×

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; “தமிழ்நாட்டில் 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், தேர்வு நடத்துவதற்கான ஜூலை மாதம் முடிவடைந்து, ஆகஸ்ட் மாதம் நிறைவடையவுள்ள நிலையில், தேர்வுக்கான அறிவிப்புக் கூட இன்னும் வெளியிடப்படாதது கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசின் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும். ஆசிரியர் படிப்பு படித்து முடிக்கும் மாணவர்கள் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று ஆசிரியர் பணியில் உடனடியாக சேர வேண்டும் என்பதற்காகவே இந்த விதி கொண்டு வரப்பட்டது. அதன்படி மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுகள் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்படும் நிலையில், தமிழ்நாட்டில் தகுதித் தேர்வு நடத்தப்படுவதில்லை.

தமிழ்நாட்டில் கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டு அந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது. அதன்பின் கடந்த ஆண்டு திசம்பர் மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்பட்டு, 2024 மார்ச் மாதத்தில் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன்படி நடக்கவில்லை. அதன்பின், நடப்பாண்டில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு, ஜூலை மாதத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.

2022-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு இன்று வரை 3 ஆண்டுகளில் லட்சக்கணக்கான பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகள் ஆசிரியர் பணிக்கான கல்வித்தகுதி பெற்று வெளிவந்துள்ளனர். ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாததால் அவர்கள் ஆசிரியர் பணிக்கான தகுதியை பெற முடியவில்லை. அதனால் தனியார் பள்ளிகளில் கூட அவர்களால் பணிக்கு சேர முடியவில்லை.

லட்சக்கணக்கான மாணவ, மாணவியரின் வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக் கூடாது. 2024-ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிக்கையை உடனடியாக வெளியிட்டு, விரைவாக தேர்வை நடத்தி முடிக்க தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

The post ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான அறிவிக்கையை வாரியம் உடனடியாக வெளியிட வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : BAMA ,president ,Anbumani Ramadoss ,CHENNAI ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...