சென்னை: தமிழகத்தின் முதல் குத்துச்சண்டை அரங்கம் வரும் ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னையில் உலகத் தரம் வாய்ந்த மைதானங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சென்னையை உலக அளவிலான விளையாட்டு நகரமாக நிறுவி, உலகளாவிய போட்டிகளுக்கு சிறந்த இடமாகவும் விளையாட்டு வீரர்களுக்கு உயர் செயல்திறன் பயிற்சி மையமாகவும் உருவாக்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தின் முதல் பிரத்யேக, அதிநவீன குத்துச்சண்டை மற்றும் பயிற்சி வசதி அரங்கம் சென்னை கோபாலபுரத்தில் ரூ.7.79 கோடி மதிப்பீட்டில் குத்துச்சண்டை பயிற்சிமையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த அரங்கம் வரும் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளது. 52,000 சதுர அடி பரப்பளவில், அமைக்கப்பட்டுள்ள இந்த வர்க்க உள்கட்டமைப்பு அரங்கத்தில, உலக அளவில் ஆர்வமுள்ள குத்துச்சண்டை வீரர்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு இந்த அரங்கத்தின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது. குளிரூட்டப்பட்ட வசதியுடன் கூடிய இந்த அரங்கத்தில், இன்னும் கூரை மற்றும் உள் அலங்காரங்கள் வேலைகள் மட்டுமே மீதமுள்ளன. இந்த அரங்கம் செயல்பாட்டிற்கு வந்ததும், மாநிலத்தின் முதன்மையான குத்துச்சண்டை பயிற்சி மையமாக செயல்படும். போட்டிகள் மற்றும் பார்வையாளர்கள் இருக்கையுடன் கூடிய பிரதான குத்துசண்டை மேடையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
கனரக பைகள், வேகப் பைகள், பிரத்யேக வலிமை மற்றும் சுறுசுறுப்பு இயந்திரங்கள் மற்றும் ஷவர்களுடன் கூடிய விரிவான லாக்கர் அறை வசதிகள் உள்ளிட்ட அதிநவீன வசதிகளுடன் பயிற்சி மையம் பொருத்தப்பட்டிருக்கும். இந்த வசதியுடன் இருக்கும் இந்த குத்துச்சண்டை அரங்கம் சென்னையில் குத்துச்சண்டைக்கான தளமாக செயல்படும் என குத்துச்சண்டை பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கு பல போட்டிகள் நடைபெற உள்ளது. அதே சமயம், தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கம் இந்த அரங்கத்தில் கூடுதல் வசதிகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும்.
வெளி மாநில பயிற்சியாளர்கள் மற்றும் மேலாளர்களுக்கு தங்கும் விடுதிகள் வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். தற்போது ஒரு நாள் வாடகை அதிகமாக உள்ளது. அறை வாடகையுடன் போட்டிகளை நடத்துவதும் நிதிச்சுமையாகிறது. அதேபோல், விளையாட்டு அல்லாத நிகழ்வுகளுக்கு இதுபோன்ற விளையாட்டு வசதிகள் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக இதுபோன்ற ஸ்டேடியங்கள் விளையாட்டை ஊக்குவிக்க பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட வேண்டும். அரசியல் அல்லது சினிமா நிகழ்வுகளுக்கு அவற்றை வாடகைக்கு விடுவது உள்கட்டமைப்பை சேதப்படுத்த கூடும்.
இந்த அரங்கம் செயல்பாட்டிற்கு வரும்போது தமிழகத்தில் குத்துச்சண்டை மீதான ஆர்வம் அதிகரிக்கக்கூடும். புதிய திறமைகளை வளர்க்கவும், விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் உயர்த்தும். குத்துச்சண்டை தற்போது வணிகமயமாகி விட்டது. குறுகிய கால படிப்புகளை முடித்து அனுபவமில்லாத பலர் வகுப்புகள் எடுக்கின்றனர். என்ஐஎஸ் தகுதி வாய்ந்த பயிற்சியாளர்களை மட்டும் நியமிக்க வேண்டும் என குத்துச்சண்டை மூத்த வீரர்கள், குத்துச்சண்டை சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
* 1,000 பேர் அமரக்கூடிய கேலரியுடன் கூடிய இரண்டு குத்துச்சண்டை வளையங்கள், பல பஞ்ச் பைகள் கொண்ட தனி உறை, முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன்களின் புகைப்படங்களால் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாசியம், உடை மாற்றும் அறைகள் மற்றும் பலவற்றைக் கொண்டிருக்கும்.
* குத்துச்சண்டை அரங்கத்திற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ரூ.5 கோடி முதலீடு செய்ய உள்ளது.
The post தமிழ்நாட்டின் முதல் குத்துச்சண்டை அரங்கம் ஜனவரியில் திறப்பு appeared first on Dinakaran.