×

புற்றுநோயோடு போராடிய மருத்துவர்!

நன்றி குங்குமம் டாக்டர்

சாதனைப் பெண் பிரியங்கா பாகிடி!

நோய் எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனால், மருத்துவம் கற்றுவிட்டு நோயை மக்களிடமிருந்து விரட்ட வேண்டும் என்ற கனவுகளோடு இருக்கும் மருத்துவருக்கே நோய் வந்தால் எப்படி ஒரு மனநிலை இருக்கும். மருத்துவம் படித்து முடித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்த தருணத்தில், திடீரென, அக்யூட் மயலாய்ட் லுக்குமியா எனும் ரத்தப்புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு வாழ்க்கையே முடிந்துவிட்டது என்று நினைத்த 28 வயது இளம் பெண்ணான பிரியங்கா பாகிடி தனக்கு ஏற்பட்ட புற்றுநோயை எதிர்த்து போராடி, ஃபீனிக்ஸ் பறவையை போன்று மீண்டு வந்திருக்கிறார். அவர் தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்களையும், அனுபவங்களையும் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

‘2022-இல் மருத்துவத்தில் மேற்படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி மருத்துவராக இருந்தேன். 2023-இல் தீபாவளி சமயம், திடீரென ஒருநாள் காய்ச்சல் வந்தது. நான் சாதாரண காய்ச்சலாக இருக்கும் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால், அதற்கு முன்பு கடந்த பத்து ஆண்டுகளில் ஒருநாள் கூட காய்ச்சல், தலைவலி என படுத்ததே இல்லை. அதனால், அந்த காய்ச்சலும் சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால், இரண்டு நாளாக காய்ச்சல் தொடர்ந்தது. சூடு குறையவே இல்லை. அதனால், டைபாய்டாக இருக்குமோ என்று தோன்றியது. ரத்த பரிசோதனை செய்தேன். டெங்கு பாஸிடிவ் என்று வந்தது. அதே சமயம், உடலில் இருக்க வேண்டிய ரத்த பிளேட்லெட் அளவு மிகவும் குறைவாக இருந்தது.

நான் ஒரு மருத்துவர் என்பதால், எனக்கு சந்தேகம் எழுந்தது. நான் நல்ல ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன். அப்படியிருக்க, இந்தளவிற்கு எனது பிளேட்லெட் குறைய என்ன காரணமாக இருக்கும் என்று. அதனால், மீண்டும் வேறு ஒரு ரத்த பரிசோதனைக் கூடத்திற்கு சென்று மறு சோதனை செய்து பார்த்தேன். அப்போதும், பிளேட்லெட் அளவுக் குறைவாகதான் இருந்தது. எதனால், என் ரத்தத் தட்டுக்களின் அளவு குறைந்தது என்பதை தெரிந்து கொள்ள வேறு ஒரு பரிசோதனை செய்து பார்த்தேன். அதில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுவதாக குறிப்பிட்டு இருந்தார்கள். அதை பார்த்ததும்.

எனக்கு அக்யூட் மயலாய்ட் லுக்குமியா (ஏஎம்எல்) எனும் புற்றுநோயாக இருக்குமோ என சந்தேகம் வந்தது. அதனால், உடனடியாக என் அப்பாவுக்கு போன் செய்தேன். “அப்பா எனக்கு லுக்குமியா புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறது” என்றேன். அவருக்கு லுக்குமியா என்பதன் அர்த்தம் புரியவில்லை. “நீ என்ன சொல்லுகிறாய்” என்றார், எனக்கு ரத்தப் புற்றுநோய் போன்று இருக்கிறது என்றேன். அவர் நம்பவே இல்லை. நான் விளையாடுவதாக நினைத்து சத்தம் போட்டார். சிறிது நேரம் கழித்துதான் நான் ஏதோ சீரியஸாக சொல்கிறேன் என்பதை உணர்ந்தார்.

