×

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வைகோ, ஜி.கே.வாசன் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசும், ஒன்றிய அரசும் தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென வைகோ, ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளனர். வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்): தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம், கடந்த ஜூலை 5ம் தேதி முதல் தமிழ்நாட்டில் உள்ள 16 இடங்களில் விவசாயிகள் நலன் காக்கவும், சுற்றுச் சூழல் வளம் பெறவும் இந்திய அரசிடம் நான்கு கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசிடம் ஆறு கோரிக்கைகளையும் முன்வைத்து, நிறைவேற்றித் தருமாறு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசு நியமித்த எம்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றித் தருமாறும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை காப்பீடு செய்த உழவர்கள் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் இழப்பீடு பெறும் வகையில் மாற்றி அமைக்க வேண்டியும், இலவச மின்சாரம் அளிக்கும் திட்டத்தை செயலிழக்க செய்யும் மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப்பெற வேண்டியும், உழவர்களின் அனைத்துக் கடன்களையும் தள்ளுபடி செய்யுமாறு வேண்டியும் ஒன்றிய அரசிடம் கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): நெல் குவிண்டாலுக்கு ரூ.3,000, கரும்பு டன்னுக்கு ரூ.5,000 நிர்ணயம் செய்ய வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தை வேளாண் பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கடந்த 17 நாட்களாக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் காத்திருப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. எனவே, ஒன்றிய அரசு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும்.

The post தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் 10 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்: வைகோ, ஜி.கே.வாசன் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Farmers Protection Association ,Vaiko ,GK Vasan ,Chennai ,Tamil Nadu government ,Union government ,Tamil Nadu Farmers' Protection Association ,
× RELATED சொல்லிட்டாங்க…