×

கோடை கால காற்றே…

நன்றி குங்குமம் தோழி

கோடை காலம் முழுமையாக துவங்கவில்லை என்றாலும், அதன் தாக்கம் இப்போது இருந்தே தெரிய ஆரம்பித்துவிட்டது. காலையில் பனி, பகலில் வெயிலின் தாக்கம், இரவு மீண்டும் பனி என்ற நிலை மாறி இனி வரும் மாதங்களில் முழுமையான கோடைக் காற்றினை நாம் அனுபவிக்க ஆரம்பிக்கப் போகிறோம். வருடா வருடம் ஏற்படும் நிகழ்வுதான் என்றாலும், அதனை சமாளிக்க நாம் இன்று முதல் நம்மை தயார்படுத்திக் கொள்வது அவசியம். கோடையில் தமிழகம் மட்டுமில்லாமல், இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வெயில் அதிகரிக்கும். இந்த நிலையில் உணவிலும், சருமத்திலும் நாம் எவ்வாறு பாதுகாப்பாக இருக்கலாம் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

கோடை காலத்தில் செய்ய வேண்டிய முதல் முக்கிய விஷயம், நிறைய தண்ணீர் பருகவேண்டும். அதிகப்படியான நீர்ம உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியம். எலுமிச்சை சாறு, ஆரஞ்சு அல்லது பிற பழச் சாறுகளை அருந்தலாம். தர்பூசணி, கிர்னி போன்ற நீர்ச்சத்துள்ள பழங்களை தினமும் உட்கொள்ளலாம்.

அதிகப்படியான வியர்வை வெளிவருவதால் உப்பு குறைபாடு ஏற்படாமல் இருக்க மோரில் உப்பு போட்டு அருந்துவது நல்லதாகும்.பருத்தி ஆடைகளை அணிவது சிறப்பு. மிக இறுக்கமான ஆடைகளை தவிர்த்து தளர்வான ஆடைகளை அணிய வேண்டும். கறுப்பு மற்றும் பிற அடர்த்தி நிறங்கள் வெப்பத்தை கிரகிக்கும் தன்மை கொண்டதால் அவைகளைத் தவிர்த்து, வெளிர் நிற உடைகளை அணிவது சிறந்தது.

முடிந்தவரை உச்சி வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். வெளியே செல்ல நேர்ந்தால் குடை அல்லது குளிர் கண்ணாடிகளை அணிந்து செல்லுங்கள். குறிப்பாக கோடை காலத்தில் துரித உணவுகள் மற்றும் காரமான உணவினை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.குழந்தைகளுக்கு கோடை காலத்தில் வயிற்றுப்போக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகள் அதிகமாக உள்ளன. எனவே சுத்தமான உணவுகளை உண்ண வேண்டும்.

கோடை காலத்தில், குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்களுக்கும் வியர்வைக் கட்டிகள் மற்றும் வேர்க்குரு அதிகமாக வர வாய்ப்புள்ளது. அவ்வாறு வருவதை தடுக்க தினமும் இரண்டு வேளை குளித்து, உடலை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். மேலும் சருமத்தின் மேல் பவுடர்கள் உபயோகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் அவை வியர்வை துவாரங்களை அடைத்துக் கொண்டு மேலும் பிரச்னைகளை உருவாக்கக்கூடும். அடிக்கடி முகம் கழுவுவது, இரண்டு முறை குளிப்பது போன்றவற்றை கோடை காலம் முழுதும் கடைப்பிடிக்க வேண்டும். வெதுப்பான நீரில் குளிப்பது சிறந்ததாக இருக்கும்.

குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதை இந்த கோடை காலத்தில் தவிர்ப்பது நல்லது. முதியவர்கள், அடிக்கடி சிறுநீர் போவதை தடுக்க தண்ணீர் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பார்கள். ஆனால் வயதின் காரணமாக அவர்களுக்கு தாகம் எடுக்கும் உணர்வு குறைந்து விடும். எனவே நீர்ச்சத்து குறைபாடு, மிக குறைந்த ரத்த அழுத்த பிரச்னை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதால் குறைந்தது 2-3 லிட்டர் நீரை பருக வேண்டும்.

