×

வைகோ, அன்புமணி உள்பட 6 பேர் பதவிக்காலம் முடிகிறது தமிழகத்தில் ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் வரும் 2ம் தேதி தொடக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கு ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் 4 இடங்களை திமுக கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. இந்திய நாடாளுமன்றம் என்பது மக்களவை, மாநிலங்களவை என்ற இரு அவைகளை கொண்டது. மக்களவையில் 545 எம்பிக்களும், மாநிலங்களவையில் 250 எம்பிக்களும் உள்ளனர். மக்களவை எம்பிக்களை 5 ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் பொதுத்தேர்தல் மூலம் மக்களே தேர்ந்தெடுப்பார்கள். மாநிலங்களவை எம்பிக்களை ஒவ்வொரு மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அடிப்படையில் எம்எல்ஏக்கள் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு மக்களவையில் 39 இடங்களும், மாநிலங்களவையில் 18 இடங்களும் உள்ளன. மக்களவை உறுப்பினர்களை பொதுமக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பது போல், மாநிலங்களவை உறுப்பினர்களை இங்குள்ள எம்எல்ஏக்கள் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுப்பார்கள்.

தற்போது, தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு மாநிலங்களவை உறுப்பினரை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்கள் வாக்களிக்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் திமுக கூட்டணிக்கு 159, அ.தி.மு.க. கூட்டணிக்கு 75 என்ற அளவில் எம்எல்ஏக்கள் பலம் உள்ளது. இதைவைத்து பார்க்கும்போது, திமுகவுக்கு 4 மாநிலங்களவை உறுப்பினர்களும், அதிமு.கவுக்கு 2 மாநிலங்களவை உறுப்பினர்களும் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது, தி.மு.க.வில் அப்துல்லா, வில்சன், சண்முகம் மற்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரின் பதவிக்காலம் வருகிற ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைய இருக்கிறது. அதிமுகவில் சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைகிறது. கடந்த முறை பாஜ, அதிமுக கூட்டணியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாமக உறுப்பினர் அன்புமணியின் பதவிக்காலமும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது.

தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு 18 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த 18 உறுப்பினர்களும் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். மாநிலங்களவை எம்பி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் 6 ஆண்டு அந்த பதவியில் இருப்பார்கள். தற்போதைய நிலையில், தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கான இடங்கள் தற்போது காலியாகிறது. இந்நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்பி பதவிக்கான தேர்தல் வருகிற ஜூன் மாதம் 19ம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது. அதன்படி மாநிலங்களவை எம்பி தேர்தலில் போட்டியிடுபவர்கள், வரும் ஜூன் 2ம் தேதி தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம். ஜூன் 9ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாகும். 12ம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான நாளாகும். 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

திமுக கூட்டணியில் உள்ள மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடம் தருவதாக ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதால், கமல்ஹாசன் முதல் முறையாக மாநிலங்களவை எம்பியாக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மற்ற 3 பேர் யார், வைகோவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதே நேரத்தில், அதிமுக கூட்டணியில் தற்போது பாமக இல்லாததால், அன்புமணிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனால், பாமக உறுப்பினர்களின் 5 பேரின் வாக்கும் அதிமுகவுக்கு கிடைக்காது என்றே தெரிகிறது. அதிமுகவில் மொத்தம் 66 எம்எல்ஏக்கள். அதில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், பால் மனோஜ்பாண்டியன், ஐயப்பன் ஆகியோர் அதிருப்தி எம்எல்ஏக்களாக உள்ளனர். இதனால் தற்போது அதிமுகவின் பலம் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை மூர்த்தியையும் சேர்த்து 62 எம்எல்ஏக்கள் உள்ளனர். 2 எம்பிக்கள் வெற்றி பெற வேண்டும் என்றால் 68 எம்எல்ஏக்கள் வேண்டும்.

பாஜ எம்எல்ஏக்கள் ஆதரவு கொடுத்தாலும் அதிமுக கூட்டணியின் எண்ணிக்கை 66 ஆக மட்டுமே உயரும். வெற்றிக்கு மேலும் 2 எம்எல்ஏக்கள் தேவை. இதனால், ஓ.பன்னீர்செல்வம் அணி அல்லது பாமக எம்எல்ஏக்கள் தலா 4 பேர் உள்ளதால் அவர்களில் யாராவது ஒருவர் ஆதரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் திமுக 4 பேரை அறிவித்தால் அதிமுக 2 பேரை நிறுத்தி வெற்றி பெற்று விடும். ஆனால் திமுக 5வதாக வேட்பாளரை அறிவித்தால் தேர்தல் நடைபெறுவது உறுதியாகிவிடும். திமுக கூட்டணியில் 136 பேர் ஓட்டுப்போட்டு 4 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அதுபோக மீதம் 12 எம்எல்ஏக்கள் இருப்பார்கள். எதிரணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் அணி, பாமக ஆகியோர் புறக்கணித்தாலோ மாற்றி ஓட்டுப்போட்டாலோ தமிழகத்தில் மீண்டும் அரசியலில் புதிய பரபரப்பு உருவாகும்.

ஆனாலும், 2 மாநிலங்களவை உறுப்பினர்களை அதிமுக கூட்டணி கைப்பற்ற வாய்ப்புள்ளது. அதனால், அதிமுகவில் 2 எம்பி சீட்களை பெற போட்டா போட்டி நிலவுகிறது. தேமுதிக தற்போது அதிமுக கூட்டணியில், ஏற்கனவே பேசியபடி தங்களுக்கு ஒரு மாநிலங்களவை எம்பி பதவி வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கோரிக்கை வைத்தார். இந்த கோரிக்கையை, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே நிராகரித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தலுக்கு 6 பேர் மட்டுமே விண்ணப்பித்தால், தேர்தல் நடைபெறாது. விண்ணப்பித்த 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள். அதற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பித்தால் மட்டுமே தேர்தல் நடைபெறும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவுதான்.

 

The post வைகோ, அன்புமணி உள்பட 6 பேர் பதவிக்காலம் முடிகிறது தமிழகத்தில் ஜூன் 19ல் ராஜ்யசபா தேர்தல்: வேட்புமனு தாக்கல் வரும் 2ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Rajya Sabha elections ,Tamil Nadu ,Chennai ,Election Commission of India ,Rajya Sabha ,DMK ,Indian Parliament ,Lok Sabha ,Rajya Sabha… ,
× RELATED ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880...