தேய்பிறை அஷ்டமி 10 – 7 – 2023
சிவபெருமானின் வீரச் செயல்கள் எட்டாகும். அவரது வீரவெளிப்பாடாக விளங்கும் பைரவரும் எட்டு உருவங்கள் தாங்கி அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றார். இவருடைய எட்டு திருமேனிகளும் முறையே, 1. அஜிதாங்கன், 2. ருரு, 3. சண்டன், 4. உன்மத்தன், 5. கபாலன், 6. பீஷ்ணன், 7. க்ரோதன், 8. சம்ஹாரன் என்று அழைக்கப்படுகின்றன. இவர்கள் சிவபெருமான் அஷ்டமூர்த்தங்களாகிய பஞ்ச பூதங்கள், சூரியன், சந்திரன், ஆன்மா என்ற எட்டிலும் நீங்காது நின்று அன்பர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். இந்த எண்மருக்கும் தேவியராகத் திகழ்பவர்கள் அஷ்ட மாதர்கள் ஆவர்.
இவர்களின் பெயர் முறையே பிராம்மஹி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி வாராகி, இந்திராணி, சாமுண்டி, சண்டிகை என்பதாகும். இவர்கள் அந்தகாசூர வதத்தின் பொருட்டு சிவபெருமானால் தேவர்களின் சக்தியிலிருந்து தோற்றுவிக்கப்பட்டவர்கள். பின்னர் அஷ்டபைரவர்களுக்கும் தேவியராக அளிக்கப்பட்டவர்கள். அஷ்ட பைரவர்கள் அனேக வீரச் செயல்கள் செய்தனர். அவை உலக நன்மையின் பொருட்டு செய்யப்பட்ட வீரச் செயல்கள் என்றாலும் அதனால் பல உயிர்கள் துன்புற்றன என்பதால் அவர்களுக்குப் பாவம் உண்டாயிற்று. அது நீங்கும் பொருட்டு அவர்கள் காஞ்சிபுரம், காசி முதலிய தலங்களில் தம் பெயரால் லிங்கம் அமைத்து வழிபட்டனர்.
அவை அவர்கள் பெயரால் அஷ்ட பைரவேச் சரங்கள் என்றுஅழைக்கப்படுகின்றன. இந்த அஷ்ட பைரவர்களின் திருவுருவ வர்ணனைகளை சாரஸ்வதீயம், ரூபமண்டனம், தத்துவ நிதி முதலிய நூல்கள் விளக்கமாகக் கூறுகின்றன. இவற்றின்படி பைரவர்கள் இளமையான தோற்றமுடையவர்கள். மூன்று கண்களையுடையவர்கள். பாம்புகளையும் மணிசரங்களுடன், வைர, வைடூர்ய ஆபரணங்களையும் அணிந்தவர்கள், தலையில் தீமுடி (தழல்முடி) கொண்டவர்கள்.
அஜிதாங்க பைரவர்
அஜிதாங்கன் என்ற சொல்லுக்கு மேன்மைக்குரியதும் வெல்ல முடியாததுமான அங்கங்களை உடையவன் என்பது பொருள். ஆயுதங்களால் வெட்ட முடியாததுமான, துளைக்க முடியாததும், சோர்வை அடையாததுமான திருமேனியை உடையவன் என்பது பொருள். அஜிதாங்க பைரவர் கருநீல நிறம் கொண்டு அட்ச மாலை, கெண்டி, கமண்டலம், கத்தி ஆகியவற்றை ஏந்தி பிராம்மி தேவியுடன் அன்னை வாகனத்தில் வீற்றிருக்கின்றார். சிலசமயம் இவர் நான்கு முகங்கள் கொண்டவராகவும் அமைக்கப்படுகின்றார். இவருடைய திசை கிழக்காகும்.
ருரு பைரவர்
ருருவன் என்பதற்கு அளவில்லாத ஆற்றலுடையவன், தலைமைப் பண்பாளன், சரியான வழியில் செலுத்துபவன் என்பது பொருள். ருரு பைரவர் மான், மழு, கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தி இடப வாகனத்தில் மகேஸ்வரியுடன் தென்கிழக்கு திசையில் வீற்றிருக்கின்றார்.
சண்ட பைரவர்
சண்டன் என்பதற்கு இயற்கைக்கு மாறான செயல்களை செய்பவன் என்பது பொருள். நீர்மேல் நடத்தல், நெருப்பை விழுங்குதல் போன்ற இயற்கைக்கு மாறான எதையும் எளிதில் செய்பவன் சண்டன் எனப்படுகிறான். பொன்நிறம் கொண்ட சண்ட பைரவர் சக்தி, குலிசம், கத்தி, கபாலம் ஏந்தியவராக மயில் வாகனத்தில் கௌமாரியுடன் தென்திசையில் எழுந்தருள்கின்றார்.
