×

குடிசையில் வளர்ந்த பெண்ணின் சமூக சேவைகள்!

நன்றி குங்குமம் தோழி

‘ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் போம்’ என்றார் அறிஞர் அண்ணா. அதன்படியே ஏழையாக குடிசையில் பிறந்து வளர்ந்து, வறுமையில் வாடி வதங்கி, திறமையாக படித்து, கடும் உழைப்பால் இன்று வாழ்வில் உயர்ந்து இருக்கிறார் விஜயலட்சுமி. தான் பட்ட கஷ்டத்தினை மற்றவர்களும் பெறக்கூடாது என்பதால், சிவ பியூபில் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை துவங்கி அதன் மூலம் பல சேவைகளை செய்து வருகிறார். சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் விஜயலட்சுமி. ‘‘அப்பா ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அம்மா பெயர் மகாலட்சுமி. அவரின் பெயரில் மட்டும் தான் லட்சுமி இருந்தாளே தவிர எங்க வீட்டில் என்றும் வறுமைதான். நான் ஒரே மகள் என்றாலும், அப்பாவின் குறைந்த சம்பளத்தில் நாங்க வாழ்வதற்கே கஷ்டமாக இருந்தது. குடிசையில்தான் வசித்து வந்தோம். அம்மாவிற்கு அடிக்கடி உடல் நிலை சரியில்லாமல் போகும். அதற்கான மருத்துவ செலவுக்காக அப்பா ரொம்பவே கஷ்டப்படுவார்.

ஓட்டல் வேலையில் மட்டும் போதுமான வருமானம் இல்லாததால், மூட்டை தூக்குவது போன்ற உடல் உழைப்பு சார்ந்த வேலைகளையும் செய்து தான் எங்களை காப்பாற்றினார். அவர் எங்களுக்காக பட்ட கஷ்டத்தை நான் சின்ன வயசில் இருந்து பார்த்து இருக்கேன். அவர் வீட்டில் உடல் வலியோடு வந்து படுக்கும் போது மனசுக்கு கஷ்டமா இருக்கும். இப்போதும் அதை நினைக்கும் போது நான் அழுதிடுவேன். என்னதான் வீட்டில் கஷ்டம் இருந்தாலும், பக்கத்தில் இருப்பவர்கள் உதவிக் கேட்டால் எங்களின் தேவைகளை குறைத்துக் கொண்டு அம்மா அவர்களுக்கு உதவி செய்வார். அதைப் பார்த்துதான் எனக்கும் மற்றவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. ஒரே மகளான நான் எதிர்காலத்தில் நன்றாக வரவேண்டும் என்பதால், என் பெற்றோர் கல்வியால் மட்டுமே கஷ்டங்கள் தீரும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் நானும் நன்றாக படிக்க வேண்டும் என்பதை என் மனதில் பதிவு செய்து கொண்டேன். அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.

பள்ளியில் உடன் படிப்பவர்கள் அவர்கள் இஷ்டப்பட்டதை சாப்பிட்டதாகவும் புது உடை அணிந்தது பற்றிக் கூறும் போது எனக்கும் அது போல் நல்ல உடை, உணவு கிடைக்கவில்லை என்ற ஏக்கம் ஏற்படும். மறுகணமே என் பெற்றோரின் உழைப்பு என் கண் முன் வரும். அப்போது நன்கு படிக்க வேண்டும் என்று நான் எனக்குள் சபதம் செய்து கொண்டேன். +2வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன். கல்லூரியில் சேர இருக்கும் தருவாயில் என் அப்பாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டு என்னையும் அம்மாவையும் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார். எங்க தலையில் பேரிடி விழுந்தது போலானது. அம்மாவிற்கு உடல் நலன் சரியில்லாத காரணத்தால் அவரை எந்த வேலைக்கும் அப்பா அனுப்பியது இல்லை. எல்லாவற்றையும் அவரே பார்த்துக் கொண்டார். இப்போது அம்மா, வீட்டு வேலைகள் செய்து என்னை கல்லூரியில் படிக்க வைத்து பட்டதாரி ஆக்கியே தீருவேன் என்று பிடிவாதமாக வேலைக்கு சென்றார். நானும் கல்லூரியில் சேர்ந்து பி.காம் படிச்சு முடிச்சேன். வீட்டு வேலைகள், குழந்தைகளை பார்த்துக் கொள்வது என பல வேலைகளை செய்து தான் அம்மா என்னை படிக்க வைத்தார். அதே சமயம் அம்மாவிற்கு முழு சுமையும் கொடுக்கக்கூடாது என்பதால் நான் கல்லூரி நேரம் தவிர மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்த்தேன்.

