×

ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு

புதுடெல்லி: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் கல்வி நிதியை வழங்க முடியும் என்று கூறி தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய ரூ.2,291 கோடி நிதியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள தமிழ்நாடு அரசு, கல்வி நிதியை உடனடியாக விடுவிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளது. ஒன்றிய அரசின் புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தும் வகையில், பிஎம்  பள்ளி எனப்படும் மாதிரி பள்ளிகளை உருவாக்குவது தொடர்பாக மாநிலங்களுடன் ஒப்பந்தம் செய்யப்படுகிறது. இது இந்தியை திணிப்பதாகக் கூறி, அதை செயல்படுத்த தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது. இதற்கிடையே, சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டிய, ரூ.2,152 கோடியை நிலுவையில் வைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு குற்றஞ்சாட்டியது.

ஆனால் பி.எம்  திட்டத்தில் இணைந்தால் மட்டுமே, இந்த கல்வி நிதி விடுவிக்கப்படும் என ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்திருந்தார். இந்த தகவலானது மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, கேரளா, மேற்குவங்க மாநிலங்களுக்கும், சமக்ர சிக் ஷா திட்டத்தின் கீழ் நிதியை விடுவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோன்று புதிய கல்விக் கொள்கையை ஏற்காத, ‘பி.எம் ’ பள்ளி திட்டத்தை செயல்படுத்தாத மாநிலங்களுக்கான நிதி நிறுத்தப்படுவதை ஏற்க முடியாது. உடனடியாக தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கத்துக்கான நிறுத்தி வைக்கப்பட்ட நிதியை விடுவிக்க வேண்டும்’ என, நாடாளுமன்ற நிலைக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருந்தது. ஆனால் ஒன்றிய அரசு தற்போது வரையில் தமிழ்நாட்டுக்கான கல்வி நிதியை ஒதுக்கீடு செய்யாமால் காலம் தாழ்த்தி ஒருதலை பட்சமாக செயல்பட்டு வருகிறது.

மேலும் இந்த கல்வி நிதி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சகம் ஆகியோருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி வலியுறுத்தி இருந்தார். ஆனால் அதனையும் ஒன்றிய அரசு கருத்தில் கொள்ளவில்லை. இதுபோன்ற சூழலில் தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் வில்சன் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது: சமக்ர சிக் ஷா திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியான ரூ.2,152 கோடியை ஒன்றிய அரசு வழங்காமல், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் நிதி வழங்கப்படும் என்று அதனை நிறுத்தி வைத்துள்ளது.

இது பாரபட்சமான ஒன்றாகும். இதனால் தமிழ்நாட்டில் இருக்கும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒன்றிய அரசு கல்விக்கான நிதியை வைத்துக் கொண்டு மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடக் கூடாது. எனவே தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதி மொத்தம் ரூ.2291 கோடியை உடனடியாக வழங்கிட ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தலோடு கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

மனுவின் முக்கிய கோரிக்கைகள்
1அசல் தொகையான ரூ.21,51,59,61,000/- (ரூபாய் இரண்டாயிரத்து நூற்று ஐம்பத்து ஒரு கோடி ஐம்பத்து ஒன்பது லட்சம் அறுபத்து ஒரு ஆயிரம் மட்டும்) மீது ஆண்டுக்கு 6 சதவீத எதிர்கால வட்டியுடன் சேர்த்து 1.5.2025 முதல் ஆணை நிறைவேற்றப்படும் தேதி வரை வழங்க வேண்டும்.
2 தமிழ்நாடு மாநில அரசும் ஒன்றிய அரசும் இதை தமிழ்நாட்டிற்குள் செயல்படுத்த ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால், தேசிய கல்விக் கொள்கை, 2020 மற்றும் பி.எம்  பள்ளிகள் திட்டம் ஆகியவை தமிழ்நாடு மாநிலத்தை கட்டுப்படுத்தாது என்று அறிவிக்க வேண்டும்.

3சமக்ர சிக்ஷா திட்டத்தின்கீழ் நிதி பெறும் உரிமையை தேசிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பி.எம்  பள்ளிகளை செயல்படுத்துவதோடு இணைப்பதில் ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானவை, சட்டவிரோதமானவை, தன்னிச்சையானவை மற்றும் நியாயமற்றவை ஆகும். இதனால் ஒன்றிய அரசு வெளியிடப்பட்ட 23.02.2024, 07.03.2024 தேதியிட்ட கடிதங்கள் சட்டவிரோதமானவை, செல்லாதவை மற்றும் தமிழ்நாடு அரசை கட்டுப்படுத்தாது என்றும் அறிவிக்க வேண்டும்.
4குழந்தைகள் கட்டணம் மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2010ன் கீழ் கடமைகளை செயல்படுத்துவதற்கான வருவாய்க்கு உதவியாக, வாதியின் மாநில மானியங்களைச் செலுத்துவதற்கான சட்டப்பூர்வ கடமைகளைத் தொடர்ந்து பின்பற்றவும், நிறைவேற்றவும் பிரதிவாதிக்கு உத்தரவிடுதல், இதில் ஒவ்வொரு கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பும், இந்த மாண்புமிகு நீதிமன்றத்தால் நிர்ணயிக்கப்படும் காலக்கெடுவிற்குள் சட்டத்தின்படி பிரதிவாதியின் 60சதவீத செலவினப் பங்கைச் செலுத்துவதும் அடங்கும்.

The post ஒன்றிய அரசு தர வேண்டிய ரூ.2291 கோடி கல்வி நிதியை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் பணம் தரப்படும் என்பது சட்டவிரோதம் என குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,Union Government ,New Delhi ,Tamil ,Nadu ,Dinakaran ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...