×

ஆயுர்வேதத் தீர்வு!

நன்றி குங்குமம் டாக்டர்

மூக்கடைப்பு

சுவாசித்தல் மனித வாழ்வின் ஆதாரமாக விளங்குகிறது. இது ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சம், சுவாசப்பாதைகளில் வரும் அடைப்பு நம் அன்றாட வாழ்க்கை முறையில் பெரும் பாதிப்பை உண்டாக்கும். ஆகையால், அதனை விரைந்து கவனித்து சிகிச்சை அளிப்பது மிகவும் அவசியம்.நம்மில் சிலருக்கு ஒரு நிரந்தர பிரச்னையாக இருக்கக்கூடிய ஒரு நோய் அல்லது அறிகுறி என ஒன்று உண்டு என்றால் அது இந்த மூக்கடைப்பு நோய் எனலாம். அதைப்பற்றி இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

மூக்கு அடைப்பு என்பது பொதுவாக மூக்கின் உட்பூச்சில் உள்ள சவ்வுகளில் இருக்கும் ரத்த நாளங்கள் வீக்கமடைவதால் உண்டாகும் அடைப்பு. இது பலருக்கும் இருக்கக்கூடிய பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும். இந்நிலை பொதுவாக சிறு நோயாக இருப்பதோடு மருந்து ஏதுமின்றி குறுகிய காலத்திலேயே குணமாகக் கூடியது. இது அனைத்து வயதுடைய மக்களையும் பாதிக்கக்கூடியது, குறிப்பாக குழந்தைகளில் மிக பொதுவாக இருக்கக்கூடியது இது பெரும்பாலும் இருமல் அல்லது சளி போன்ற பிற நோய்களை சார்ந்த நிலையாகும். இது நமது கேட்கும் திறனையும், பேசும் திறனையும் கூட பாதிக்கலாம். பெரும் சமயங்களில் நமது தூக்கத்தையும் கெடுத்து, குறட்டை விடுவதையும் உண்டாக்கும்.

மூக்கடைப்பின் காரணங்கள்

மூக்கடைப்பு உண்டாக பலகாரணிகள் உள்ளன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று ஒவ்வாமை. ஒவ்வாமையினால் வரும் மூக்கடைப்பு நம்மில் 35 சதவீதம் முதல் 45 சதவீதம் பேருக்கு வரக்கூடும். நோய்த்தொற்றினால் வரும் சளி. குளிர்காய்ச்சல் போன்ற நோய்களினால் மூக்கடைப்பு வரலாம். மூக்கில் ரத்தநாளங்கள் உள்ளதால் அங்கு கிருமித் தொற்று ஏற்படும்போது மூக்கு சுவர்களுக்கு ரத்தம் அதிகமாக பாய்ந்து நாசி மத்தியில் வீக்கம் வர காரணமாகி அதுவே மூக்கடைப்பை ஏற்படுத்தலாம். புரையழற்சியினால் (sinusitis) வரும் மூக்கடைப்பு அடிக்கடி ஏற்படும் ஒரு நிலை. இது மூக்கைச் சுற்றியுள்ள எலும்புகளில் உள்ள வெற்று காற்று இடைவெளிகளின் வீக்கத்தால் வரும் நோய் ஆகும்.

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளை மற்றும் 25 முதல் 64 வரை வயதுடைய பெரியவர்களுக்கு, குறிப்பாக வயதான பெண்களுக்கு இது ஏற்படுகிறது. புரையழற்சியின் ஒரு அறிகுறியாகவும் மூக்கடைப்பு ஏற்படலாம்.மூக்கடைப்புக்கு மற்றொரு முக்கியமான காரணம் நேசல் பாலிப் என்கிற சதை வளர்ச்சி. இது மூக்கின் உட்பூச்சில் வளரக்கூடிய மென்மையான, வலியில்லாத, திசு போன்ற பாதிப்பில்லாத கட்டி ஆகும்.

இவை பொதுவாக பாதிப்பில்லாதவைகளே, ஆனால் சிகிச்சையளிக்க தவறிவிட்டால், மூக்கில் அடைப்பை ஏற்படுத்துவதோடு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படவும் காரணமாக இருக்கலாம். இந்நிலை, மக்கள் தொகையில் 4 சதவீதம் பேரை பாதிக்கிறது. இத்தகைய பாலிப்பின் வளர்ச்சி 1000 பேரில் ஒன்றிலிருந்து 20 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்துவது சாத்தியமே. அதோடு 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கிறது.

