதிகாலை உணவை அருந்துவார்கள். அதிகாலை 4.30 மணிக்குள்ளாக இந்த சஹரை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்கு பிறகு தண்ணீர் கூட அருந்தாமல் நோன்பைக் கடைப்பிடிக்க வேண்டும். மாலை 6.30 வரை இந்த நோன்பு நீடிக்கும்.

கிட்டத்தட்ட 14 மணி நேரம் உண்ணாமல் பருகாமல் ஒரு மாதத்துக்கு இதுபோல் நோன்பைக் கடைப்பிடிப்பார்கள். நோன்பை துறக்கும்போது, சில குளிர்ச்சியான பானங்களை அதிகம் எடுத்துக்கொள்வார்கள். இதற்கு காரணம், நோன்பால் உடல் உஷ்ணம் அதிகரிப்பதுதான். இப்படி உடல் உஷ்ணத்தை குறைக்கும் பானங்களில் நோன்புக் கஞ்சி மிகவும் முக்கியத்துவமானது. இது இல்லாமல் இஃப்தார் (நோன்பு துறத்தல்) விருந்து முழுமை அடையாதது போலத்தான் தெரியும். அதனாலேயே இதை அனைத்து மசூதிகளிலும் 30 நாட்களும் செய்கிறார்கள்.

இதற்காக ஒவ்வொரு மசூதிக்கும் தமிழகஅரசு இலவசமாக அரிசி வழங்குகிறது. இந்த நோன்புக் கஞ்சியை மசூதிக்கு சென்று மக்கள் பெற்றுச் செல்வார்கள். முஸ்லிம்கள் மட்டுமின்றி மற்ற சமூகத்தினரும் நோன்புக் கஞ்சியை விரும்பி வாங்கிச் செல்வார்கள். இந்த நோன்புக் கஞ்சியானது, உடல் உஷ்ணத்தை குறைப்பது மட்டுமின்றி உடல் வலுவுக்கும் உதவுகிறது. நோன்புக் காலங்களில் உடல் சோர்ந்து போகாமல் இருப்பதற்காகவும் இதை அருந்துவார்கள். மேலும் இதன் ருசிதான் மக்களை அதிகம் ஈர்க்கும் விஷயமாக இருக்கிறது. இத்தகைய பலன்களை கொண்ட நோன்புக் கஞ்சியை நம் வீட்டிலேயே கூட தயாரிக்கலாம். அதற்கான செய்முறையை இங்கு பார்க்கலாம்.

சுவையான நோன்புக் கஞ்சி குடிக்கலாமா?

தேவை

பச்சரிசி – 1 கப்
பாசிப் பருப்பு – 1/2 கப்
கடலைப் பருப்பு – 1/2 கப்
துவரம் பருப்பு – 1/2 கப்
சின்ன வெங்காயம் – 8
பட்டை – 1
கிராம்பு – 4
தக்காளி – 1
இஞ்சி – சிறிதளவு
பூண்டு – 10 பல்
வெங்காயம் – 1 (மீடியம் அளவு)
கேரட் – 1 (சின்னதாய் நறுக்கியது)
மல்லிக்கீரை – தேவைக்கேற்ப
பச்சை மிளகாய் – 3
கெட்டியான தேங்காய்ப்பால் – 1 கப்.

செய்முறை

முதலில் அரிசி, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு ஆகியவற்றை அரை மணி நேரம் ஊறவைக்க வேண்டும். ஒரு கடாயில் பாசிப்பருப்பை நன்கு வறுக்க வேண்டும். பிறகு, ப்ரஷர் குக்கரில் பச்சரிசி, வறுத்த பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, வெங்காயம், தக்காளி, நறுக்கிய இஞ்சி, 10 பல் பூண்டு, வெங்காயம், பச்சை மிளகாய், மல்லிக்கீரை, கேரட் ஆகிய அனைத்தையும் சேர்த்து 8 கப் தண்ணீர் விட்டு 4 முதல் 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.பின்னர், அடுப்பை சிம்மில் போட்டு இன்னொரு 5 விசில் வரும்வரை காத்திருக்கவும். தேவைக்கேற்ப, கஞ்சி பதமாக வரும்வரை சிம்மில் கொதிக்கவிடுங்கள். பிறகு, அதனை தேங்காய்ப் பாலுடன் சேர்த்து கிளறிவிட்டு 5 நிமிடம் கொதிவந்த பின் அடுப்பை அணைத்துவிடுங்கள். பின்னர் ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, பட்டை , கிராம்பு போட்டு மல்லிக்கீரை தேவைக்கேற்ப சேர்த்து தாளிக்க வேண்டும். இந்த தாளிப்பை தயார் நிலையிலுள்ள கஞ்சியில் சேர்த்து ஒருமுறை கிளறினால், கம கமனு ருசியான நோன்புக் கஞ்சி ரெடி.அசைவ சத்துக்கள் சுவை தேவைப்பட்டால் இத்துடன் மட்டன் எலும்புக் கறி அல்லது கைமாவையும் சேர்த்து வதக்கி கொதிக்க வைத்துக் கொள்ளலாம். கூடுதல் ருசியாக இருக்கும்.

  • ஜெய

The post தெம்பு தரும் சைவ நோன்புக் கஞ்சி! appeared first on Dinakaran.

Tags : Ramzan ,
× RELATED ரம்ஜான் விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்