×

பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்; பஸ், ரயில்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்: 3 நாட்களில் 5 லட்சம் பேர் பயணம்

சென்னை: பொங்கல் பண்டிகை கொண்டாட பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் பஸ், ரயில்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை பஸ், ரயில்கள், கார், விமானம் என 3 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். வரும் நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். குறிப்பாக சென்னையில் தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் கோவை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் இருந்து வருகிறார்கள்.

அவர்கள் சென்னையில் தங்கி வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏராளமான மாணவர்களும் தங்கி தங்கள் மேல்படிப்பை தொடர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி ஏராளமானோர் அலுவலகம் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ், ரம்ஜான் மற்றும் கோவில் திருவிழாக்கள் உள்ளிட்ட விஷேச தினங்களில் குடும்பத்துடன் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பே, ரயில்களில் டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனால் ரயில்களில் முன்பதிவு தொடங்கிய அன்றே சில நிமிடங்களில் அனைத்து ரயில்களிலும் டிக்கெட் விற்று தீர்ந்தது.

ஒவ்வொரு ரயில்களிலும் 300க்கும் அதிகமானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வருகின்றனர். சில ரயில்களில் இனிமேல் டிக்கெட் புக் பண்ண முடியாது என்று ‘ரெக்கரட்’ வந்து விட்டது. அதே நேரத்தில் நாளை(13ம் தேதி) முதல் பொங்கல் பண்டிகை விடுமுறை தொடங்குகிறது. இடையில் இன்று ஒரு நாள் மட்டும் தான் உள்ளது. இன்று ஒரு நாள் மட்டும் லீவு போட்டால் சுமார் ஒரு வாரம் விடுமுறை வந்து விடும்.

இதனால் இன்று ஒரு நாள் லீவு போட்டு கடந்த வெள்ளிக்கிழமை மாலை முதல் சென்னையில் வசிப்போர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கினர். இதனால் வெள்ளிக்கிழமை அன்று பஸ், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. தொடர்ந்து நேற்று முன்தினம்(சனிக்கிழமை) ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இதனால் சென்னை எழும்பூர், சென்ட்ரல், தாம்பரம் ரயில் நிலையங்களில் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது.

நேற்றும் சென்னையில் இருந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அனைத்து ரயில்களும் ஹவுஸ் புல் ஆகியிருந்தது. நிறைய பேர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தனர். அவர்கள் முன்பதிவில்லா பெட்டியில் தங்களது பயணத்தை தொடங்கினர். பஸ், கார்களிலும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 34,087 பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டது. கூடுதலாக 712 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. இவ்வாறு மொத்தம் 2,804 பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டது.

இதன் மூலம் 1,26,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும் வெள்ளிக்கிழமை முதல் நேற்று முன்தினம் நள்ளிரவு வரை 12 மணி வரை, மொத்தம் 5,510 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,47,180 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அதில் சென்னையிலிருந்து மட்டும் 2,18,900 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும்.

எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்ஆர்.மோகன் ேவண்டுகோள் விடுத்துள்ளார். இதே போல் நேற்றும் அரசு விரைவு பஸ்கள் மூலம் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணத்தை ெதாடர்ந்தனர்.

இதே போல அரசு மற்றும் தனியார் பஸ், ரயில்கள், கார்கள், விமானம் என கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை என 3 நாட்களில் மட்டும் சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டுள்ளதாக செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டாலும் பெரும்பாலான பயணிகள் முதல் விருப்பம் ஆம்னி பஸ்கள் தான் என்று உள்ளது.

இதற்கு காரணம், கிளாம்பாக்கம் சென்று அரசு பஸ்களை பிடிப்பதை விட கோயம்பேட்டில் இருந்தே தனியார் பஸ்களில் பயணிக்க முடியும் என்பதால் ஆம்னி பஸ்களை தேர்வு செய்கிறார்கள். இதனால் சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்களின் கட்டணம் மிகவும் உச்சம் தொட்டு உள்ளது. அதாவது 3 மடங்கு அதிகரித்து உள்ளது.

இந்த கட்டண உயர்வு காரணமாக குடும்பத்துடன் சொந்த ஊருக்கு செல்பவர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். கட்டணத்தை உயர்த்திய ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகையை உற்சாகத்துடனும், மண்ணின் மனத்துடனும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

பொங்கல் பண்டிகைக்காக கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் அலை மோதியது. இவர்கள் உற்சாகத்துடன் புதுத் துணிகள் வாங்கினர். இதனால் தி.நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடைகளில் நேற்றும் கூட்டம் அலை மோதியது. அடுத்து, பொங்கல் பண்டிகை அன்று, அனைத்து வீடுகளிலும் கரும்பு, மஞ்சள் வைத்து கொண்டாடுவார்கள். இதனால் வரும் நாட்களில் கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பொருட்களின் விற்பனை விறுவிறுப்படைய வாய்ப்புள்ளது.

மேலும் வாழைக் கன்று, மண்பானை, வாழை இலை, மாங்கொத்து, தோரணம், பழவகைகள், பூக்கள் உள்ளிட்ட விற்பனையும் களைக்கட்ட ஆரம்பிக்கும். பொங்கல் பண்டிகையின் முதலாம் நாள் போகிப் பண்டிகை நாளை மறுநாள்(புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதனால் தற்போது போகி மேளம் விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதே போல பொங்கல் பண்டிகையையொட்டி பல்வேறு விளையாட்டி போட்டிகளை நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.

* சென்னை டூ நெல்லைக்கு ஆம்னி பஸ்ஸில் ரூ.4,200 டிக்கெட்
சென்னையில் இருந்து நெல்லைக்கு வழக்கமாக ரூ.1,400 முதல் ரூ.1,800 வரை கட்டணம் வசூலிக்கப்படும். தற்போது குறைந்தபட்சம் ரூ.2,000 முதல் அதிகபட்சமாக ரூ.4,200 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கோவைக்கு செல்ல வழக்கமாக ரூ.800 முதல் ரூ.1,200 ரூபாய் வரை இருந்தது. இது இது ரூ.3,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மதுரைக்கு வழக்கமான நாட்களில் ரூ.700 முதல் ரூ.1,100 வரை வசூலிக்கப்படும்.

இது தற்போது ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. நாகர்கோவிலுக்கு வழக்கமான நாட்களில் ரூ.900 ரூபாய் முதல் ரூ.1,500 ரூபாய் வரை தான் டிக்கெட். இது தற்போது ரூ.4200 ஆகும். சென்னையில் இருந்து திருச்சிக்கு வழக்கமான நாட்களில் ரூ.600 முதல் ரூ.900 வரை வசூலிக்கப்படும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த கட்டணம் ரூ.3,000 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Pongal ,Chennai ,
× RELATED சர்வதேச கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த விராட் கோலி!