×

நாட்டிலேயே தமிழ்நாடுதான் பிளாஸ்டிக் அல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட அரசு நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு

சென்னை: நாட்டிலேயே தமிழ்நாடுதான் பிளாஸ்டிக் அல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் 2023- 24ம் நிதியாண்டிற்கான துறை ரீதியான மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி இன்றைய தினம் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. அப்போது, அதிமுக உறுப்பினர் கருப்பண்ணன், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் 14 வகையான பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

பிளாஸ்டிக் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று தமிழகம் முழுவதும் அனைத்து இடங்களிலும் பிளாஸ்டிக் பேக்குகள் பயன்பாட்டில் உள்ளது. கடந்த ஆட்சியில் கொண்டு வந்த திட்டம் என்பதால் கைவிடப்பட்டதாக பேசினார்.

பிளாஸ்டிக் அல்லாத மாநிலம்:

இதற்கு உடனடியாக இடைமறித்து பேசிய தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன், பிளாஸ்டிக் அல்லாத மாநிலத்தை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ல் பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

பிளாஸ்டிக்குக்கு பதிலாக மஞ்சப்பை திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். மஞ்சப்பை குறித்த விழிப்புணர்வு தமிழகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டதன் பயனாக மஞ்சப்பை மற்றும் துணிப்பை பயன்பாடு அதிகரித்துள்ளது என்றார். ஒரு பொருளை தடை செய்வதற்கு முன் அதற்கான மாற்று பொருளை அறிவிக்க வேண்டும், அதை செய்ய தவறியது அதிமுக அரசு என்றும் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

நாட்டு மரங்களை கொண்ட 1,000 குறுங்காடுகள் திட்டம்:

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள நாட்டு மரங்களை கொண்ட 1,000 குறுங்காடுகள் உருவாக்கப்படும். 100 ஏக்கர் பரப்பளவில் மாதிரி காடு உருவாக்கும் திட்டம் மேற்கொள்ளப்படும் என சுற்றுச்சூழல் துறை அறிவித்துள்ளது.

முதல்வரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும்:

38 மாவட்டங்களில் நீர்நிலைகளை சிறப்பாக பாதுகாக்கும் மற்றும் மேம்படுத்தும் 100 பேருக்கு நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்கப்படும் என்று அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்திருக்கிறார். ஒரு நபருக்கு ரூ.1 லட்சம் வீதம் ரூ.1 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நாட்டிலேயே தமிழ்நாடுதான் பிளாஸ்டிக் அல்லாத மாநிலம் என்ற நிலையை எட்ட அரசு நடவடிக்கை: அமைச்சர் மெய்யநாதன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Meiyanathan ,Chennai ,Tamil ,Nadu ,
× RELATED தமிழ்நாட்டிலுள்ள ஓவிய, சிற்பக்...