பாலிப்கள் ஏற்பட மூக்கின் நடுத் தண்டுவடப் பகுதி வளைந்திருப்பது (டிவியேட்டட் நேசல் சப்டம்), சாதாரண சளி, அலர்ஜி, பாக்டீரியா வைரஸ் மற்றும் பூஞ்சைத் தொற்றுகள், ஆஸ்துமா, சைனசைட்டிஸ் போன்ற பல காரணங்கள் உண்டு. முதிர்ந்த நிலையில் இருக்கும் பாலிப்கள் சில நேரங்களில் சைனஸிற்குள் சென்று எலும்புகளை தாக்கவும் வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் அதிகப்படியான மூக்கடைப்பு நீக்கும் மருந்துகளின் உபயோகத்தினால் கூட மூக்கடைப்பு வரும்.

மூக்கடைப்பின் அறிகுறிகள்

மூக்கடைப்பு உண்டாகும் போது சுவாசிப்பதில் சிரமம் உண்டாகிறது. அதுவே மூக்கில் காற்றோட்டம் இல்லாத உணர்வை ஏற்படுத்தி நுகர் திறனை குறைக்கிறது. இதனால் வாசனையின்மை உருவாகி மேலும் சுவாச சிரமத்தை ஏற்படுத்துகிறது. இயல்பாக மூக்கடைப்பினால் இரவு நேரங்களில் தூக்கமின்மையும், ஏற்படுகிறது. பெரும்பாலும் மூக்கடைப்பு உண்டாகும்போது படுக்கவும் முடியாமல், நிற்கவும் முடியாமல் உட்காரவும் இயலாமல் மூச்சு விடுதலே சிரமத்துக்கு உள்ளாக்கும்.

மேலும் மூக்கு ஒழுகுதல், தலைவலி, கண்களில் நீர் வடிதல், தும்மல், சுவையின்மை, குறட்டைப் பிரச்னை ஆகியவையும் சில நேரங்களில் மூக்கில் ரத்தக் கசிவும் ஏற்படலாம். பெரும்பாலான மனிதர்களில் மூக்கடைப்பு தானாகவே தணிந்துவிடும். ஆனால் அது இருக்கும் தறுவாயில் பெரும் தொந்தரவாக இருக்கும். மூக்கடைப்பின் மூல நோய் காரணத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் சிகிச்சை அளித்தால் மூக்கடைப்பிலிருந்து விரைவில் குணமடையலாம்.

மூக்கடைப்பின் சிகிச்சை

நாசி நெரிசலைப் போக்க பல சுய உதவி யுத்திகள் உள்ளன. மூக்கடைப்பு ஏற்படும் பொழுது வீட்டிலேயே தைலம் காய்ச்சி உபயோகிக்கும் முறை இன்றும் பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது. அதில் ஒன்று கற்பூர தைலம். சுத்தமான தேங்காய் எண்ணெயில் சுத்தமான பச்சைக் கற்பூத்ரத்தை பொடித்து சேர்த்து நன்கு காய்ச்சி ஆறியபின் அதை மூக்கின் மேல் அல்லது கழுத்து மற்றும் மார்புப் பகுதியின் மேல் தடவும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் பின்பற்றப்படுகிறது.

ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை சுத்தமான நீலகிரித் தைலத்தை (யூகலிப்டஸ் எண்ணெய்) 2-3 சொட்டுக்கள் கலந்த நீராவியை உள்ளிழுத்தால் மூக்கடைப்புக்கு நிவாரணமும் நாசிக்குழாயில் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

ஆயுர்வேதத்தில் மூக்கடைப்பு

கபம் மூச்சுக் குழாயில் அடைபட்டிருப்பதால் வரும் ஒரு அறிகுறியாக ஆயுர்வேதத்தில் மூக்கடைப்பை பார்ப்பதால் கபத்தை நீக்கும் சிகிச்சை மற்றும் பிராண வாயுவை நிலைப்படுத்தும் மருந்துவமுறைகளைக்கொண்டு சிகிச்சையளிக்க நல்ல பலனைத் தரும். நிதான பரிவர்ஜனம் என்னும் காரணத்தை முதலில் தவிர்க்கும் வழிமுறை
களையே ஆயுர்வேதம் முதலில் அறிவுறுத்துகிறது. நோய்கள் பலவகையானாலும் அதற்கு காரணங்கள் பலவிதமானாலும் நிதான பரிவர்ஜனம் கடைப்பிடித்து நம் நோய் எதிர்ப்புச் சக்தியை ஒன்றாக வைத்துக் கொள்வதே தலையாய முறையாக ஆயுர்வேதம் கூறுகிறது.

இதனால்தான் கொரோனா போன்ற புதுப்புது வியாதிகள் அவ்வப்போது மனித இனத்தை பயமுறுத்தினாலும் ஆயுர்வேத தத்துவங்களும் சிகிச்சைகளும் மருந்துகளும் மிகவும் பயனுள்ளவைகளாகவே இருக்கின்றன. முக்கடைப்பிலும் இத்தகைய முறைகளை கையாள முழுமையான நிவாரணம் பெறலாம். ஆயுர்வேத சுத்திகரிக்கும் முறைகளில் சிலவற்றில் நசியம், தூம பானம், விரேசனம், கவனம், கண்டூஷம், ஷீரதும்மம் போன்ற மருத்துவமுறைகள் நல்ல பயனுள்ளவையாக விளங்குகின்றன.

