சென்னை: தாய்லாந்து நாட்டிலிருந்து 15 அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் மற்றும் ஆப்பிரிக்க அணில் ஒன்றை சென்னைக்கு விமானத்தில் கடத்தி வந்த தமிழக பயணியை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம் நேற்று அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த சென்னையை சேர்ந்த 35 வயது ஆண் பயணி ஒருவர், 2 பெரிய பிளாஸ்டிக் கூடைகள் எடுத்து வந்தார். சுங்க அதிகாரிகளுக்கு அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், சுங்க அதிகாரிகள் அவருடைய கூடைகளை திறந்து சோதனை செய்தனர். அப்போது கூடைகளுக்குள் உயிருடன் பாம்பு குட்டிகள் நெளிந்து கொண்டிருந்தன. அதை பார்த்து பயணிகள் ஓடினர். ஆனால் விமான பயணியோ ரொம்ப கூலாக, இவை பாம்புகள் ரப்பர் பாம்புகள், விஷமற்ற விளையாட்டு பாம்புகள் தான் என்று கூறியபடி, பாம்பு குட்டிகளை எடுத்து தனது உள்ளங்கைகளில் வைத்து காட்டினார்.
இதுகுறித்து சுங்க அதிகாரிகள், சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்ற பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து அந்த பாம்புக் குட்டிகளை ஆய்வு செய்தனர். அதில் மொத்தம் 15 பாம்பு குட்டிகளும், ஆப்பிரிக்காவில் காணப்படும் அரியவகை அணில் ஒன்றும் இருந்தது. அந்த பாம்பு குட்டிகள் அனைத்தும் பால் பைத்தான் எனப்படும் அரிய வகை மலைப்பாம்பு குட்டிகள் என தெரியவந்தது. தொடர்ந்து ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு குற்றப்பிரிவு போலீசார் அந்த கடத்தல் பயணியிடம் விசாரணை நடத்தினர். குட்டிகளாக குறைந்த விலைக்கு வாங்கி வந்து அதிக விலைக்கு விற்கிறோம். இதன் மூலம் நோய்க்கிருமிகள் இருக்கக்கூடும் என்பதால், அவ்றை அந்த நாட்டுக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என்று சுங்கத்துறைக்கு, ஒன்றிய வனவிலங்கு பாதுகாப்பு துறை போலீசார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து சுங்க அதிகாரிகள், கடத்தல் பயணியை கைது செய்தனர். மேலும் இந்த 15 அரியவகை மலைப்பாம்பு குட்டிகளையும், அரிய வகை அணிலையும் மீண்டும் நாளை (இன்று) வெள்ளிக்கிழமை அதிகாலை சென்னையில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும், தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில் திருப்பி அனுப்பிவிட்டு, அதற்கான செலவுகளை கடத்தல் ஆசாமியிடம் வசூலிக்க முடிவு செய்துள்ளனர்.
The post தாய்லாந்திலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்ட மலைப்பாம்பு, அணில் பறிமுதல்: திருப்பி அனுப்ப நடவடிக்கை appeared first on Dinakaran.