×

தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

ஈரோடு: தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என என அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக கை சுகாதார தினத்தையொட்டி கை கழுவுதல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, மேயர் நாகரத்தினம், அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தலைமை தாங்கி பேசியதாவது:

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையின்படி 24 சதவீதம் நோயாளிகள் மருத்துவமனையில் ஏற்படும் தொற்றின் மூலம் பாதிக்கப்படுவதாகவும், தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் 52 சதவீதம் பேர் இவ்வகை தொற்றின் மூலம் இறக்கிறார்கள் என்பதும் தெரியவந்துள்ளது. நல்ல முறையில் கை சுகாதாரம் பேணப்பட்டு வந்தால் இந்த இறப்புகளில் 70 சதவீதம் தடுக்க முடியும். தமிழ்நாட்டில் உள்ள 2127 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரே நேரத்தில் மாபெரும் “கை கழுவுதல் நிகழ்ச்சி” நடைபெற்றது. இதில் அனைத்து சுகாதாரப்பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல் (கொடைக்கானல்), ஈரோடு (தாளவாடி, பர்கூர்) சேலம் மற்றும் நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள மலைக்கிராமங்களில் வசிக்கக்கூடிய மக்களின் அனைத்து மருத்துவ தேவைகளும் கிடைக்கின்ற வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புற்றுநோய் அதிகம் பாதித்துள்ள ஈரோடு, ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் புற்றுநோய் சிறப்பு பரிசோதனை முகாம்கள் நடைபெறுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மலைக்கிராமங்கள் உள்ளன. பொதுவாக வட்டார மருத்துவமனையில் மட்டுமே பிரேத பரிசோதனை நிலையம் அமைக்கப்படுகிறது. தாளவாடி பொதுமக்களின் கோரிக்கையின்படி, தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதே போன்ற பர்கூர் மலைப்பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் 3 இடங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவையும் துவக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.முன்னதாக உலக சுகாதார தின உறுதி மொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மனிஷ் சங்கர்ராவ், உதவி ஆட்சியர் (பயிற்சி) பொன்மணி, ஈரோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் வள்ளி, இணை இயக்குநர் அம்பிகா, துணை இயக்குநர்கள் சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post தாளவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரேத பரிசோதனை நிலையம் அமைப்பதற்கு நடவடிக்கை: அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Thalawadi ,Government ,Initial Health Station ,Minister ,Ma. Subramanian ,Erode ,Thalawadi Government Initial Health ,Thalawadi Government ,Dinakaran ,
× RELATED தாளவாடி அருகே வனத்துறை கூண்டில் சிக்கியது சிறுத்தை