உள் மருந்துகளாக தசமூல கடுத்ரயம் கஷாயம், வியாக்ராதி கஷாயம், நயோபாயம் கஷாயம் போன்ற கஷாயங்களும் தூதுவளை சூரணம், ஏலாதி சூர்ணம், திப்பிலி சூர்ணம் போன்ற சூர்ணங்களும் கஸ்துர்யாதி குளிகை, வியோஷாதி குளிகை, கோரோசனாதி குளிகை போன்ற குளிகைகளும் மூக்கடைப்பை போக்க உதவிகரமாக உள்ளன. வெளி மருந்துகளாக ராசனாதி சூர்ணம் வைத்து பத்துப் போடுவது நாசி நோக நாச தைலத்தை மூக்கில் சொட்டு விடுவது போன்றவை நல்ல பலனளிக்கக்கூடிய முறைகளாக இருக்கின்றது.

மூக்கடைப்பு வராமல் இருக்க நாம் பின்பற்ற வேண்டியவை

பருவகால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

குளிர்காற்றில் நடைப்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

உணவில் மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், துளசி, புதினா, சுக்கு, மல்லி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.

முக்கியமாக குளிர்காலத்தில் தூசி மூலமாக ஒவ்வாமை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

குடிநீரை நன்கு காய்ச்சி ஆறியபின் வெதுவெதுப்பாக பருகுதல் மிகவும் நல்லது.

பனிக்காலத்தில் வயதானவர்கள் அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொள்வதைத் தவிர்க்கலாம் அல்லது குளிர் தாக்காத வகையில் மஃப்ளர், ஸ்வெட்டர் அணிந்து கொண்டு நடக்கலாம். குடிக்கவும் குளிக்கவும் வெதுவெதுப்பான இளஞ்சூட்டில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தவும்.

ஃபிரிட்ஜில் வைத்திருக்கும் உணவுகளை அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இயல்பான வெப்பநிலைக்கு வந்தவுடன் அவற்றைப் பயன்படுத்தலாம்.

இப்பிரச்னை இருப்பவர்கள். பகல் நேரங்களைத் தவிர, அதிகாலை, மாலை நேரத்து்குப் பிறகு வெளியில் செல்வதை முடிந்தவரை தவிர்க்கலாம். மேலும், ஒட்டடை அடிப்பது, சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யாமலிருக்கலாம்.

தினமும் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது நல்லது. மூச்சுப்பயிற்சி, யோகா, தியானத்துக்கு தினசரி குறைந்தது 30 நிமிடங்கள் ஒதுக்கலாம்.

இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து செல்ல வேண்டும்.

மூக்கின் துவாரங்களை சற்று ஈரத்தன்மையாக வைப்பது நன்று. இதற்காக ஆயுர்வேதத்தில் மூச்சனம் செய்யப்பட்ட நெய்யை நமது விரல் கொண்டு இரண்டு மூக்கு துவாரங்களின் நுனியில் தடவிக் கொண்டு செல்லலாம் என்று தினசர்யம் என்னும் நாளியியல் பகுதியில் ஆயுர்வேதம் விளக்குகிறது அண்மையில், ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றில் கூட இதை ஆயுர்வேத மருத்துவர்கள் மக்களுக்கு அறிவுறுத்தினர்.

இதனால் மக்களும் பெரும் நன்மை அடைந்தனர்.வெந்நீரில் உப்பு கலந்து அதை வாயில் ஓரிரு நிமிடம் வைத்தோ அல்லது நன்கு கொப்பளித்தோ துப்புவதில் வாய் மற்றும் மூக்கில் உள்ள நுண்கிருமிகள் அழிக்கப்பட உதவும்.

நீச்சல் குளங்களில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவில் உறங்கும் போது தலையணையை சரியான அளவு பயன்படுத்தி வந்தோமேயானால் சுவாசம் சீராக இருந்து மூக்கடைப்பு, மூக்கில் சதைவளர்ச்சி போன்ற பிரச்னைகள் வராது.

ஆயுர்வேதத்தில் கூறப்படும் பிரதிமர்ச நசியம் என்னும் முறையை மேற்கொள்ளலாம். தினமும் இரண்டு சொட்டு அணுத் தைலம் போன்ற ஆயுர்வேத மருந்தை மூக்கின் துவாரம் வழியாக பயன்படுத்துவதன் மூலம் சளி மற்றும் அடைப்பை நீக்கி மூக்கின் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்கலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

The post ஆயுர்வேதத் தீர்வு! appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ?ஒருவருக்குச் செல்வம் சேரச்சேர...