இருவரின் சம்பாத்தியத்தில்தான் என் படிப்பு மற்றும் வீட்டையும் பார்த்துக் கொண்டோம். இளங்கலை பட்டப்படிப்பிற்கு பிறகு முதுகலை படிப்பான எம்.பி.ஏவும் படிச்சேன்’’ என்றவர் சமூக சேவை பணிக்கு வந்தது குறித்து விவரித்தார்.‘‘படிப்பு முடிஞ்சதும் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு படிப்படியாக என் திறமைக்கான உயர்வும் கிடைத்தது. மேனேஜர் பதவியில் நல்ல வருமானமும் கிடைத்தது. என்னுடைய சிறு வயதிலேயே என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக புதைந்திருந்தது. அந்த எண்ணம் தான் இந்த அறக்கட்டளையை துவங்க காரணம். இந்த சேவையினை கடந்த ஐந்து வருடமாக செய்து வருகிறேன். இந்த அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முன் நான் பார்த்து வந்த வேலையை ராஜினாமா செய்து புடவை பிசினசில் ஈடுபட ஆரம்பித்தேன். காரணம், ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது நம்முடைய சமூக சேவைக்கான நேரத்தை செலவிட முடியாது. அதனால் சொந்தமாக தொழில் செய்ய முன்வந்தேன். அதன் மூலம்தான் இந்த அறக்கட்டளையும் துவங்கி அதன் மூலம் தாய்-தந்தையை இழந்த குழந்தைகள், சிங்கிள் பேரண்ட் குழந்தைகளுக்கு தேவையான உதவிகள் செய்து வருகிறோம்.

எங்க பகுதியில் உள்ள 45 அனாதைக் குழந்தைகள், 15 மாற்றுத்திறனாளிகள், 25 முதியோர்கள், 180 வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு உணவு, உடை போன்ற வாழ்வாதாரம் சார்ந்த உதவிகளை செய்து வருகிறோம். ஏழை குழந்தைகளுக்கு சத்தான உணவுகள், உடைகள், விளையாட்டுப் பொருட்களும் வழங்குகிறோம். முதியவர்களுக்கு மாதம்தோறும் மருத்துவ செலவுகளுக்கு உதவித்தொகை தருகிறோம். சாலையோரம் வாழ்பவர்களுக்கு அன்னதானம் மற்றும் பெட்ஷீட், போர்வை, பாய் தந்து உதவி வருகிறோம். பண்டிகை காலங்களில் புத்தாடைகள் வாங்க முடியாமல் நான் ஏங்கி இருக்கிறேன். அப்படிப்பட்டவர்களுக்கு புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் வழங்கி அவர்கள் சந்தோஷத்தைப் பார்த்து நாங்க மகிழ்வடைகிறோம்’’ என்றவர் அவரின் பயணத்தில் அவர் மட்டுமில்லாமல் பலர் உதவி செய்வதாக கூறினார்.‘‘என்னுடைய சமூக சேவையை பற்றி தெரிந்தவர்கள் என்னை அணுகி அவர்களால் முடிந்த உதவிகளை பணமாகவோ அல்லது பொருளாகவோ கொடுத்து உதவி செய்து எங்களை ஆதரித்து வருகிறார்கள்.

தற்போது உலகையே உலுக்கியது கேரளாவின் வயநாடு நிலச்சரிவு. அங்கு பெற்றோரை இழந்து நின்ற குழந்தைகளுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்துவிட்டு வந்தோம். அவர்கள் சொன்ன நன்றி என்ற அந்த ஒரு வார்த்தை ஆயிரம் விருதுகள் பெற்ற ஆத்ம திருப்தியை கொடுத்தது. என்னுடைய சிறுவயதில் நான் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கேன். அதை எல்லாம் சவாலாக எடுத்து முன்னேறி விட்டேன். சமூகத் தொண்டில் சாதனை சிகரங்களை தொட வேண்டும். எங்கள் அறக்கட்டளையை மேலும் உயர்த்தி அதன் மூலம் பலருக்கு உதவிகளை வழங்க வேண்டும். இந்தாண்டு நவராத்திரியை குடிசையில் வாழும் குழந்தைகளுக்காக அப்பகுதியில் பிரமாண்டமாக அமைக்க திட்டமிட்டிருக்கிறேன். எனக்காகவே உழைத்து கஷ்டப்பட்டு என்னை ஆளாக்கிய என் தாயை சந்தோஷமாக எந்தக் குறையும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்’’ என்றார். ஏழையாக பிறந்தாலும் தன்னம்பிக்கையுடன் படித்து முன்னேறி வாழ்வில் உயர்ந்து சமூக நற்பணிகளை செய்து வரும் விஜயலட்சுமியின் சிறப்பான நற்பணிகள் தொடர வாழ்த்தி விடைபெற்றோம்.

தொகுப்பு: விஜயா கண்ணன்

The post குடிசையில் வளர்ந்த பெண்ணின் சமூக சேவைகள்! appeared first on Dinakaran.

Tags : God ,Anna ,Vijayalakshmi ,
× RELATED கடவுளை வணங்குபவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?