இதயம் மற்றும் சிறுநீரகக் கோளாறு உடைய நோயாளிகள் மருத்துவரின் பரிந்துரைப்படி நீர் அருந்த வேண்டும். நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். கொய்யாப்பழத்தில் அதிக நார்ச்சத்துகள் இருப்பதால் கோடை காலத்தில் அது ஒரு சிறந்த உணவாக இருக்கும். தர்பூசணி போன்ற நீர் பழங்களையும் அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு பசி உணர்வு குறைந்து காணப்படும். எனவே அதற்கு தகுந்த மாதிரி மாத்திரைகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றில், மருத்துவர்களின் பரிந்துரையுடன் மாற்றம் செய்து கொள்ள வேண்டும்.

கடுமையான வெயில் நம்மை சோர்வடைய செய்வதோடு மட்டுமல்லாமல் நம் சரும நலனையும் பல வகைகளில் பாதிக்கிறது. குறிப்பாக வியர்க்குரு மற்றும் உஷ்ணக் கட்டிகள் போன்றவை ஒவ்வொரு கோடைகாலத்திலும் நாம் எதிர்கொள்ளும் பிரச்னைகள். இவை சருமத்தில் தென்படும் சாதாரண புள்ளிகள் என்று ஒதுக்கி தள்ளிவிட முடியாது. அரிப்பு, எரிச்சல் போன்ற தொந்தரவுகளை ஏற்படுத்தக்கூடும். சருமத்தில் எண்ணெய் பசை அதிகம் உள்ள இடங்களில் இவை முளைக்கத் தொடங்குகின்றன. அதனை சமாளிக்க…

*மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும் : குளித்து முடித்த பிறகு சருமத்தில் மாய்ஸ்சரைசர் கிரீம் பயன்படுத்தலாம். சருமத்தில் உள்ள இறந்த செல்களை அப்புறப்படுத்தும்.

*சருமத்தில் ஈரப்பதம் : உங்கள் சருமத்தில் அதிக வியர்வை மற்றும் எண்ணெய் பசை காரணமாக வேர்க்குரு அல்லது உஷ்ணக் கட்டிகள் வரக் கூடும். உடலில் நீர்ச்சத்து குறையும்போது, சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகமாகிறது. அது வியர்வை சுரப்பிகளை அடைப்பதால், கட்டி ஏற்படுகிறது. எண்ணெய் தோய்ந்த சருமத்திற்காகவே தயாரிக்கப்பட்ட லோஷன்களை சருமத்தில் தேய்த்துக் கொள்ளலாம். கற்றாழை, வெள்ளரிக்காய் ஜெல் சேர்க்கப்பட்ட லோஷன்களை பயன்படுத்தலாம்.

*சூடான நீரில் குளிப்பதை தவிர்க்கவும்: சுட்டெரிக்கும் கோடை காலத்தில் நம் உடலை குளுமையாக வைத்துக் கொள்ள காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும், குளிப்பது அவசியமானது. வியர்வை சார்ந்த துர்நாற்றம் மற்றும் இதர அழுக்குகளில் இருந்து சுத்தமாக வைத்துக்கொள்ள குளியல் உதவும். அதே சமயம், வெயிலில் சுடு நீரில் குளிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். நீங்கள் குளிக்கும் தண்ணீர் ஜில்லென்று இருக்க, அதில் கொஞ்சம் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொள்ளலாம். சிறிது வேப்பிலையை சேர்க்கும் பட்சத்தில் அது நுண்ணுயிர்களை எதிர்த்துப் போராடும். வேப்பிலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அதன் கசாயத்தை நீங்கள் குளிக்கும் நீரில் கலந்து கொள்ளலாம்.

தொகுப்பு: பிரியா மோகன்

The post கோடை கால காற்றே… appeared first on Dinakaran.

Tags : kumkum doshi ,Dinakaran ,
× RELATED ஸ்ட்ரீட் ஃபுட்ஸ்!