×

தாளிசப்பத்திரியின் மருத்துவ குணங்கள்!

நன்றி குங்குமம் டாக்டர்

உலகிலேயே வாசனைப் பொருட்கள் தயாரிப்பிலும், பயன்படுத்துவதிலும் ஏற்றுமதி செய்வதிலும் இந்தியா முதலிடம் வகிக்கிறது. வாசனை தரும் தாவரங்களை கண்டறிந்து பயன்படுத்துவதில் இந்தியர்களுக்கு தனிச்சிறப்பு உண்டு.இந்த வாசனைப் பொருட்கள் எல்லாம் வெறும் வாசனை தருதல் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் தேர்வு செய்யப்படவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒவ்வொரு வாசனை தரும் தாவரங்களும், பலவித மருத்துவ பண்புகள் கொண்டவை ஆகும். அந்த வகையில் தாளிசப்பத்திரி(பிரியாணி இலை) என்ற வாசனைத் தாவரம் எவ்வகைகளில் நமக்குப் பயன்படுகின்றன என காணலாம்.

தாயகம்

தாளிசப்பத்திரி இந்தியாவில் பயிராகி வரும் ஒரு பழமையான தாவரமாகும். இமாலயப் பகுதியே இத்தாவரத்தின் தாயகமாகும். மற்றும் வடஇந்திய பகுதிகளான, காசி, வங்காளம் போன்ற இடங்களில் இம்மரம் காணப்படுகிறது. மேலும் கேரள மாநிலம், குமரி மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் இத்தாவரம் காணப்படுகிறது.

அந்தக்காலத்தில், நம் முன்னோர்கள், இம்மர இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்நீரை எங்கும் தெளித்து மணமூட்டி உள்ளனர். அதுபோன்று, அந்தகாலத்திலேயே இதன் இலைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாவர அமைப்பு

தாளிசப்பத்திரி மரம் சுமார் 7 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளர்கிறது. இதன் இலைகள் மணமுடையதாக தடிப்பாகக் காணப்படும். சிறுகிளைகளோடு, இலைகளை மடக்கினால் ஒடியும் தன்மை கொண்டதாக உள்ளது. இத்தாவரத்தின் இலைப்பகுதியே மணமூட்ட அதிகமாகப் பயன்படுகிறது. அதற்கு காரணம், இதில் வேதிப் பொருட்களும், ஆல்கலாய்டுகளும் நிறைய உள்ளன. மேலும், இதில் அடங்கியுள்ள டாக்சைடு என்ற ஆல்கலாய்டும், ஒரு வகையான எண்ணெயுமே இதன் சிறப்பு மணம் மற்றும் குணத்திற்கு காரணமாக அமைகிறது.

சுமார் பத்து ஆண்டு ஆன மரங்களிலிருந்து மட்டுமே இலைகள் பறிக்கப்படுகிறது. அப்படி பறிக்கும் இலைகளை பனிவிழும் நேரத்தில் கட்டைவிரல் அளவுடைய இலைகளாக வெட்டி, ஓரிரு மாதங்கள் பனியிலேயே போட்டு உலர வைக்கிறார்கள். பின்னர், இலைகள் பதத்திற்கு வந்ததும் மூங்கில் பாய்களில், பனை ஓலை பெட்டிகளில் கட்டப்பட்டு விற்பனை செய்யப்படும். இதன் தாவரவியல் பெயர் சினோமோமம் டமலா என்பதாகும். இது லாரேசியே என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது. இதற்கு தமாலபத்திரி, லவங்கப்பத்திரி, பிரியாணி இலை, பட்டை இலை, மலபார் இலை, தெரளி இலை போன்று பல பெயர்களைக் கொண்டுள்ளது.

மருத்துவ குணங்கள்

இந்த இலையில் ஆன்டி – ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் ப்ளேவோனாய்டுகள், கனிமச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், காப்பர், மாங்கனீசு, செலினியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவையும் அதிகம் நிறைந்துள்ளது. எனவே, இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்த மருத்துவம் மற்றும் யுனானி மருத்துவ முறைகளில் தாளிசப்பத்திரி மருந்தாகப் பயன்படுகிறது. இதன் இலைகள், பட்டை போன்றவை சூரணமாக மற்றும் கசாயமாகப் பயன்படுகிறது. இதற்கு கபமகற்றி, புழுக்கொல்லி, வயிற்று செயலூக்கி, பசியூக்கி போன்ற தன்மைகளுண்டு.

பயன்கள்

தாளிசப்பத்திரி இலைகள் ஒரு வகையான இனிப்பு செய்யப் பயன்படுகிறது. இனிப்பு மிகுந்த மாவைப் பிசைந்து, உருண்டைகளாக்கி, இவ்வுருண்டைகளை இந்த இலைகளில் பொதிந்து வேகவைப்பர். இது தெரளி கொழுக்கட்டை எனப்படுகிறது. இது மிகவும் சுவையாக, மணமாக இருக்கும். கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் திருக்கார்த்திகை நாளன்று இந்த இனிப்பு செய்யப்படுகிறது.

இலைகளிலிருந்து ஒரு வகையான மணமுடைய தைலம் எடுக்கப்பட்டு மருந்தாகப் பயன்படுகிறது.மேலும் ஒரு வாசனை எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது பிஸ்கட், ரொட்டி, மதுவகை தயாரிப்பில் பயன்படுகிறது.காஷ்மீரில் இவ்விலைகளை வெற்றிலை போல பயன்படுத்துகிறார்கள்.இலைகளை உலர வைத்து பொடியாக்கி, தேனில் குழைத்து உண்ண இருமல் தீரும்.இலைக்கஷாயம் வயிற்றுப் போக்கை குணப்படுத்தும்.

இலைப்பொடி காய்ச்சலை குணமாக்கும்.இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, வாய் கொப்பளித்து வர பல்வலி குணமாகும். வாய்மணமாகும்.இதன் பட்டையும் மணமுடையதாகும். இதிலிருந்தும் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இதன் இலைகளோடு, திப்பிலி, மிளகு, இஞ்சி, ஏலம் சேர்த்து தயாரிக்கப்பட்ட மருந்து ஆஸ்துமா, இருமல், பசியின்மையைப் போக்கும். இதன் நறுமணம் பசியைத் தூண்டுகிறது. வயிற்று செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. ஜீரணத்தை மேம்படுத்துகிறது.

The post தாளிசப்பத்திரியின் மருத்துவ குணங்கள்! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,India ,Dinakaran ,
× RELATED உடல் சூட்டை தணிக்கும் எண்ணெய் சிகிச்சை!