×
Saravana Stores

டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி

சென்னை : டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ ஆட்சி அமைந்த பிறகு கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ம் தேதி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதற்கு பதிலாக புதிதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

ரூ.2000 நோட்டுகள் அதிகம் புழக்கத்தில் வந்ததும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. எளிதாக பணம் எடுத்துச்செல்ல வசதியாக இருப்பதாகவும், இதனால் பதுக்கப்படுவதாகவும், சட்டவிரோத காரியங்களுக்கு பயன்படுத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டப்பட்டன. இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு முதல் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் இருப்பது மெதுவாக குறைக்கப்பட்டது. இந்தநிலையில் 2000 ரூபாய் நோட்டுகள் இனிமேல் செல்லாது என்ற அறிவிப்பை ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. மே 23ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை வங்கிகளில் சென்று மாற்றிக்கொள்ளவும், வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே டாஸ்மாக் கடைகளில் 2000 ரூபாய் நோட்டுகளை ஊழியர்கள் வாங்க கூடாது என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அதையும் மீறி 2000 ரூபாய் நோட்டுகளை வாங்கினால், அதற்கு டாஸ்மாக் விற்பனையாளர் மற்றும் மேற்பார்வையாளரே பொறுப்பு என்று டாஸ்மாக் நிர்வாகம் கூறியதாகவும் செய்திகள் உலா வந்தன. இந்நிலையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “டாஸ்மாக் கடைகளில் ₹2,000 வாங்க கூடாது என்பது முற்றிலும் தவறான செய்தி..இது போல எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை ,”என்று பதிவிட்டுள்ளார்.

The post டாஸ்மாக் கடைகளில் ரூ.2,000 வாங்க கூடாது என எந்த சுற்றறிக்கையும் அனுப்பப்படவில்லை : அமைச்சர் செந்தில் பாலாஜி appeared first on Dinakaran.

Tags : Tasmak ,Minister ,Senthil Balaji ,Chennai ,
× RELATED நெமிலி அருகே நள்ளிரவு துணிகரம்...