×

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

*கலெக்டர் துவக்கி வைத்தார்

தேனி : முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், தேனியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நேற்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை நடைபெற உள்ளது.

நேற்று நடந்த மாவட்ட விளையாட்டு போட்டிகளின் துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்து போட்டிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிகளுக்கு தேனி தொகுதி எம்பி தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் பெரியகுளம் சரவணகுமார், ஆண்டிபட்டி மகாராஜன் முன்னிலை வகித்தனர்.இதில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொது பிரிவினர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

இதில் சிலம்பம், கைப்பந்து கையுந்து பந்து, கால்பந்து, கபடி, கோ-கோ, கூடைப்பந்து, வளைக்கோல் பந்து, நீச்சல் போட்டி, ஓட்டப்பந்தயம், செஸ் போட்டிகள், கேரம் மற்றும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியின் போது, மாவட்ட கலெக்டர் தலைமையில் விளையாட்டு வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதில் நகர்மன்ற தலைவர்கள் தேனி -அல்லிநகரம் ரேணு பிரியா பாலமுருகன், பெரியகுளம் சுமிதா சிவகுமார், போடி ராஜராஜேஸ்வரி சங்கர், பெரியகுளம் யூனியன் சேர்மன் தங்கவேலு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இந்துமதி, மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்போ போட்டியில் பள்ளி, கல்லூரிகளில் பணி புரியும் உடற்கல்வி ஆசிரியர்கள் 90பேர் நடுவர்களாக ஈடுபட்டுள்ளனர். மேலும் இப்போட்டிகளில் விளையாட்டுச் சங்கங்களை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

யார் யாருக்கு என்னென்ன போட்டிகள்?

நேற்று மாணவர்களுக்கு நடைபெற்ற நிலையில் , இன்று 11ம் தேதி மாணவியர்களுக்கும் தடகளம், வலைகோல்பந்து, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து ஆகியே போட்டிகளும், 10ம் தேதி மாணவர்களுக்கு கூடைப்பந்து, மட்டைபந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து, கோ&கோ விளையாட்டு போட்டிகளும், 13ம் தேதி மாணவ, மாணவியர்களில் ஒற்றையர் இறகு பந்து போட்டியும், 14ம் தேதி மாணவ, மாணவியர்களுக்கான இரட்டையர் இறகு பந்து போட்டிகளும் நடக்க உள்ளது.

கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வருகிற 17ம் தேதி மற்றும் 18ம் தேதிகளில் போட்டிகள் நடக்க உள்ளது. 17ம் தேதி மாணவர்களுக்கு தடகளம், வலைகோல்பந்து, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கேரம், செஸ், கைப்பந்து, இறகுபந்து ஆகிய போட்டிகளும் 18ம் தேதி கல்லூரி மாணவியர்களுக்கு கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, கபடி, கையுந்துபந்து ஆகிய விளையாட்டு போட்டிகள் நடக்க உள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கலந்து கொள்ளும் வகையில் வருகிற 20ம் தேதியும், பொதுப்பிரிவினர்களில் ஆண்களுக்கு வருகிற 21ம் தேதி தடகளம், இறகுபந்து, மட்டைபந்து, கால்பந்து, கேரம், சிலம்பம், கபடி, கையுந்துபந்து விளையாட்டு போட்டிகளும், 22ம் தேதி ஆண்களுக்கான போட்டிகளும் நடக்க உள்ளது. அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டடிடிகளில் ஆண் பணியாளர்களுக்கு 23ம் தேதி தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கபடி, கேரம், செஸ் போட்டிகளும், 24ம் தேதி பெண் பணியாளர்களுக்கான போட்டிகளும் நடக்க உள்ளது.

The post தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup ,Tamil Nadu Sports Development Authority ,Theni ,Shajivana ,
× RELATED முதலமைச்சர் கோப்பை விளையாட்டு பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் நிறைவு