குரோதன பைரவர்
குரோதர் என்பதற்கு மனதிற்குள் கோபத்தை மறைத்து வைத்தவன் என்பது பொருள். குரோதன பைரவர் கருப்பு வண்ணத்தினர். சங்கு, சக்கரம், பான பாத்திரம், தண்டம் ஆகியவற்றை ஏந்தி வைஷ்ணவியுடன் கருட வாகனத்தில் தென்மேற்குத் திக்கில் வீற்றிருக்கின்றார்.
உன்மத்த பைரவர்
உன்மத்தன் என்றால் பித்து பிடித்தவர் என்பது பொருள். போர்களின் மீதும் அன்பர்களைக் காக்கும் நிலையிலும் தன்னை மறந்து வேகத்துடன் செயல்படுவதால் இப்பெயர் பெற்றார். உன்மத்த நிலையில் செயல் மட்டுமே முதன்மையானதாக இருக்கும். அதனை அடைய எதையும் செய்யும் நிலை இருக்கும். போரில் இந்தத் தன்மையான நிலையே வெற்றியைத் தரும் என்பதால் இந்தப் பைரவர் உன்மத்தன் எனப்படுகிறார். பொன் வண்ணத்தினராய் உன்மத்த பைரவர் தண்டம். ஏர் (உழுபடை), கத்தி, கபாலம் ஆகியவற்றை ஏந்தி வாராகி தேவியுடன் குதிரை வாகனத்தில் மேற்கு திசையில் காவல் புரிகிறார்.
கபால பைரவர்
கபாலம் என்பது காலம் கடந்த இருத்தலைக் குறிக்கும் அடையாளம். பகைவர்களை வென்றழித்த பின் அவர்களது தலைகளை அறுத்து மாலைகளாகக் கோர்த்து அணிவது கபால மாலை. நடராஜர், தியாகராஜர், அண்ணாமலையார், முதலான சிவ வடிவங்களுக்கு கபாலமாலை அணிவிக்கப்பட்டுள்ளது. இது சிவபெருமான் காலங்களை கடந்தவன் என்பதைக் குறிப்பதற்கே ஆகும். பத்மராக வண்ணத்தில் பிரகாசிக்கும், கபால பைரவர் மேற்கரங்களில் இரண்டு இடியை உணர்த்தும் வஜ்ஜிரங்களையும், இந்திர நீல கற்களாலான அணி புனைந்து ஐந்தரியுடன் ஐராவதத்தில் கிழக்குத் திக்கில் பவனி வருகிறார்.
பீஷ்ண பைரவர்
பீஷ்ணன் என்பதற்கு அச்சமற்றவன் என்பது பொருள். அழிவற்றவன் என்பதும் பொருளாகும். தான் அழிவற்றவனாக இருப்பதைப் போலவே பக்தர்களுக்கும் அழிவற்ற செல்வங்களை வழங்குபவராக பீஷ்ண பைரவர் விளங்குகிறார். பீஷ்ண பைரவர் சிவப்பு நிறத்தினர். சூலம், உலக்கை, கத்தி கபாலம் தந்தி பூத வேதாளங்கள் சூழ பைரவியான சாமுண்டியுடன் சிங்க வாகனத்தில் வட திசையில் வீற்றிருக்கின்றார்.
சம்ஹார பைரவர்
எட்டாவதான பைரவர் சம்ஹார பைரவர் என்றும் அழைக்கப்படுகிறார். ஹரம் என்றால் அழித்தல் சம்ஹாரம் என்பது மேலான அறிவு அல்லது ஆக்கத்திற்கான அறிவு என்று பொருளைத் தருகின்றது. அசுரர்களை சங்கரித்து அவர்களுக்கு அச்சமும் அருளும் தருவதால் பைரவர்கள் சங்கார மூர்த்திகள் எனப்படுகின்றனர். சம்ஹார பைரவர் வெண்மையான நிறம் கொண்டவர். சூலம், டமருகம், சங்கு, சக்கரம், கதை, கத்தி, கபாலம், குறுவாள், பாசம், அங்குசம் என்னும் பத்து ஆயுதங்களை பத்து கரங்களில் ஏந்தியுள்ளார். சண்டிகா தேவியுடன் நாய்மீது வடகிழக்கில் வீற்றிருக்கின்றார்.
இந்த அஷ்ட பைரவர்கள் கடுமையான தோற்ற முடையவர்கள் என்றாலும் அன்பர்களுக்கு அளப்பரிய வரங்களை நல்கும் கிருபாமூர்த்திகள், அஷ்ட ஐஸ்வர்யங்களையும் ஆபத்தை போக்கி அழகான வாழ்வை அருள்பவர்கள்.
The post ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள் appeared first on Dinakaran.