×

தை மாதத்தின் சிறப்புகள்!

நன்றி குங்குமம் தோழி

தை பிறந்தா வழி பிறக்கும் தங்கமே தங்கம் என்ற பாடல் வரிகளுக்கேற்ப பல சிறப்புகளுடையது தை மாதம் ஆகும். மாதங்களில் “தை” மாதத்திற்கென்று ஒரு சிறப்பு உண்டு. சூரியனின் தேர்ப்பாதை வடதிசையில் மாறும் உத்தராயண காலத்தின் ஆரம்பமே தை மாத முதல் நாள். எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது என்பது பழங்காலத்தில் இருந்து தொன்று தொட்டு வரும் பழக்கம் ஆகும். அப்படிப்பட்ட தை மாதத்தின் சில சிறப்புகளை பார்ப்போம்.

தைப்பொங்கல்: தமிழ் சூரிய நாட்காட்டியின்படி தை மாதத்தின் தொடக்கத்தில் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் சங்க காலத்தில் இருந்து கொண்டாடப்படும் ஒரு பழமையான பண்டிகையாகும். சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டாடப்படுகின்றது.

மாட்டுப் பொங்கல்: பொங்கல் கொண்டாட்டத்தின் இரண்டாம் நாளன்று நம் விவசாயத்துக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுத் தொழுவத்திலேயே பொங்கல் வைத்து கால்நடைகளுக்கு பொங்கல், பழம் கொடுத்து மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.ரத சப்தமி: இந்து சமயத்தவர்களால் தை அமாவாசை நாளை அடுத்த ஏழாவது நாளில் சூரியக் கடவுளின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. சூரியன் தெற்கு நோக்கிய தட்சிணாயனம் பயணத்தை முடித்துக்கொண்டு ரத சப்தமியன்று வடக்கு நோக்கி உத்தராயணம் பயணப்படும் தினமே ரத சப்தமி ஆகும்.

தைப்பூசம்: தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம். அன்றைய தினம் தொடங்கும் நல்ல காரியங்கள் எதுவானாலும் சிறந்த பலனைக் கொடுக்கும் என்பது தொன்றுதொட்ட நம்பிக்கையாகும் உத்தராயண புண்ணிய காலம்: சூரியன் தென்திசையிலிருந்து வடதிசை நோக்கி பயணம் செய்யும் காலமே உத்தராயணம் எனப்படும். தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி எனும் ஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் என்றும் சொல்லப்படுகின்றது

மூன்று உற்சவங்கள்: தை மாதத்தில் மட்டும் ஒரு வாரத்தில் மூன்று உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக இம்மாதத்தில் தான் நான்கு முக்கியமான நாட்கள் உள்ளன. அவை தை புனர்பூசம், தைப்பூசம், தை மகம், தை ஹஸ்தம் ஆகும்.நீத்தார் கடன் வழிபாடு: தை அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் எனும் நீத்தார்கடன் வழிபாட்டை மேற்கொள்கின்றனர். ஆறு, குளம், கடல் போன்ற நீர் நிலைகளில் வழிபாடு மேற்கொள்வதன் மூலம், பாவங்கள் நீங்கி, குழந்தைப்பேறு, குடும்ப மகிழ்ச்சி போன்றன கிடைப்பதாகவும் நம்பப்படுகின்றது.

வீரபத்திர வழிபாடு: செவ்வாய்தோறும் ஓராண்டு காலம் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஓராண்டு வழிபட முடியாதவர்கள் தை மாதம் செவ்வாய்க் கிழமை மட்டுமாவது இவ்வழிபாட்டை கடைப்பிடிக்கலாம்.

தை திருநாட்களில் வீர சாகச விளையாட்டு நிகழ்ச்சி, ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம். இவை தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டு
களாக உள்ளன. மேலும் இம்மாதம் அறுவடை மாதம் என்பதால், ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில்தான் அறுவடை செய்யப்படுகிறது.

தொகுப்பு: பிரியா மோகன்

The post தை மாதத்தின் சிறப்புகள்! appeared first on Dinakaran.

Tags :
× RELATED கிச்சன் டிப்ஸ்