பொதுவாக புற்றுநோய்களில் அதிக ஆபத்தானது ரத்தப்புற்றுநோய், அதிலும் அக்யூட் மயலாய்ட் லுக்குமியா என்பது இன்னும் கூடுதல் ஆபத்தானது. இந்த புற்றுநோய் குறுகிய காலத்தில் தோன்றி, உடனடியாக ஆபத்தான கட்டத்துக்கு சென்றுவிடும். அதுதான் அக்யூட் என்பதாகும். மற்ற புற்றுநோய்கள் கிரானிக்கல் வகையை சார்ந்தது, அவை பல ஆண்டுகளாக உடலில் இருப்பதற்கான அறிகுறியே சிலருக்கு தென்படாமல்கூட இருக்கும்.

நான் கூகுள் செய்து பார்த்தேன். அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில், ஏஎம்எல் வந்தவர்களின் சர்வைவல் 18 சதவீதம்தான் காண்பித்தது. அப்படியென்றால், நான் உயிர் வாழ்வதற்கு 18 சதவீதம் மட்டுமே வாய்ப்பு இருக்கிறது என்பதை புரிந்து கொண்டேன். அதனால், சிகிச்சை மேற்கொள்ளலாமா வேண்டாமா பயன் இருக்குமா என்று தோன்றியது. அப்பாவிடம், கேட்டேன். ஒரு சதவீதம் இருந்தாலும் சிகிச்சையை மேற்கொண்டே ஆக வேண்டும் என்றார். உனக்கு 18 சதவீதம் இருக்கு. அதனால் பயப்பட வேண்டாம் என்றார். அப்பா பயத்தில் ஏதோ உளறுவதாக நினைத்தேன்.

நான் வீட்டுக்கு திரும்பினேன். ஆனால், அம்மாவிடமோ, அண்ணனிடமோ எதுவும் சொல்லவில்லை. எனது அறைக்குச் சென்றதும் என்னை மீறிய ஒரு அழுகை வந்தது. நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன். எனக்கு ஏன் இப்படி ஒரு நோய் வந்தது. நான் அசைவம் கூட சாப்பிட மாட்டேன். எந்த கெட்ட பழக்கமும் இல்லை. பின்னர், எனக்கு எப்படி வந்தது என அழுதேன். என் அம்மாவும், அண்ணனும், டெங்கு காய்ச்சல் தானே அதற்கு ஏன் இவ்வளவு அழுகிறாய். எல்லாம் நாலு நாள்களில் சரியாகிவிடும் என்று சொன்னார்கள். ஆனால், எனக்கோ எனது வாழ்க்கையே முடிந்துவிட்டதாக தோன்றியது.

நான் மருத்துவத்தை மிகவும் நேசித்து படித்தேன். மக்களுக்கு என்னால் ஆன சேவைகளை செய்ய வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் நான் படித்தது எல்லாம் வீணாகிவிடுமோ என தோன்றியது. எனக்கு என் உயிர் போய்விடும் என்பதை விட, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நான் கண்ட கனவு எல்லாம் கலைந்து போனது வருத்தமாக இருந்தது. அன்று இரவு முழுவதும் எவ்வளவு அழ வேண்டுமோ அவ்வளவு அழுது தீர்த்தேன்.

பின்னர், ஒருகட்டத்தில், நான் ஏன் அழ வேண்டும் என்று தோன்றியது. ஒரு மருத்துவராக இருந்துகொண்டு நானே அழுவது சரியாக இருக்குமா, அதனால் முடிந்தளவு இந்த நோயை எதிர்த்து போராட வேண்டும் என்று நினைத்தேன். மேலும், நான் வணங்கும் சிவன் என்னை கை விட மாட்டார் என நம்பினேன். ஏனென்றால், நான் ஆழ்ந்த சிவபக்தை. அதனால் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு, என் அழுகையை எல்லாம் மூட்டைக் கட்டி வைத்துவிட்டு, அப்பாலிடம் எனக்கு உடனடியாக ஒரு தேர்ந்த மருத்துவரை அணுகவேண்டும். சிகிச்சையை தொடங்க வேண்டும். அதனால், விசாரித்து சொல்லுங்கள் என்றேன். அப்பாவும், அவரது மருத்துவராக இருந்த நண்பரிடம் ஆலோசனைப் பெற்றார்.

