×

தமிழக அரசியலில் அந்தரத்தில் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள்

* ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம்
* வசை பாடினால் வேடிக்கை பார்க்க மாட்டோம்
* பாஜ துணைத் தலைவர் கரு.நாகராஜன் எச்சரிக்கை

சென்னை: என்றும், அண்ணாமலையை பார்த்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயப்படுகிறார்கள் என்றும், வசை பாடினால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும் கரு.நாகராஜன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக பாஜ கட்சியின் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலையை குறை சொல்லி பேசுவதும், விமர்சிப்பதும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கும் இன்றைய நிர்வாகிகளுக்கும் பொழுதுபோக்காக இருக்கிறது. பாஜ-அதிமுக கூட்டணி இருக்குமா இல்லையா என்பதை ஒருபோதும் பாஜ பேசாத போதும், ஏதோ பாஜ, அதிமுகதான் எங்களுக்கு வேண்டும் என்று அழுது அடம் பிடித்ததை போல இவர்களே கதவுகளை மூடி விட்டோம். நாங்கள் பாஜவை விட்டு ஓடி விட்டோம் என்று கதை அளந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 12 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி பாஜ 2ம் இடம் பிடித்தது. பல்வேறு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்தது. இதை எல்லாம் உற்று நோக்கிய அதிமுக தலைவர்கள் தொடர்ந்து அண்ணாமலையை விமர்சிப்பதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

இதற்கு பதில் சொல்லாமல் வேடிக்கை பார்க்கக்கூடிய நிலையில் எங்கள் கட்சியில்லை. இதற்கு பதில் சொல்லாமல் அவர் கடந்து போக முடியாது. அப்படி பதில் சொல்லும் போது இவர்களுக்கு எல்லாம் வயிற்று எரிச்சல் ஏற்படுகிறது. இவர்களுடைய மனங்களில் பதற்றம் ஏற்படுகிறது. ஏற்கனவே 4ஆக சிதறி இருக்கக்கூடிய நிலையில் தொண்டர்கள் பரிதவித்து வருகிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி மக்கள் செல்வாக்கு மிக்க தலைவராக தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இவற்றின் வெளிப்பாடுதான் எங்கள் தலைவரை தொடர்ந்து விமர்சிக்கிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். இன்றைக்கு உதயகுமார், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு முனுசாமி போன்றவர்கள் எல்லாம் வாய்க்கு வந்தபடியும், மனசுக்கு வந்தபடியும் பேசுகிறார்கள். வசை பாடுகிறார்கள். இதன் மூலம் நாங்களும் அரசியலில் இருக்கிறோம் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பதை காட்டுவதற்காகவே அவர்கள் முயற்சிக்கிறார்கள், இது அவர்களுடைய இயலாமையைதான் காட்டுகிறது.

அண்ணாமலை சொன்னது போல வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு 4வது இடத்தை இப்போதே ரிசர்வ் செய்து வைத்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து பேசுவதை நாங்கள் வேடிக்கைப் பார்க்க தயாராக இல்லை. உங்கள் மீது இருக்கக்கூடிய ஊழல் வழக்குகளை ஒவ்வொன்றாக மக்கள் மன்றத்திலே அடுக்குவோம். உங்கள் மீது இருக்கிற வழக்குகள் விரைவுப்படுத்துவதற்கு நீதிமன்றங்களை நாடுவோம். உங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்களை நாட்டு மக்களுக்கு கொண்டு வருவோம். ஏதோ உங்கள் விமர்சனங்களுக்கு எல்லாம் பயந்து அரசியல் செய்யாமல் இருந்து விடுவோம் என்று நினைக்காதீர்கள்.

நீங்கள் தமிழக அரசியலில் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறீர்கள். அதிமுகவில் எழுச்சிமிக்க தலைவர்கள் இல்லை என்று அதிமுக தொண்டர்கள் மனம் நொந்து போய் இருக்கிறார்கள். அதிமுகவை மக்கள் தூக்கி எறியப் போவது உறுதி. நீங்கள் என்ன பேசினாலும் பதிலுக்கு பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கிறோம். நீங்கள் என்னதான் கூச்சல் போட்டாலும் உங்களால் இனிமேல் வெற்றி பெறவே முடியாது. மக்கள் உங்களை புறக்கணித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஜெயலலிதாவின் உண்மையான நோக்கம், லட்சியங்களை செயல்படுத்தக்கூடிய கட்சி பாஜதான் என்று அதிமுக தொண்டர்கள் நினைக்க தொடங்கிவிட்டனர்.

எனவே வழக்கு, நீதிமன்றம், செயற்குழு, பொதுக்குழு இவையெல்லாம் தற்காலிகமாக அவர்கள் பதவியில் அமர்வதற்குத்தான் பயன்படுமே ஒழிய மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு ஒருபோதும் பயன்படப் போவதில்லை. அப்படி ஒரு கனவு இனிமேல் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கக் கூடாது. இருக்க முடியாது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள், நீங்கள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தைக்கும் மக்களிடம் பதில் சொல்லியே ஆக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post தமிழக அரசியலில் அந்தரத்தில் அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை பார்த்து பயப்படும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Tamil Nadu ,BJP ,Vice President ,Karu Nagarajan ,Chennai ,ADMK ,
× RELATED சமத்துவ சமூகம் உருவாக போராடிய...