×

மேவளூர்குப்பத்தில் கோயில் நிலம் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

காஞ்சிபுரம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதல்படி, பெரும்புதூர் வட்டம் மேவளூர்குப்பத்தில் உள்ள வள்ளீஸ்வரர் தேவஸ்தானத்திற்கு சொந்தமான 2,00,001 ஏக்கர் நிலத்தை அளவீடு செய்யும் பணி இன்று துவங்கியது. இந்த பணிகளை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் துவக்கிவைத்து எல்லை கற்களை நட்டனர். இதன்பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியதாவது: கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல், கோயில் நிலங்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ரோவர் கருவி மூலம் அளவீடு செய்து பாதுகாத்தல் போன்ற பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது.

திமுக அரசு பொறுப்பேற்றபின் கோயில்களுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்டெடுக்கும் பணி, கோயில் நிலங்களை அளவீடு செய்து பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ள வருவாய் துறை மூலம் 40 தனி வட்டாட்சியர்கள், 172 உரிமம் பெற்ற நில அளவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த பணிகளை துரிதப்படுத்திடும் வகையில் ரூ.1.89 கோடி செலவில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய 36 ரோவர் கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டு, அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்மூலம் கடந்த 4 ஆண்டுகளில் கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு பட்டா மாறுதல் செய்யும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக கடந்த 7.5.2021 முதல் இதுவரை 971 திருக் கோயில்களுக்கு சொந்தமான ரூ.7671.23 கோடி மதிப்பீட்டிலான 7560.05 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளன. இதுவரை 2 லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, 1,22,291 எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன. தவறுகள் குறித்து மேல்முறையீடு செய்து 5,409.87 ஏக்கர் நிலங்களும் கணினி சிட்டாவில் தவறுகள் சரிசெய்யப்பட்டு 4,491,47 ஏக்கர் நிலங்களும் கோயில்கள் பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். அப்போது காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி மோகன், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சி.பழனி, ஸ்ரீபெரும்புதூர் சப்-கலெக்டர் மிருணாளினி, உள்பட பலர் இருந்தனர்.

The post மேவளூர்குப்பத்தில் கோயில் நிலம் அளவீடு செய்யும் பணி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Tags : Mevalurkuppam ,Kanchipuram ,Chief Minister ,M.K. Stalin ,Vallieswarar Devasthanam ,Perumbudur Taluk ,Ministers ,T.M. Anparasan ,P.K. Sekarbabu ,
× RELATED கிண்டியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம்;...