×

உயிரை விட்டு பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்கள்

கரூர் மாவட்டம் குளித்தலை கொல்லம்பட்டறை தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் ஷியாம் சுந்தர்(17). பிளஸ்2 தேர்வு எழுதி, தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். கடந்த 5ம்தேதி இரவு குளித்தலை மகாமாரியம்மன் கோயில் திருவிழாவில் ஷியாம் சுந்தர் நடனமாடியபோது ஏற்பட்ட தகராறில் 4 பேர் கும்பலால் குத்திக்கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் ஷியாம்சுந்தர் (தமிழ்-64, ஆங்கிலம்-48, பொருளியல்-58, வணிகவியல் – 61, கணக்கு பதிவியல் – 43, கம்ப்யூட்டர் அப்ளிகேசன் -77) 351 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே மல்வார்பட்டி ஊராட்சி ஒத்தையூரை சேர்ந்தவர் பாலமுருகன் (47). கரும்பு ஜூஸ் கடைக்காரர். இவரது மனைவி அமராவதி (43). சத்துணவு பணியாளர். இவர்களது மகன் சுகுமார் (18) திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் குரூப் படித்து பொது தேர்வு எழுதி முடித்திருந்தார். ஏப். 6ம் தேதி டூவீலரில் வேடசந்தூர் சந்தைக்கு சென்று காய்கறி வாங்கி விட்டு ஊருக்கு திரும்பும் போது தட்டாரப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ மோதி படுகாயமடைந்து, மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஏப். 21ல் உயிரிழந்தார். நேற்று வெளியான தேர்வு முடிவில், சுகுமார் 443 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்த போதும் அதை காண மகன் இல்லையே என பெற்றோர் கண்ணீர் வடித்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் படுகையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் புண்ணியமூர்த்தி- தமிழ்ச்செல்வியின் மகள் ஆர்த்திகா(17), பாபநாசம் அரசு பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தார். தேர்ச்சி பெற மாட்டோம் என்ற பயத்தில், நேற்றுமுன்தினம் வீட்டில் தனியாக இருந்த ஆர்த்திகா, மாட்டுக்கொட்டகையில் துப்பட்டாவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானதில் தற்கொலை செய்த மாணவி ஆர்த்திகா, (தமிழ்-72, ஆங்கிலம்-48, இயற்பியல்-65, வேதியியல்-78, விலங்கியல்-80, தாவரவியல் 70) 413 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருந்தார். இதையறிந்து பெற்றோர், உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே, போகலூர் ஊராட்சி ஒன்றியம், அரியக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் முகேஷ் (18), சத்திரக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 (பயோமேக்ஸ்) படித்து பொதுத்தேர்வு எழுதி இருந்தார். கடந்த ஏப்ரல் 8ம் தேதி முகேஷ் சத்திரக்குடியில் இருந்து பரமக்குடிக்கு டூவீலரில் சென்றபோது, வாகைக்குளம் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து டூவீலருடன் விழுந்தார். அவர் மீது டிப்பர் லாரி ஏறி இறங்கியது. இதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் முகேஷ் 600க்கு 483 மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். (தமிழ்-81, ஆங்கிலம்-86, இயற்பியல்-81, வேதியியல்-95, கணினி அறிவியல்-80, கணிதம்-60). முகேஷின் தாய் சித்ரா மகனின் மதிப்பெண் சான்றிதழை பார்த்து கதறி அழுதார். முகேஷின் தந்தை கண்ணன், ‘‘எனது மகன் உயிரோடு இருந்திருந்தால் மேற்படிப்பு படித்து கலெக்டராகி இருப்பான்’’ என கண்ணீர் மல்க கூறினார்.

தாய் பெயில்; மகள் பாஸ்

கோவை மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா. இவரது மகள் அனன்யா. இவர் அங்குள்ள மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2-வில் பொருளாதாரம் படித்து வந்தார். அனன்யாவின் தாய் லாவண்யாவிற்கும் பிளஸ் 2 படிக்க ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மகளுடன் சேர்ந்து படித்து வந்துள்ளார். இதில், மகள் பள்ளி மூலமாகவும், தாய் லாவண்யா தனித்தேர்வராகவும் பிளஸ்2 பொதுத்தேர்வை எழுதினர். இத்தேர்வில், மகள் அனன்யா 548 மதிப்பெண் எடுத்துள்ளார். தாய் லாவண்யா 335 மதிப்பெண் பெற்றுள்ளார். லாவண்யா பொருளாதாரம் பாடத்தில் மட்டும் 32 மதிப்பெண் பெற்று தோல்வி அடைந்தார். மற்ற பாடங்களில் தேர்ச்சி அடைந்தார்.

இது குறித்து லாவண்யா கூறுகையில், ‘‘பொதுவாக பெற்றோர்தான் குழந்தைகளுக்கு பாடங்களை சொல்லி கொடுப்பார்கள். ஆனால், எனக்கு எனது மகள்தான் பாடங்களை சொல்லி கொடுத்தாள். இருவரும் ஒரே நேரத்தில் தேர்வு எழுதிய நிலையில், எனது மகள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளார். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு பாடத்தில் மட்டுமே தோல்வி அடைந்து உள்ளேன். இதனை மறுத்தேர்வில் எழுதி வெற்றி பெறுவேன். பின்னர், எனது மகளுடன் சேர்ந்து மேல்படிப்பு படிப்பேன்’’ என்றார். அனன்யா கூறுகையில், ‘‘எனது தாய் தோல்வி தழுவினாலும் அவர் மறுத்தேர்வில் தேர்ச்சி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதற்கு நான் அவருக்கு துணையாக இருப்பேன்’’ என்றார்.

பஸ்சை விரட்டிச்சென்று தேர்வு எழுதிய மாணவி 437 மதிப்பெண்கள்; திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கொத்தக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன் (45). இவரது மகள் மாணவி சுஹாசினி (17). இவர் ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் 25ம் தேதி பிளஸ் 2 இறுதி தேர்வு எழுத மாணவி சுஹாசினி கொத்தகோட்டை பேருந்து நிறுத்தத்தில் பஸ்சுக்கு காத்திருந்தார்.
வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வரை செல்லும் அரசு டவுன் பஸ் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சலிட்டபடி பஸ்சை பின்தொடர்ந்து ஓடிச்சென்றார். பொதுமக்களும் கூச்சலிடவே சிறிது தூரத்தில் பஸ் நின்றது. பின்னர், மாணவி சுஹாசினி அந்த பஸ்சில் ஏறி தேர்வு எழுத சென்றார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பஸ் டிரைவர் முனிராஜ் சஸ்பெண்டும், தற்காலிக கண்டக்டர் அசோக்குமார் டிஸ்மிஸ்சும் செய்யப்பட்டனர். இந்நிலையில் அந்த மாணவி சுஹாசினி 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். மாணவி சுஹாசினி கூறுகையில், `எனது தாய் இறந்து 7 ஆண்டுகளான நிலையில், எனது தந்தை கூலி வேலை செய்து வருமானத்தில் குடும்பத்தை கவனித்து வருகிறார். நான் மேற்கொண்டு மருத்துவ துறை சார்ந்த உயர்கல்வி படிப்பதற்கு ஆர்வமாக உள்ளேன். அரசு எனது மேல்படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும் என்றார்.

 

The post உயிரை விட்டு பிளஸ் 2 தேர்வில் சாதித்த மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Shyam Sundar ,Ravichandran ,Kollampattara Street, Kulithalai, Karur district ,Kulithalai Mahamariamman Temple festival… ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்