அவர், அப்போலோ புற்றுநோய் மருத்துவமனையில் சீனியர் மருத்துவராக இருந்த மருத்துவர் டி. ராஜாவை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான், அவரை சென்று சந்தித்தேன். அவர் உடனடியாக பயாப்ஸி எடுத்து பார்த்துவிட்டு உறுதி செய்தார். உடனடியாக என்னை மருத்துவமனையில் அட்மிட் செய்தார். அப்போதுதான் அம்மாவுக்கு விஷயத்தை சொன்னோம். வீட்டில் அனைவரும் உடைந்து போய்விட்டார்கள். இருந்தாலும் என் எதிரே எதையும் வெளிப்படுத்தாமல், மனதிற்குள்ளேயே வலியை மறைத்துக் கொண்டு, எனக்கு தைரியத்தை சொல்லிக் கொண்டே இருந்தார்கள். உடனடியாக எனக்கு சிகிச்சையை தொடங்கினார்கள்.

ஒரு மூன்று விஷயங்கள் எனக்கு நம்பிக்கை கொடுத்தது. முதலாவது நான் வணங்கும் சிவன் என்னை கைவிட மாட்டார். எனக்கு உறுதுணையாக இருந்து என்னை காப்பாற்றுவார். அடுத்தது எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் மீதான நம்பிக்கை. மூன்றாவதாக என் குடும்பத்தின் மீதான நம்பிக்கை, அவர்களின் ஆதரவும், வழிபாடும் என்னை நிச்சயம் காப்பாற்றும் என்று நம்பினேன். அடுத்த இரண்டாவது நாளில் என் நுரையீரல் எல்லாம் அடைக்கத் தொடங்கியது. உடனடியாக என்னை ஐசியூவுக்கு மாற்றினார்கள். அதன்பிறகு உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. வெளி ஆட்களின் மூச்சுக் காற்றுக் கூட என் மேல் படாதவாறு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது. கீமோ தெரபி தொடங்கினார்கள்.

கீமோ தெரபி தொடங்கிய ஏழு நாள்கள் வரை பெரிதாக பிரச்னை எதுவும் தெரியவில்லை. அதன்பின்னர், ஒவ்வொரு பிரச்னையாக தொடங்கியது. என் கை, கால்களை அசைக்க முடியாத நிலை, எலும்புகள் எல்லாம் பலம் இழந்துவிட்டது. என்னால் எழுந்து உட்காரவோ, நிற்கவோ முடியாமல் போனது. எனது படுக்கையின் துணியை மாற்ற வேண்டும் என்றாலும், என்னை யாரும் கைகளால் தூக்க முடியாது. ஒரு படுக்கை விரிப்பில் கிடத்திதான் என்னை தூக்க முடியும். முடி எல்லாம் கொட்ட தொடங்கியது. என் முகமெல்லாம் கறுத்துப் போனது. எனக்கு டயப்பர் மாற்ற வேண்டும் என்றாலும் குறைந்தபட்சம் ஆறு பேர் தேவைப்பட்டார்கள். என்னிடம் அசைவே கிடையாது. நான் உயிரோடு இருக்கிறேன் என்பதையே மானிட்டர் பார்த்துதான் அம்மா தெரிந்து கொண்டார். 20 நாள்கள் இப்படிதான் சென்றது.

பின்னர், 22-வது நாளில் எனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்க தொடங்கியது. நான் சற்று தேற ஆரம்பித்தேன். பின்னர், படிப்படியாக தேறினேன். என்னை நார்மல் வார்ட்டுக்கு மாற்றினார்கள். அப்போது, குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டும் அம்மாவை அனுமதித்தார்கள். ஒரு நாள் அம்மாவிடம் என் தலையை சீவிவிட சொன்னேன். அம்மா சீப்பை தலையில் வைத்ததும், என் முடி கொத்தாக அப்படியே கழன்று வந்து அந்த இடமே வழுக்கையாகி விட்டது. ஆனால், அம்மா எந்தவித முகபாவனையும் என்னிடம் காட்டாமல், நார்மலாக பேசிக் கொண்டே அந்த முடியை எனக்கு தெரியாமல் மறைத்துவிட்டார்.

நான் இருந்த அறையில் கண்ணாடி எதுவும் இல்லாததால், நான் எப்படி இருக்கிறேன் என்பதே எனக்கு தெரியவில்லை. கொஞ்சம் கொஞ்சம் முடியெல்லாம் உதிர்ந்து தலை மொட்டை ஆகிவிட்டது. முகமெல்லாம் கறுத்து, தசைகள் எல்லாம் தளர்ந்து, 28 வயது இளம் பெண்ணான நான் 80 வயது பாட்டியைப் போன்று மாறிவிட்டது.

என் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் மாறி மாறி எனக்கு சேவைகள் செய்தார்கள். அம்மாவும், அப்பாவும் என் கால்களை பிடித்து விடுவதும், கைகளை அமுக்கி விடுவதுமாக இருந்தார்கள். அவர்களை அமர வைத்து சேவை செய்ய வேண்டிய வயதில் அவர்கள் எனக்கு சேவை செய்வதை நினைத்து மிகவும் கவலையாக இருக்கும்.

பின்னர், நான் சற்று தேறியதும், வீட்டுக்கு அனுப்பினார்கள். அவ்வப்போது வந்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் என்றார்கள். சுமார்6 மாத போராட்டத்துக்கு பின் நான் ஒரு வழியாக வீட்டிற்கு வந்தேன். அதுவரை, என் உருவம் எப்படி இருக்கிறது என்பதை நான் கண்ணாடியில் பார்க்கவேயில்லை. வீட்டிற்கு வந்ததும் கண்ணாடியில் என் உருவத்தை பார்த்து அதிர்ந்து போனேன். இது நான்தானா அல்லது வேறு யாருமா என்று. என் கண்களில் இருந்து நீர் கொட்டியது. நான் சத்தம் போட்டு அழவில்லை. கண்களை அப்படியே துடைத்துக் கொண்டேன். ஏனென்றால், என் சோகம் எங்கே என் பெற்றோரை தாக்கிவிடுமோ என நினைத்தேன். பின்னர், விக் ஒன்றை மாட்டிக் கொண்டு வெளியே வந்தேன்.

இப்போது நான் நன்கு குணமாகிவிட்டேன். என் பழைய உருவம் எனக்கு மீண்டும் வந்துவிட்டது. இருந்தாலும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறேன். தற்போது தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணி செய்து வருகிறேன். நான் இன்னும் உயிர் வாழ வேண்டும் என்று கடவுள் நினைத்தார் போலும், அதுதான் நான் இப்போது உயிரோடு இருக்கிறேன்.

இதில் நான் செய்த ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், உடலில் பிரச்னை என்று தெரிந்ததும். சோர்ந்து போய், உடைந்து போய் உட்கார்ந்து விடாமல் உடனடியாக தேர்ந்த மருத்துவரை தேடி மருத்துவ சிகிச்சையை தொடங்கியதுதான். நான் கொஞ்சம் தாமதித்திருந்தாலும், இன்று நான் இப்படி பேசிக் கொண்டு இருந்திருப்பேனா என்று தெரியாது. அதனால், நான் மக்களுக்கு சொல்ல வேண்டும் என்று நினைப்பதெல்லாம், உடலில் ஏதாவது அறிகுறி தென்படுகிறது.

அது தொடர்ந்து 15 நாள்கள் அல்லது ஒரு மாதத்திற்கு மேல் இருக்கிறது என்றால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுங்கள். இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதனால் நான் என் வாழ்க்கையில் சந்தித்து மீண்டு வந்த விஷயங்களை எல்லாம் சன்சைன் அட் த பென்ட் (Sunshine at the Bend) என ஒரு புத்தகமாக எழுதி சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறேன்’எனும் மருத்துவர் பிரியங்கா பாகிடியின் குரலில் அத்தனை தன்னம்பிக்கை.

தொகுப்பு: ஸ்ரீதேவி குமரேசன்

The post புற்றுநோயோடு போராடிய மருத்துவர்! appeared first on Dinakaran.

Tags : Saffron ,Sendai Girl ,Priyanka Bhakidi ,Dinakaran ,
× RELATED தற்கொலை எண்ணம் தவிர்ப்போம்!