×

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா!!

வாஷிங்டன் : 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி சென்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் சுபான்ஷு சுக்லா. அமெரிக்காவின் நாசா மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஆதரவுடன் அமெரிக்காவை சேர்ந்த ஆக்ஸியம் ஸ்பேஸ் தனியார் நிறுவனம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ஆக்ஸியம்-4’ திட்டத்தை செயல்படுத்துகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல இந்தியாவின் சுபான்சு சுக்லா, நாசா முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரியின் திபோர் கபு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் சுபான்சு குழுவினர் நேற்று விண்வெளி பயணத்தை தொடங்கினர்.

இந்த நிலையில், நேற்று மதியம் 12.01 மணிக்கு புறப்பட்ட டிராகன் விண்கலம் 28 மணி நேரம் பயணித்து சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் சென்ற டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. முதலில் காந்த ஈர்ப்பு சக்தி மூலம் இணைந்த டிராகன் விண்கலம் பின்னர், கருவிகள் மூலம் முழுமையாக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது. முழுமையாக இணைந்ததால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது டிராகன் விண்கலம். சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள வீரர்களுடன், டிராகன் விண்கலத்தில் உள்ள வீரர்கள் தகவல் பரிமாற்றம் செய்தனர்.

இதையடுத்து டிராகன் விண்கலத்தில் இருந்த சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்களை சர்வதேச விண்வெளி நிலைய வீரர்கள் வரவேற்றனர். 30 நாடுகளுக்கு சொந்தமான 60 ஆராய்ச்சிகளை 4 வீரர்களும் 14 நாட்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்ய உள்ளனர். சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு மேற்கொள்ளவுள்ள சுபான்ஷவின் அனுபவங்கள் ககன்யான் திட்டத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

The post சர்வதேச விண்வெளி நிலையத்தில் கால் பதித்த முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார் சுபான்ஷு சுக்லா!! appeared first on Dinakaran.

Tags : Subhanshu Shukla ,International Space Station ,Washington ,NASA ,Indian Space Research Organization ,ISRO ,Axiom Space ,
× RELATED தவெக-அதிமுக கூட்டணி அமையுமா? செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி